தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என்னைப் போல ஒருவன்

நீச்சல்காரன்
புதிய மடி கிடைத்தது!
புகுந்தோடி தவழ்ந்தேன்!
உயரமான தோள்கள் கிடைத்தது!
உலகை ஏறிப் பார்த்தேன்!
பாச விரல்கள் கிடைத்தது!
பற்றிக்கொண்டேன் பயமின்றி!
பைசா காசுகள் கிடைத்தது!
பையுடன் செலவழித்தேன்!
விழாகாலத்தில் சொக்காய் கிடைத்தது!
விடியவிடிய போட்டுக் கொண்டேன்!
பணவாசனையால் சீட்டுகிடைத்தது!
படித்துப் பட்டம் வாங்கினேன்!
வேலைக்கு தேவை வந்தது!
வெளிநாட்டு குழுமத்தில் சேர்ந்தேன்!
மணவறை யோகம் வந்தது!
மணாலனாக மாலையிட்டேன்!
பாசம் வசதிக்கு இடர்தந்தது!
பணம்கட்டி முதியோரில்லத்தில்விட்டேன்!
எனக்கென்று புதுவுறவுகிடைத்தது!
உத்தமப்புத்திரனுக்கு தந்தையானேன்!
அவனுக்கும் பாசம் இடருதோ?!
தாத்தாப்பாட்டியின் காப்பக முகவரிக் கேட்கிறான்

மரம்

சுதர்சன் கா
சிலுவையில் அறைந்த இறைவனும் எழுந்து
உயிர்பெற்று வந்தது ஒரு தடவை!
கோடரி துண்டாடி மனிதர்கள் கொண்டாட
பலமுறை துளிர்க்குது மரக்கடவுள்!

பஞ்சம் பிழைக்க வந்த கொஞ்சும் குருவியிடம்!
கனியை லஞ்சமாக்கி விதையை விருட்சமாக்கும்!
விவேக ஆலமரம் பாரதத்தின் தேசமரம்!

உதிக்கின்ற ஆதவனின் உஷ்ணத்தை உள்வாங்கி
உழைக்கின்ற மக்களுக்கு நிழல்கொடுக்கும் புங்கைமரம்!

வாழ வழிவகுக்கும் தந்தையின் சுடுசொல்போல்!
ருசியில் கசந்தாலும் மருந்தாகும் வேப்பமரம்!

கால்வெட்டிக் கொலைசெய்தும் கழுவேற்றி வதம்செய்தும்
வரவேற்று மங்களமாய் வாழவைக்கும் வாழை மரம்!

மேற்குத் தொடர்மலையின் வேகக் காற்றினையே
தேகத்தால் அரணமைத்து மேகமாக்கும் மலை மரங்கள்!

வழங்கவே உருவெடுத்த இயற்கையின் வளமே!
பாரி காரி ஓரிக்கும் இல்லையுன் குணமே!
மரமே! மரமே! மரமே! மரமே!
மனமெங்கும் மணக்கட்டும் நின்புகழ் தினமே!

என்னைப் புதைக்க

ரா. சொர்ண குமார்
நிலத்தை உழுதிருந்தால்!
பூவை விதைக்கலாம்....!
பூவை உழுதிருக்கிறானே!
புத்திசாலி பிரம்மன்...!
எதற்கு அதற்குள்!
என்னைப் புதைக்கவா?!

எது அழகு

ரா. சொர்ண குமார்
எது அழகு ?!
'இந்த பூ அழகு'!
-என்கிறாய்!
பூவைக் காட்டி...!
அந்த பூவும்!
இதைதான் சொன்னது!
உன்னை காட்டி...!!

அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!

சுந்தரகுமார் கோவிந்தசாமி
முக்கனியின் சுவையே
முழுமதியின் ஒளியே
அந்தியில் பூக்கும் அல்லியே
அஸ்ஸாம் தேயிலையின் நறுமணமே!

கண்ணெதிரே தோன்றி
கணநேரத்தில் மறைந்தாயே கனவிலே கூட!
கனவிலேனும் என்னருகே இருந்திட என்ன தயக்கம்?

கணினி மொழி கற்ற தேனே
காதல் மொழி கற்க மறந்ததேனோ? (மறுப்பதேனோ?)

உன்
ஓரவிழிப் பார்வையிலே
ஓராயிரம் அர்த்தங்கள் !
புரியாத புதிர்களா?
விடுபடாத விடுகதைகளா?
புரியவில்லை என் சிற்றறிவுக்கு!

உடைந்த அப்பளமாய் உருக்குலைந்தது
என் நெஞ்சம் உன்னை காணாத வேளையில்!

இனியும் பொறுத்திடேன் இறைவா!

இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...!

தூரத்தில் பாடல் ஒலித்திட,
ஒலித்த திசை நோக்கி ஓடினேன் எதையும் தாங்கும் இதயம் வேண்டி !

புலம்பெயர் வாழ்வு

கலாநிதி தனபாலன்
புலம்பெயர் தேசத்தில் புண்பட்டு வாழ்கின்ற !
மனப்புழுக்கறை மனிதர்கள் !
இவர்களில் இருரகம் !
உள்ளே வெளியே !
உள்ளொன்று வெளியொன்று !
இதற்கு உள்ளும் பலரகம் !
வெளியே… !
வெளியே வேடம் தரித்து !
வெற்றியின் மனிதராய் !
விடியலின் விரைவுத்தூண்களாய்!
வித்தகம் பேசுவோர் !
விடியலை விரும்பிடா !
விலாசம் விரும்பிகள் !
உள்ளே… !
உறவுகள் இன்றியே உளச்சலுறுபவர் !
தோல்வியைக்கண்டுமே துவண்டு போனவர் !
வாலிபம் தன்னையே வரையறை செய்து !
உடலை வருத்தி உழைப்பவர் !
சங்கமம் இன்றியே சஞ்சலப்படுபவர் !
நாளைய வாழ்வினை நம்பியே !
நிசத்தினை தொலைத்து நிழல்களாய் வாழ்பவர் !
நிமித்திகர் சொன்னதை நிசமென நம்புவோர் !
புத்திமானாயினும் புல்லரித்துப்போபவர் !
புரட்டினை நம்பியே-கற்பனைப்புரவியிலேறியே மனதினுள் !
புரவலனாகவே பாவனை கொள்ளுவார்-தம் !
புராதனம் பேசியே பொய்மையைப் புழுகுவார் !
காலம் போனபின் !
புரோகிதன் சொன்னது பொய்யெனக்கண்டுமே !
புண்ணியாகவாசனஞ்செய்து புதுப்பித்துத்தொடங்குவார் இவர் !
புண்பட்டு வாழ்கின்ற !
மனப்புழுக்கறை மனிதர்காள்! !

புத்தனின் புதுமொழி

கலாநிதி தனபாலன்
நேற்று !
சாந்தன் பிறந்து !
சாத்வீகம் பகின்றான்-அவன் !
போதனை வழியால் !
பௌத்தம் பிறந்தது !
இன்று !
பௌத்தத்தின் !
பாதுகாவலர் தாமெனச் !
சொல்லிய சிங்களம் !
கௌதமன் !
கண்ட கனவை !
கடந்து போகும் !
ஒவ்வொரு கணங்களிலும் !
கங்கணம் கட்டியே !
கலைத்த சிங்களம் !
குருதியும் அகந்தையும் !
கொடூரமும் கொலைவெறியும் !
கொண்டு நின்ற சிங்களம் !
சித்தார்த்தனின் !
சிந்தனைச் சிறகுகள் !
தாமெனச்சொன்னது !
சிரிக்க முடியவில்லை! !
சிங்களத்திற்கு !
புத்தனும் போதிமரமும் !
புத்தகமாயின !
புரிந்துகொள்ளமுடியவில்லை! !
நாளை !
மீண்டும் !
புத்தன் பிறந்தால் !
புழுவாய் துடித்து !
புழுதியில் புரண்டு !
புதைகுழி புகுவான் !
ஒருக்கால் !
புதைகுழி விட்டுப் !
புத்தன் எழுந்தால் !
போதனை செய்யான் !
புதுமொழி பகர்வான் !
புறப்படு போருக்கென்று! !

சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்

மன்னார் அமுதன்
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்!
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை!
காற்றுப் புக மூக்கினிற்குக் கருணை காட்டுங்கள் - என்று!
கையைக்கட்டி வாழுமினம் நாங்களுமில்லை!
சமர்ப்பணங்கள் எமக்களித்த பண்டிதர் பலர்!
சன்மானம் கிடைத்தவுடன் ஓடி விட்டனர்!
அமர்க்களமாய் வாழ்ந்த வாழ்வை புறக்கணித்தவர்!
சமர்க்களத்தில் மாண்ட நாளை மறந்துவிடவோ!
பூக்கொடுத்துக் கைகுலுக்க எமக்கும் சம்மதம்!
புறமுதுகில் குத்திவிட்டால் யார்க்குப் பாதகம்!
ஆண்டுகளாய் ஆண்ட இனம் அழிந்து போகையில்!
ஆடு கண்டு கவலைப்படும் நரியை நம்பவோ!
சொத்து சுகம் தேடி இங்கு வந்த மக்களே!
பத்து ரூபாய் பெற்றுக்கொண்டு காட்டிக் கொடுத்தனர்!
வெற்றிடங்கள் விளைநிலங்கள் கூறு போட்டனர்!
வீண்நிலங்கள் என்று கூறி விற்றுத் தின்றனர்!
ஆலும் வேலும் நிறைந்த மண்ணில் போதி நட்டனர்!
போதி நன்றாய் தழைப்பதற்கெம் இரத்தம் விட்டனர்!
தழைத்த போதி வேரைத் தேடிக் கல்லை வைத்தனர்!
இளைத்த இன‌த்தின் மீது ஏறிக் குலவை இட்டனர்!
உலகிலொரு மூலையிலே எனக்கும் நிலமுண்டு!
உரிமை முழங்கும் கவிகளுக்கு என்றும் உயிருண்டு!
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்!
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை

மேகப் பொம்மை

நா. சுமித்ரா தேவி
யாரும் விளையாட வராததால்
காற்று கலைத்துப்போட்டது
மேகப் பொம்மைகளை...

அகமாறாட்டம்

அமல் சி தேவ்
என் 'அகம்' 'அகங்காரமாய்'
என் உத்தரவுதானின்றியே
எச்சரிக்காது மாறிடுகின்றதே;
என் உள்ளுக்குள் உறைந்தே
என்னால் எனக்குத்தானே
எதிரியாய் ஆகிவிடுகின்றதே...

நிமிஷங்களிலே என்
நிர்மல இதயத்தையே
நிராகரித்துவிடுகின்றதே;
தேவதூதனாய் நான்
திரியும் க்ஷணங்களிலே எனைத்
துஷ்ட சாத்தான் ஆக்கிடுகின்றதே...

பூனையாகி என்
பயமெனும் எலிகளைப்
பிடித்துக் கொல்லுகின்றதே;
எலியாகவே பலமுறை என்
எதேச்சைப்பூனைக்கு அஞ்சி
எங்கோ மறைந்தும் ஒழிகின்றதே...

இராணுவ வீரராகி என்
இச்சாசக்திகளுக்கெதிராய்
இலட்சியப்போர் தொடுக்கின்றதே;
இறகிழந்த பறவைபோல்
இலட்சணக்களை இழந்து
இன்னல்களுக்கும் உள்ளாகின்றதே...

இறையரசுகளின் பெரும்
இனியவிழுமியங்களையெனில்
இனிதினிதாய் விதைத்திடுகின்றதே;
விதைத்தபின் காட்டு யானையாய்
விளைந்துவரும்பயிர்களையே
வதைத்தும் அழித்துவிடுகின்றதே....

தெருநாயாய் உருமாறி
தொல்லைகள் செய்துத்
துரத்தியெனை விரட்டுகின்றதே;
வளர்ப்புநாயாய் என்பின்னே
வாலை ஆட்டிக்கொண்டே இதய
வீட்டையும் காத்துநிற்கின்றதே...

பைத்தியக்குரங்காகி அதுயென்
பூர்ண உடல் உள்ளத்தைப்
போர்க்களமாக்கிடும்போதுமட்டும்
பொறுமையெலாம் இழந்துபட்டு
பாரம் தாங்கவியலாக்கழுதைபோல்
போராடிப்போராடியே பயணிக்கின்றேன்...

என்னதான் செய்தாலும்
என் 'அகம்' ஆனதனால் அதனை
எண்ணியே மன்னித்திடுகின்றேன்;
எனைமறந்துத் தவறேனும்
என்றுமே செய்ய்திடாமல்
எனைத்தானே காத்துக்கொள்கின்றேன்...