தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நகர்வு!

கலாநிதி தனபாலன்
நகரும் போதுதான்!
நதி அழகு!
நடக்கும் போதுதான்!
வாழ்க்கை அழகு!
நடந்தேன் நடந்தேன்…!
ஊரை விட்டு !
உறவை விட்டு!
ஒரு நகர்வு!
நடந்தேன் நடந்தேன்!
ஈழம் விட்டு !
இருந்த சொந்தம் விட்டு!
இன்னொரு நகர்வு!
நடந்து கழைத்து!
நின்று நினைத்துப்!
பெருமூச்சு விட்டேன்!
அப்போது தெரிந்தது!
வாழ்வின் அருமை!
அதற்குள் அடுத்தடுத்த நகர்வுகள்!
காலநதியில் கால்பதித்து!
கல்வி தேவதையோடு!
கைகோர்த்து!
கனதூரம் நடந்தேன்!
ஓரமாய் ஒளிர்ந்தது!
ஒரு புதிய விடியல்!
விடியலைக்கண்டு!
வட்டம் விட்டு!
வெளியே வந்து பார்த்தேன்!
வாழ்க்கை வனப்புடையதாயிற்று!
நடக்கும் போதுதானே!
வாழ்க்கை அழகு!
நம்பினேன் நடந்தேன்!
நடந்தது வாழ்க்கை!
நலமாக.!

நினைவுகளின் பயணம்

தருணா. கே
நம் காதல் கதையின் கடைசி பக்கம் இது
எதிர்பாராம் வந்த காதல் புரியாதது
முதலில் நீ சொல்வதை இல்லை நான் சொல்வதை ஏதோ நம்மை தடுக்கிறது

நும் காதல் ஒரு முடியாத காவியம்
புரிந்துகொள்ள முடியாத ஓவியம்

நான் யாரோ போல் உன்னை பார்க்க
ஏதோ சொல்ல நெஞ்சம் ஏங்க
வார்த்தை எல்லாம் வாயில் தேங்கா
மௌனமாக கடந்து போக

சொல்லாத வார்த்தைகள் இதயத்தில் உருளுதே
தீராத எண்ணங்கள் என்னில் நிறையுதே

நீ வேண்டாம் என்று தோணும்போது கண்முன் நிற்கிறாய்
மறப்பேன் என்று எண்ணும்போது நினைவில் வருகிறாய்

நாம் சேர்ந்து சென்ற நாட்கள் எல்லாம் கண்முன் தெரியுதே
கைகோர்த்து கொண்டு பேசறியதெல்லாம் காதில் ஒலிக்கிறதே

நீ கொடுத்த வெப்பம் என்றும் என்னுடன் இருக்கும்
நான் மறைத்த வெட்கம் என்றும் உன்னுடன் இருக்கும்

இது எப்போது முடியும் முடிவே இல்ல இந்த நினைவுகளின் பயணம்....

ஜன்னல்

செ.இராமதனவந்தினி
என் வீட்டு ஜன்னலுக்குள்
சிறைபட்ட
நிலவை விடுவிக்க
சூரியனைத் தவிர வேறு
யாரால் முடியும்???

திரைகள்

தென்றல்.இரா.சம்பத்
கலப்புத் திருமணம் பற்றி!
கருத்தாழத்தோடு !
மேடையில் முழங்கிய பெரியார்வாதி....!
வீட்டிற்க்கு வந்தும் விடவில்லை!
பொறிந்து தள்ளினான்!
மகளைப்பார்த்து....!
நாமென்ன சாதி...!
ஆவனென்ன சாதி...!
இந்த கல்யாணம் நடக்காதென்று...!

என் சுவாசம்!

கோவை. மு. சரளாதேவி
உன் வருடலின் சிலிர்ப்பில்!
சிவந்துபோகிறேன் சிலநேரம்!
எத்தனைபேர் என் அருகில் இருந்தாலும்!
நீ இல்லாத அந்த நிமிடங்கள் சூனியமாய் !!
மெல்ல என் தலை கோதி!
மேனி முழுதும் வியாபித்திருந்த கணங்கள்!
மெல்ல சுயம் இழந்தேன்!
சுற்றம் அறியாமல் !!
என் தனிமையின் துணையாய்!
என்னை தாலாட்டும் அன்னையாய்!
என் தாகம் தணிக்கும் தண்ணீராய்!
எனக்குள் நிறைத்து இருகிறாய் !!
உனக்கான எதிர்பார்ப்பிலேயே!
கரைந்துபோகிறேன்!
ஒருகணம் நீ இல்லை என்றாலும்!
என் உயிர்பிரியும்

கறை

காருண்யா கதிர்வேற்பிள்ளை
கால வெள்ளம்
        கவலை அழுக்கை
கழு‌விச்  செல்லினும்

கண்ணீரும்
            கரைக்க இயலா
    கறைகளை என் செய்ய ..

எப்படி சொல்லுவேன்

லக்ஷ்மண் பிரபா
ஆறு மாதங்கள் கண் இமைப்பதற்குள்
கடந்தன என சுற்றம் சொல்ல
எனக்கு அது ஆறு வருடம் போல்
ஊர்ந்ததை எப்படி சொல்லுவேன்

அனைவரையும் சேர்த்துவெச்ச அழகுநாச்சி நம்மை
ஆறு மாசம் பிரிச்ச கோவம்
இன்னும் எனக்கிருக்குனு, எப்படி சொல்லுவேன்

நேருல பாக்கல, கடிதமும் பகிரல
உன் குரல் கூட கேட்டதில்ல,
உன் மீது காதல் வசப்பட்டேனு, எப்படி சொல்லுவேன்

பரிசம் போடல , மெட்டி மாட்டல,
தாலி இன்னும் ஏறல, என் மனக்கூட்டில்
நீ கணவனான கதை
எப்படிடா வெளியே சொல்லுவேன் ???

காதல்!

ராம்ப்ரசாத், சென்னை
நேற்று மாலையே!
முடித்து வைத்த‌!
வீட்டுப்பாடங்களை!
சுக்குநூறாய் கிழித்தெரிந்துவிட்டு!
வகுப்பறைவிட்டு வெளியேறுகிறேன்!
ஏற்கனவே வெளியேறிவிட்ட!
உன்னை!
தனிமையில் சந்திப்பதற்காக...!
!
எனக்கு மிகவும் பரிச்சயமான‌!
கல்லூரியில்,!
அதிகம் பரிச்சயமில்லாத‌!
உன்னுடன் பகிர்ந்துகொள்ள,!
மிகவும் பரிச்சயமான‌!
என் தாய்மொழியிலோர்!
கவிதை கிட்டாவிட்டாலும்!
குறைந்தபட்சம்!
நான்கைந்து வார்த்தைகளாவது!
கிட்டியிருக்கலாம்...!
!
தயங்கி வேர்த்தோதுங்கிய‌!
சில மணித்துளிகளில்!
உன்னைச்சூழ்ந்துகொண்ட‌!
தோழிகளுடன் நீ!
கதைபல கதைப்பதைப்பார்த்து!
சற்றே தள்ளி நின்று!
நடத்திக்கொண்டிருந்தேன்!
மனதிற்க்குள் ஓர் விவாதம்!
'ரோஜாப்பூவுக்குப் பேச‌!
யார் கற்றுக்கொடுத்தது'

பூட்டுகளும் சாவிகளும்!

ராம்ப்ரசாத், சென்னை
உணர்வுகளுடன் நடைபழகுகையில்!
நட்பின் கதவுகள்!
அவசரமாய் தட்டப்பட்டு!
விடுகின்றன...!
மனப்பூட்டுகளைப் பொறுத்தே!
சாவிகள் அமையும்!
என்பது நிதர்சனம்...!
எல்லா பூட்டுகளுக்குமான‌!
சாவிகள் ஒன்றாகவே!
இருக்கவேண்டுமென்பதில்லை...!
ஆயினும், கள்ள சாவிகளை!
அதிகமாய்க் கள்வர்களிடமே!
எதிர்பார்க்கலாம்...!
சில நேரங்களில்!
சாவிகளுக்கும் பூட்டுக்கள்!
தேவைப்படவே செய்கின்றன

நமக்கான நாட்கள்....

செ.இராமதனவந்தினி
சில நாட்கள்
நமக்கே நமக்கானவை
சிறிதும் குற்ற உணர்வு
இல்லாமல்
பிள்ளைகள் எழுந்தாலும்
நம் தூக்கத்தை நீட்டிக் கொண்டு
சூரியனை தாமதாக
வர சொல்லும் நாட்கள்.....
அடுக்களையில் பாத்திரங்கள்
நிரம்பி வழிந்தாலும்
பிடித்த சினிமாவை ரசித்து
நம்மை நாமே நிரப்பிக் கொள்ளும் நாட்கள்...
வீட்டின் மூலையில்
அடைந்திருக்கும் ஒட்டடையை
நீக்கி வீட்டை பரிசுத்தம் ஆக்கும் முன்
நம்முள் வெகுநாளாய்
மறைந்து கிடக்கும்
சின்னஞ்சிறு ஆசைகளை
தூசி தட்டும் நாட்கள்....
சிறந்த அம்மாவுக்கான
விருதை கொடுக்கும் முன்
உலகம் கேட்க வேண்டிய
ஒரு வினா
யாரிடம் விருதை கொடுப்பது?
வெற்றிடத்திடமா அல்லது அவளிடமா??
வெற்றிடம் அவளாக மாறுவது
அந்த நாட்கள் தான்‌.......