வெள்ளிக்கிழமை மாலை
பள்ளியின் கடைசி வகுப்பு
லேசான தூரல்
அடுத்தநாள் சனிக்கிழமை என விடுமுறை குதூகலம்
அப்பொழுதெல்லாம் முதுகில் பாரம் இருக்கும்
இப்பொழுது போல் மனதில் அல்ல
வீட்டிற்கு வந்தவுடன் பாரத்தை இறக்கி ஓரமாய் வைத்துவிட்டு
முகம் கழுவி உடைமாற்றி வர
அவனுக்கு புடிக்கும் என சூடாக சாம்பார் சாதமும் வடகமும் செய்து வைத்திருப்பாள் அம்மா
தொலைக்காட்சியில் அந்நேரம் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு
சிரிப்புடன் சாப்பிட
கடைசி வாய் சத்து என மீதம் வைக்காமல்
அனைத்தையும் சாபிடவனின் தட்டில் வடகம் மீதமிருந்தது
வடகத்திர்க்காக சிறிது சாதம் வைக்கிறேன் என அம்மா வைக்க
இன்னும் ஒரு வாய் சாதம் அதிகமாய் உள்ளே போனது
அவசரமாய் எழுந்து கைகழுவி
விளையாட செல்கிறேன் என்று ஓடியவனை
சாப்பிட்டவுடன் இனிப்பு கேட்பான் என
பதம் பார்த்து செய்த ரவாலட்டு
சிறிது நேரம் அமர வைத்தது
அதற்குள் அவன் பெயற்சொல்லி நண்பர்கள் அழைக்க
அவர்களுக்கும் சேர்த்து சில லட்டுக்களை
கை எடுத்துக்கொண்டு கால்கள் ஓடியது
அதனை நண்பர்களிடம் கொடுக்க ஆசையாய் சாப்பிட்டு
மழைத்தூரலில் நனைந்தபடியே
ஆனந்த விளையாட்டு
நாட்கள் அழகாய் இருந்தது அந்த வயதில்...
அன்னபூர்ணா