நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்!
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்!
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்!
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்!
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்!
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து!
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்!
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!!
தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின் !
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு!
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்!
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்!
பழகினோம் சிரித்தோம் களித்தோம்!
இன்னும் பிறந்திராத நம்!
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்!
தும்பிகளுடன் விளையாடியும் !
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்!
சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின் !
அச்சிறு பயணம் முடித்து !
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்!
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில் !
அமைந்திருந்ததை அறிந்தோம்!
அதன்பின், உன்னுடையது என்னுடையதென!
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில் !
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்!
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்!
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்!
மீண்டும் இணையுமந்த பாதைதேடியே!
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் !
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து !
அர்த்தமாய் புன்னகைக்கிறன காட்டுப்பூக்கள்

கோகுலன்