நெடுந்துயர் அகன்றேயோடும்
எம் . ஜெயராமசர்மா, அவுஸ்திரேலியா
வான்முகில் வளாது பெய்கவென!
வாயார வாழ்த்துப் பாடி!
வையத்தில் விழாக்கள் தோறும்!
மனமாரப் பாடி நிற்போம்!
வாழ்த்தினைக் கேட்டு விட்டு!
வானுறை தேவர் எல்லாம்!
வையகம் வாழ்க எண்ணி!
மாமழை பொழியச் செய்வர்!
வரண்டு நிற்கும் பூமியெல்லாம்!
வான் மழையக் கண்டுவிட்டால்!
மகிழ்வு கொண்டு வானோக்கி!
மனதார நன்றி சொல்லும்!
வயல்நிறையும் குளம் நிறையும்!
வயலுழுவார் மனம் மகிழும்!
தினமும் மழை பெய்கவென!
தீர்மானம் எடுத்தும் நிற்பார்!
அகமகிழ வைக்கும் மழை!
ஆபத்தைத் தந்த திப்போ!
அனைவருமே மழை பார்த்து!
அலமந்தே நின்று விட்டார்!
பார்க்கு இடம் எல்லாம்!
பாய்ந்தோடும் வெள்ள மதால்!
பரி தவித்து நிற்கின்றார்!
பல இடத்தில் மக்களெலாம்!
நீர் பெருகி நிற்பதனால்!
நிவாரணப் பணிகள் எல்லாம்!
யார் செய்வார் எனவேங்கி!
நாளும் அவர் அழுகின்றார்!
மேடைகளில் ஏறி நின்று!
வாய் கிழியப் பேசியவர்கள்!
அறிக்கைகளை விட்டு விட்டு!
அவர் பாட்டில் இருக்கின்றார்!
ஆளுகின்ற கட்சி தனை!
அனுதினமும் திட்டி நிற்கும்!
எதிர்க் கட்சிக் காரரெலாம்!
இதை வைத்தே திட்டுகின்றார்!
எதிர்க் கட்சித் திட்டினுக்கு!
ஏற்ற பதில் சொல்லவதிலே!
இதைச் சாட்டாய் கொண்டுள்ளார்!
ஏறி நிற்கும் அரியணையார்!
வாதங்கள் புரிவதிலும் வழக்குகள் இடுவதிலும்!
பேதங்கள் யாதுமின்றி பேயாட்டும் போடுகின்ற!
சாதனைச் செம்மல்கள் சராசரி மக்களது!
வேதனைகள் புரியாது விடுகின்றார் அறிக்கைமழை !!
வடிகால்கள் அமைக்கவென வந்திருக்கும் பணமெல்லாம்!
வட்டாட்சி மாவட்டம் மந்திரிகள் வசமாகும்!
மழைவந்த பின்னாலே மழைவெள்ளம் தனைப்பார்த்து!
மந்திரிகள் மற்றவர்கள் மாடிநின்று படமெடுப்பார் !!
அவர்களது தொலைக்காட்சி அதைக்காட்டிப் பணமாக்கும்!
அவதிப்படும் மக்கள்தமை ஆருமே பார்க்கார்கள்!
அவர்நிலையை பெரிதாக்கி அனுதாபம் தேடியவர்!
அவர்பொருட்டு வரும்நிதியை அமைதியாய் சுருட்டிநிற்பார் !!
வெள்ளப் பெருக்குக்குக்காய் வேதனையாய் இருப்பதுபோல்!
வெள்ளை வேட்டிசட்டையுடன் விதம்விதமாய் கதைவிடுவார்!
உள்ளமெலாம் அழுதபடி ஓர்வழியும் புரியாமல்!
வெள்ளத்தில் அகப்பட்டார் விழிபிதுங்கி நிற்பார்கள் !!
மாடிவீட்டில் வசதியுடன் மனைவி மக்களோ டிருப்பார்!
மாவெள்ளப் பாதிப்பால் மகிழ்வையெல்லாம் இழந்துநிற்கும்!
மக்கள்தமை மனங்கொள்ளா மாமனிதராய் இருப்பர்!
மக்களெலாம் வெள்ளத்தில் மரணத்தை அணைத்துநிற்பார் !!
பொறியியல் படித்தவர்கள் பொறுப்புதனை அறிந்தவர்கள்!
நெறிமுறையில் செயல்பட்டால் நீரழிவு வந்திடுமா!
அறநெறியைக் கடைப்பிடித்து ஆட்சிதனை ஆற்றிவிடின்!
அநியாய வெள்ளமது அனைவரையும் அழிக்காதே !!
குடிகளைக் காக்கவேண்டும் குறையெலாம் போக்கவேண்டும்!
நடித்திடும் செய்கைதன்னை நாட்டிலே அகற்றவேண்டும்!
அரசியல் செய்கின்றாரும் அதிகாரம் செய்கின்றாரும்!
நினைவெலாம் தூய்மைபெற்றால் நெடுந்துயர் அகன்றேயோடும்