தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

ஊசலாட்டம்

ப.மதியழகன்

மனவெளிக்குள்
ஏதோவொரு வெற்றிடம்
எதைப் போட்டு
நிரப்புவது அதை

இரு விளிம்பு
நிலைகளுக்கு மத்தியில்
என் மனம் ஊசலாடுகிறது

தவறுகளைத் திருத்திக் கொள்ள
கடந்த காலத்தில் நுழைய முடிந்தால்
நன்றாக இருந்திருக்கும்

காலில் முள் தைத்தாலும்
கண்கள் தான் அழுகிறது

சாலையோரத்தில் குடியிருப்பவர்களுக்கு
வானமே கூரையாக அமைகிறது

நேற்று தந்த முத்தத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை

உன்னைக் காணும் போதெல்லாம்
ஆனந்தத்தில் கண்கள்
பனிக்கிறது

ஒவ்வொருத்தருடைய முடிவும்
யாரோ ஒருவருக்காக நெருடலாக
அமைகிறது

உறக்கத்தில் மனக் குப்பைகள்
எரிகின்றன
உள்ளக் கோப்பை காலியாகிறது

சமீபத்திய கவிதை

பாவம் ஏது செய்திட்டோம்?

கலைமகன் பைரூஸ்

ஏழ்மையொடு ஒட்டிப் பிறந்திட்டோம்
ஏற்றமிலாச் சாதியில் பிறந்திட்டோம்
கூழின்றி குடும்பமே நட்டாற்றி லிருப்பதனால்
கொடுமைகள் பலசுமந்து துன்பத்தில்நாம்!

கற்றுத்தேர்ந்திட பள்ளிசென்றிட ஆசை
கயவர்கண்கள் குருடனதால் நாமிங்கே
முற்றும் துறந்துமுட்களிடை யேயின்று
முனிந்துமுனிந்து வேலைசெய்கின்றோம்!

கொடைகொடுக்கும் வள்ளல்கள் உண்டாமிங்கு
கேள்வியுற்றோம் செவிகளுக்குள் – இடியெனவே
மடைதிறந்த வெள்ளமென விழிநீரெங்கும்
மரித்துயிர்த்து மரிக்கின்றோம் நாமிங்கு!

கல்லுடைத்தும் கல்சுமந்தும் பால்யர்நாம்
கனிவின்றிய சொற்களுடு வாழ்வதற்காய்
சொல்லுகின்ற வன்செயல்கள் செய்கின்றோமே
சொர்க்கத்தில் உறங்குகின்றார் உயர்சாதி!!

மானுடநீதி பேசுகின்ற ஊழைகேட்டோம்
மனிதமின்றிய மானுடத்தின் அழகும்கண்டோம்
ஊனின்றி உடையின்றி தவிப்பதாலேநாம்
உண்டியொரு கவழத்திற்காய் மாடாயின்று!

எமக்கென ஒருதின மெடுக்கின்றார்
ஏற்றமிலா எமைக் காணாதிருக்கின்றார்
சுமக்கின்ற சுமைகளால் சிறுமைநீங்கி
சயனமின்றி யொருபோதும் அழுக்காய்நாம்!

சொப்பனங்கள் உண்டு சிறுவ ரெமக்குள்ளும்
சென்றிட வழியின்றி முட்களுக்குள்நாம்
நப்பாசையிலா சிறுவர்நாம் என்றபோதும்
நகைகாட்டா மானுடமென்ன மானுடமோ?

அழகான மேனியெங்கும் அசிங்கமாக –இவர்
அழுக்குகளே உதிரமீதும் ஓடுதிங்கு
பழக்கமிலை பணிகளிவர் என்றபோதும்
பணிந்தேசெய்கின்றோம் – பிறந்த்துதப்பா?

வடிகின்ற வியர்வையெங்கும் கொதிநீராக
வன்மனது தருகின்ற கொடுமையாலே
துடிக்கின்றோம் அனலிடை புழுவெனநாம்
தூங்குகின்ற தூயவர்கள் எங்கே? பாரும்!!

நிலைகெட்ட வலியாரின் கண்களெங்கே?
நிலைகெட்டுப் போகின்றோம் சிறுவர்நாமே
விலைபோகும் மனிதத்தின் விலையிறக்கி
வித்திடுங்கள் “சிறுவர்” விதைகளெங்கும்

குறிப்பில்லாக் கவிதை (random)

வசந்தம்

தேவஅபிரா

பூமியின் ஆழத்தில் இருந்து காதல் !
நெடுமரங்களின் வேர்களுள் புகுந்து மேலெழுந்து !
வசந்தத் துளிர்களின் நடுவில் மலர்களாகிறது. !
வேனிலின் அசைவற்ற மௌனத்தில், !
வெம்மையில் !
ஒவ்வொன்றாக விழுகின்றன மலர்கள் !
நிலம் மறைகிறது. !
ஏக்கம் கடலில் ஆவியாகி !
விசும்பின் உயரத்தில் திரண்டு !
விம்மி வெடிக்கிறது. !
நெடுமூச்செறிந்து ஆவிபடரும் மண்ணின் !
ஆன்மா அடங்குமோ! !
துளிகள் சொட்டும் காலையில் !
ஒற்றைக் குயிலின் !
தீராக் குரலிலும் சிதைகிறது !
வசந்தம். !
சித்திரை - 1995 !
தேவஅபிரா puvanendran@home.nl !
!
***** !
வெளிவர இருக்கும் இருண்ட காலத்தில் தொடங்கிய என் கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன