தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பயணம்!

மாவை.நா.கஜேந்திரா
நடந்துகொண்டிருக்கிறேன்!
மனிதரில்லாத உலகில்!
மதங்கள் எல்லாம்!
மண்ணாய்போக!
மனித மதம் கொண்ட!
யானைகள் உருள்கிறது!
புரள்கிறது…!
தனிமை விரும்பாத !
உயிர்களுக்கு!
நிழல்களே துணையில்லை!
தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்!
மனிதனைக் காண்பதற்காக

மழைத்துளியா? மறுபிறவியா?

கோமதி நடராஜன்
கங்கையும், கழனியும் !
கதிரவன் ஒளி பட்டு !
கணத்தில் ஆவியாகி !
அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும். !
அடித்த காற்றில்,திசைமாறி, !
இடித்த இடியில்,இடம் மாறி!
கங்கையிலும் கழனியிலும், மறுபடியும் !
விழுந்த மழைத் துளியில் !
கங்கை எது ?கழனி எது ? !
மாகானும் மாபாவியும் !
காலனின் கயிறு தொட்டு!
நொடியில் ஆவி அடங்கி!
அண்டம் தொடாத,ஆத்மாக்களாய் உலவும். !
பாவக்கணக்கில் இடம் மாறி!
புண்ணியக் கணக்கில்,இனம் மாறி!
மகானாய் மாபாவியாய் என்றிருக்க,மறுபடியும் !
ஜனித்த சிசுக்களில்!
மகான் யார் ?மாபாவி யார் ?

பாலியல் வன்முறை

செ.இராமதனவந்தினி
துச்சாதனனும்
பாஞ்சாலியும்
ஒவ்வொரு யுகமும் அவதரிக்க தான்
செய்கிறார்கள்
காக்கும் கண்ணன் மட்டும்
அவதரிக்க மறுப்பது ஏனோ.....

நினைவுகள்

ச .மௌனிஷண்முகம்
நம் நினைவுகளை பாதுகாப்பாய்
இதயத்தில் வைப்பேன் வேண்டாம்
இதயம் துடிக்க மறந்தால் நம்
நினைவுகளுக்கு என்னாவது...

நினைவுகளை விழிகளுக்குள்
வைத்து இமைகளை காவல்
வைப்பேன் வேண்டாம் அழுகையில்
நனைந்துவிட்டால் என்னசெய்வது ..

சேகரித்த நினைவுகளைகாற்றோடு
அனுப்பிவைப்பேன் இறந்தபின்னும்
நினைவுகளோடு வாழ்வதற்கு வேண்டாம்
மறுபிறவி இருந்தால் காற்றில் கரைவது கடினம் ...

நம் நினைவுகளை என்னதான் செய்வது
விதையோடு சேர்த்து நட்டு செல்வோம்
நாம் சென்ற பிறகும் வளர்ந்துக்கொண்டே
இருக்கும் மரத்தோடு சேர்ந்து நம் நினைவுகளும் ...

அம்மாவின் நினைவுகள்

திவ்யபாரதி நடேசன்
நிலவின் வதனத்தை கண்ட நொடி முதல்
உன் நினைவுகள்!
இரவு பகல் பாராமல் கனவிலும்
உன் ஞாபகங்கள்!
வருடங்கள் கடந்தாலும் மூழ்கி தவிக்கிறேன்
உன் நினைவளைக்குள்!
உன்னை பிரிந்த நாள் முதல் இன்றுவரை
உன் பாசத்திற்கு இணை யாருமில்லை!
உன் வார்த்தை மொழிகள் மனதில் புதைந்து
கிடக்கின்றன பொக்கிஷமாய்!
நீ இல்லாத இந்த வாழ்க்கை நரகமாய்
உள்ளது அம்மா!
உன் அன்பிற்கு ஏங்கி தவிக்கும் எனது ஏக்கங்கள்
ரனரனமாய் கொல்கிறது!
இன்றோ உனது நினைவஞ்சலி;அதனை
நினைத்து என் மனம் சின்னாபின்னம் ஆகிறது!
நிஜத்தில் பார்த்த என் உயிரை படத்தில்
பார்த்து வணங்க என் மனம் மறுக்கிறது!
உன்னை கட்டி அனைத்து,மகிழ்ச்சியில்
மிதந்த நாட்கள் மீண்டும் வேண்டுமென்கிறது!
நிலவிலும்,கனவிலும் தெரியும் உன் முகம்
நிஜத்திலும் பார்த்திட ஏங்குகிறேன்!
என்னிடம் திரும்பி வா அம்மா!!

அன்னைத் தமிழ்

திவ்யபாரதி நடேசன்
மொழிகளுக்கெல்லாம் அரசி தமிழ்!
எனக்கு வாழ்வு தந்த அரசியோ
எனது அம்மா தமிழரசி!
தமிழுக்கும் என் தாய்க்கும் தொடர்புண்டு
எனது தாய்மொழியின் பெயரோ தமிழ்!
என் அம்மாவின் பெயரும் தமிழ்!
தாய்மொழி தமிழோ எனது உயிர்மூச்சு!
எனக்கு சுவாசம் தந்த உயிரோ
என் அன்னை தமிழ்!
எனது தாயாகிய தமிழின் சுவாசம்
பிரிந்தது என்னைவிட்டு!
தாய்மொழியாம் தமிழ் மொழியால் அவள் சுவாசத்தை ஸபரிசிக்கிறேன் தினமும்!
தமிழை வாசிக்கும் போதெல்லாம்
அம்மாவின் ஸபரிசத்தை உணர்கிறேன்!
தமிழை உயிரென நேசித்து
என் அம்மாவின் சுவாசத்தை
உயிர்த்தெழ வைப்பேன் தினமும்!
எனது தாயாகிய தமிழ் என்னை பிரிந்தாலும்
எனது தாய்மொழியான தமிழை
என் உயிர் உள்ள வரை சுவாசிப்பேன்!!!

காதல்

ச .மௌனிஷண்முகம்
காதலிப்போரே இறந்துபோகிறார்கள்
காதல் ஒருபோதும் இறப்பதில்லை ...
இறப்போருக்கெல்லாம் காதல் காரணம் அல்ல
காதலை அடையமுடியாததே காரணம் ..
சுவாசம் நின்றுபோனபின்னும்
நேசம் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் ...
காதலை குறை கூறுபவர்களும் காதலிப்பார்கள்
காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை ...
-------காதல் வாழ்க -----

கண்ணாடிவளையல்கள்

ச .மௌனிஷண்முகம்
அவள் கைகளில் வாழ்ந்ததற்கு
அடையாளமாய் தழும்புகளை
விட்டுச்செல்கின்றன
கண்ணாடிவளையல்கள்...

மெட்டி

ச .மௌனிஷண்முகம்
அடங்காதவள் என்று
பட்டம் தந்த விரலுக்கு
பட்டமளிக்கிறான் கணவன்
முட்டியிட்டு மெட்டிபோட்டு ...

சாலைகள்

ச .மௌனிஷண்முகம்
சத்தம் போடும் வாகனங்கள் மத்தியில்
சத்தமில்லாமல் படுத்துக்கிடக்கிறது சாலைகள்
பள்ளங்கள் பல விழுந்தபின்னும் ...