தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

தவளை ஆண்டு 2008

ஜான் பீ. பெனடிக்ட்

தந்தை கையைப் பிடித்துக் கொண்டு!
தடுக்கிவிடும் நெல் வரப்பு மீது!
தத்தித் தத்தி நான் நடந்த போது!
தாவித் தாவிக் குதித்த தவளை!
பாசி படர்ந்த குட்டைக்குள்ளே!
பச்சை நிறத்தில் நீந்தும் தவளை!
பாவி மனுஷன் சூப்பு வைக்க!
பரிதாபமாய் பலியாகும் தவளை!
தூண்டிலில் உணவாய் உயிர்விடும் தவளை!
பாம்பின் பசிக்கு புசியாகும் தவளை!
மனம் கல்லாய்ப் போன மனிதருக்கும்!
மருந்தாய் இருந்திட மரித்திடும் தவளை!
அந்தி மழை பொழியும் போதும்!
அடை மழை வழியும் போதும்!
அல்லும் பகலும் பேதமின்றி!
அயராமல் கத்தி மகிழும் தவளை!
அழிந்து வருதாம் அந்தத் தவளையினம்!
அக்கறை கொண்ட ஐநா சபை!
ஆண்டு 2008-ஐ தவளை ஆண்டாய்!
அறிவிப்புச் செய்திட்ட ஆறுதலோடு!
ஆரம்பமாகிற்று அடுத்ததோர் ஆண்டு!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

சமீபத்திய கவிதை

மனப்பறவை

புதியமாதவி

நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில்
துடிக்கிறது

ரத்தம் கசிய கசிய
சன்னல் கம்பிகளின்
இரும்பு பிடிகளுக்கு
நடுவில்
கதவுகள் திறக்க
காத்திருக்கிறது

போதும் போதும்
பறந்தது போதுமென்று
தடவிக்கொடுக்கிறது
காற்று.

சிறைகளை உடைத்து
வெளியில் வந்துவிடு
இரவோடு இரவாக
அழைக்கிறது
நிலவு.

ஆகாயமே சிறையாகிப் போனதால்
சிறகுகளை எரித்த
நெருப்பின் வெளிச்சத்தில்
கூண்டுக்குள் இடம்தேடும்
மனப்பறவை

குறிப்பில்லாக் கவிதை (random)

கலர்ப் பாம்பு

டீன்கபூர்

கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி!
குடி நுகரும் ஊருக்குள்!
வாவிக்குள் வந்த மாதிரி ஊர்ச் சல்லுக்குள்!
ஜனநாயகம்!
காயாத கருவாட்டில் புழுக்கும்!
தலைக்குள் இருந்து வண்டுகள் உமிழும்.!
பச்சைப் பாம்பு ஒன்று!
மனிதாபிமானத்தின் இறக்கை விரிக்கும்!
வறண்ட நாக்கு மக்களுக்கு பேசும்!
எதிர்கால நாற்காலி முதிரையில் இருக்க!
சுனாமிக்கு மூக்குத்தி குத்தி விழா காணுகிறது.!
நீலமாய் ஒரு பாம்பு!
சுனாமியால் நிரம்பிய வெளிநாட்டுச் சுரியை!
நிரப்பிக் காண்பித்து!
தெற்கில் அது சட்டை கழற்றுகிறது!
காட்டையும் களனியாய்க் காட்டுகிறது!
வடக்கையும் கிழக்கையும் என்னில் போர்த்துவேன் என்று!
கூதலைக் காட்டுகிறது.!
சிவப்பாய் இன்னொன்று!
கண்களை உருட்டும்!
முடியைக் கோதும்!
பிணம் இனித் தின்னேன் என உண்மையாக்கும்!
உழைப்பாளியைத் தீண்டேன் என ழுழங்கும்!
ஏழைகளின் கண்ணீர் உவர்த்தலாகாது எண்ணுகிறது.!
இப்பாம்பு!
அலகொன்றை எடுத்து சிலம்பாடும்!
தனியிடம் ஒன்றுக்கு!
இனிப்பூட்டி அழைத்து அழைத்து!
மூன்றாம் கடலிலிருந்து சீறுகிறது!
தேசத்தை வெளிச்சப்படுத்திய !
தாரகையின் மொழியில்!
சுனாமியின் முடிபிடுங்க வந்திறங்கும்!
சுனாமியின் நகம் பிடுங்க வந்திறங்கும்!
ஊருக்குள்!
மீண்டும் நாதியற்றவர்களைக் கொத்த!
எல்லா வண்ணப் பாம்புகளும்!
சுனாமி பூசிய கரியுடன் கியூவில்?!
ஜனாநாயகம் மணத்த தேங்காய்ப்பூ.!