தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

யாசகம்

பால.அபி

நீ அருகிலிருக்கையில் நிமிட முள்
உறையவே வேண்டுகிறேன்..

நீ தொலைவில் இருக்கையில்
கால நேரம் தொலையவே யாசிக்கிறேன்...

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

எனது மனங்கொத்திப் பறவை

ரவி

இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்
எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்
மீள்வரவில்
நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.

நான் எதையும்
விசாரணை செய்வதாயில்லை.
ஏன் பறந்தாய்
ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்
என்பதெல்லாம்
எனக்கு பொருட்டல்ல இப்போ.

என் பிரிய மனங்கொத்தியே
நீ சொல்லாமலே பறந்து சென்ற
காலங்கள் நீண்டபோது
என் மனதில் உன் இருப்பிடம்
பொந்துகளாய்
காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை
அறிவாயா நீ.
நீ அறிந்திருப்பாய்
நீ இரக்கமுற்றும் இருப்பாய்.

மீண்டும் உன் கொத்தலில்
இதமுற்றிருக்கிறேன் நான்
கொத்து
கோதிவிடு என் மனதை
இதுவரையான உன் பிரிவின் காலங்களில்
என் மனம் கொத்திச் சென்ற
பறவைகளில் பலவும் என்
நம்பிக்கைகளின் மீது
தம் கூரலகால்
குருதிவடிய
எழுதிச்சென்ற வரிகளெல்லாம்
வலிகள் ஊர்கின்றன.
மறக்க முனைந்து மறக்க முனைந்து
தோற்றுப்போகிறேன் நான்.

நான் நானாகவே இருப்பதற்காய்
காலமெலாம்
வலிகளினூடு பயணிக்கிறேன்.
சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு
உன் மீள்வரவும்
மீள்பறப்பாய் போய்விடும்தான்.
என்றபோதும் இன்று நான்
இதமுற்றிருக்கிறேன் - நீ
கோதிய பொந்துள்
சிறகை அகல விரித்ததனால்