தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

யுத்தசாட்சி

மன்னார் அமுதன்
மும்முறை வீழ்ந்த!
என்னிறைவா!
நானும் பாரம்சுமக்கின்றேன்!
நீர் தாகமாயிருந்தீர்!
நானோ பசித்திருக்கின்றேன்!
யாருக்கெதிரான போரிலும்!
முதலில் தோற்கடிக்கப்படுவது!
நாங்கள் தானே!
எப்படியிருக்கிறாயென!
எவரும் கேட்பதில்லை!
எத்தனை முறையென்றே!
கேட்கிறார்கள்!
உடல் கிழிந்து!
உயிர் கருகிய நாட்கள்!
எத்தனை என்று!
தெரியவில்லை!
முள்முடிகள் குத்தியதில்!
முட்டிக்கால் தாண்டியும்!
ஓடிக்கிடக்கிறது இரத்தம்!
எத்தனை பேரென்று!
எண்ணவில்லை!
காடையர்கள் !
பகிர்ந்துண்ட!
கடைசி அப்பத்தைப் போல்!
நானும் சிதறிக்கிடக்கிறேன்!
எத்தனை முறையென்றும்!
நினைவிலில்லை !
கிழிசல் வஸ்திரங்களைக் கீழிறக்கி !
மீண்டும் மேலேறுபவனை உதறித்தள்ளி !
காத்திருப்போரிடம் கேட்கிறேன்!
“உணவுப் பொதிகளை !
வைத்திருப்போரே !
உங்களில் பாக்கியவான்கள்.!
அவர்களுக்கு !
நான் சித்தமாயிருக்கிறேன்”

கர்த்தாவே! என் வாய்க்குக் காவல் வையும்!

மன்னார் அமுதன்
கர்த்தாவே,!
என் வாய்க்குக்!
காவல் வையும்!
என் !
உதடுகளின் வாசலைக் !
காத்துக்கொள்ளும்.!
அவனும் நானும்!
ஆணாகவே இருந்தோம்!
இருந்தும் !
அவன் மேன்மையானவனானான்!
திருடனென்றாலும்!
உமக்கு!
வலப்பக்கம் வீற்றிருக்கும்!
திருடனாய் !
அவன் மேன்மையானவனானான்!
கடைச்சரக்கா இலக்கியமென !
காணுமிடமெலாம் !
பேசித் திளைப்பதில்!
அவன் மேன்மையானவனானான்!
எனது வாயை !
மிதித்தபடி!
அவன் பேசிய!
சுதந்திரமும் பிறப்புரிமையும்!
கேட்டவர்கள் கூட!
சொன்னார்கள் !
அவன் மேன்மையானவனென!
கலாச்சார உடையில்!
வெள்ளையும் கறுப்புமான!
மேன்மையானவனே!
தயக்கம் வேண்டாம்!
சேலையும் கலாச்சார உடைதான்!
ஒருமுறை அணிந்துபார்!
அழகாய்த்தானிருக்கும்!
கர்த்தாவே, !
என் வாய்க்குக் !
காவல் வையும்!
என் !
உதடுகளின் வாசலைக் !
காத்துக்கொள்ளும்.!

நல்லுமரமும் ராசாதிண்ணையும்

மன்னார் அமுதன்
பாட்டையா ஒரு!
விதை விதைத்தார்!
மந்தையில்!
ஆலவிதையாயினும்!
நல்லு மரமாய் வளர்ந்தது!
பாட்டையாவின் பெயரோடு!
ஊரார் ஓய்வெடுக்கவும்!
ஒன்றுகூடவும் !
உதவியது நல்லுமரம்!
விழுதுதுகள் எழுகையில்!
வயோதிபர்களின்!
வேடந்தாங்கலாகியிருந்தது!
அப்பா அதைச் சுற்றி!
திண்ணை கட்டினார்!
ஆடுபுலி ஆட!
ஏதுவாயிருந்தது!
ராசாதிண்ணை!
ஆல் வேரற்றிருக்கையில் !
நாகரிகம் அறிந்திருந்தேன்!
நல்லுமரத்தை !
விழுதுகள் தாங்கிக்கொண்டன!
பாட்டைவும் அப்பாவும்!
பாரமாயிப் போயினர்!
எனக்கு!
இப்போதெல்லாம் !
வெறிச்சோடிக்கிடக்கிறது!
நல்லுமரமும் ராசாதிண்ணையும்

பேயோன்

மன்னார் அமுதன்
தலைவலியோடு எழும்போதே!
பேயைப் பற்றி !
பேசிக்கொண்டிருந்தான்!
கண்கள் சிவத்தும்!
நரம்புகள் புடைத்தும்!
அரற்றித் திரிந்திருக்கிறது பேய்!
பேயடித்ததால் !
வீங்கிக் கிடக்கிறது!
சோற்றுப் பானையும்!
மனைவியின் முகமும் !
ஆறொன்று !
ஓடி மறைந்த வடுவாய் !
காய்ந்திருந்தது !
பேய் கழித்த சிறுநீர்!
வெட்டியெடுத்த மண்போட்டு!
மறைக்கப்பட்டிருந்தது!
அதன் வாந்தி !
வந்ததற்கான!
எல்லா அடையாளங்களையும்!
விட்டே சென்றிருந்தது பேய்!
அலங்கார அறையொன்றில்!
பேயைக் காட்டுவதாய்!
அழைத்தான்!
அங்கு பேயுடைத்த !
கண்ணாடிச் சில்லுகளில்!
ஆயிரமாயிரமாய்த் தெறித்துக்கிடந்தது!
எனது முகம்!

இன்னமும் உறங்கியிருக்கவில்லை

ரவி (சுவிஸ்)
இருள்படர்ந்த கடற்பரப்பை நீவிவரும் காற்று!
எனது குடிசையின்மீது இடறுகிறது.!
இடையிடையே அது கிடுகை கூரையிலிருந்து!
பெயர்த்துவிடுவது போலவும், பின்னர் !
கிடுகு அமைதியடைவதாயும் இருந்த கணங்கள்!
என்னை கடத்திவைத்திருந்தன.!
கடந்துபோன காலங்களைப் போலன்றி,!
காற்றையும் கிடுகையும் தவிர!
என் மனம் வேறெதையும் வரைந்து கொள்ளவில்லை.!
பயமற்று இருந்தேன்.!
சமயத்தில் அதை ரசிக்கவும் செய்தேன்.!
தோகையாய் விரியும் கடற்காற்றின் இரைச்சல்!
காலம் என்னை கடைசியாக விட்டுச் சென்றிருந்த இடத்திலிருந்து!
தரையிறக்கிவிட,!
உடலுரசிய குளிர்காற்று என்னை நீவிவிட்டிருந்தது.!
மீன்கள் பேசிக்கொள்வது கூட கேட்கிறது.!
அரிக்கன்லாம்பின் வெளிச்சத்தை விடவும்!
கிடுகு ஓட்டை செதுக்கி அனுப்பிக்கொண்டிருந்த நிலாத்துண்டு!
சிறு உலகமாய் எனை வந்தடையவும்!
அதை உள்ளங்கையில் இருத்தி வைத்து !
அழகு பார்ப்பதுமாய், நான்!
வியாபித்திருந்த பொழுதில்!
கனவு ஒரு சிற்பமாய் வடிந்துகொண்டிருந்தது.!
நான் இன்னமும் உறங்கியிருக்கவில்லை

பழைய கண்ணீரின் உப்புக்கறை

அல் அமீனுல் தஸ்னீன்
உணர்ச்சியின் உளி கொண்ட!
பைத்திய சிற்பிகள் வெடித்தழும்!
சிதைவுகளின் ஓங்கார இரவில் !
குரூர அன்பின் குருதி மழை!
வாழ்வியல் கத்தியின் கைப்பிடியில் !
பழைய கண்ணீரின் உப்புக்கறை!
இரக்கமற்ற மவுனத்தீயிலிட்டே!
எரித்த இதயமெங்கும் ஊமைக்காயம்!
இனி!
வலியின் கதை மீட்ட!
விலா எலும்பே சாணைக்கல்!
நில்லுங்கள்!
தீட்டிய மனநோயை !
கூர் பார்த்து வருகிறேன்

துடிக்கிறது இரட்டைக்கிளவி

அல் அமீனுல் தஸ்னீன்
பேச்சின் எச்சில் தெறித்த காலத்தின் மீது !
நடைபிண வாழ் தவமிருந்தவனை !
மௌன மரணம் முத்தமிடுகிறது!
உருவகம்!
படிமம்!
எதுகை மோனை!
குறியீடு!
எதற்குள்ளும் அடங்கா !
உயிர்ப் பிரிகையில்!
துடிக்கிறது இரட்டைக்கிளவி!
அவதானியுங்கள்!
அங்கொருத்தி!
மொழியல்லா பெயர்த்தெழுதலில்!
அழுதுக்கொண்டிருக்கும் காதலை !
இதயம் கிழித்து காட்டுகிறாள்!
சிவக்கிறது!
பேரண்ட பெருவெளி!

முடிவுறாத கவிதையின் எதிர்காலம்

அல் அமீனுல் தஸ்னீன்
நிசப்தத்தை மொழிபெயர்க்கும் ஆழியலையினூடே!
சுழற்றி வீசப்பட்ட நிராகரிப்பின் நிமிடங்கள்!
நிர்வாணியாய் கரையொதுங்கி கிடக்க !
நிர்மூலத்தின் மீதூர்கிறது நினைவின் நண்டு!
இறந்தகாலத்தை துப்பும் உப்புக் காற்றில்!
நிர்க்கதியான வாழ்வின் அழுகல் வாடையை!
வட்டமிடுகிறது நிகழ்காலப் பசியின் கழுகு!
அதோ!
கடலுக்குள் விழுந்து !
தற்கொலை செய்யக் காத்திருக்கும்!
ஆதவனில் எரிகிறது !
முடிவுறாத கவிதையின் எதிர்காலம்!

பனிக் கண்கள்

அல் அமீனுல் தஸ்னீன்
எப்போதும் சொல்லி விட்டு வருபவள் !
முதல் முறையாய் அறிவிப்பேதுமின்றி !
பேரீச்சைபழங்களோடும் *ஸம் ஸம்* நீரோடும் !
வந்திருக்கிறாள் நானில்லாத போது. !
எப்போதும் முத்தமிடுபவள் !
என்ன செய்திருப்பாளென தேடுகிறேன்!
யாருக்கும் தெரியாமல்.!
குழந்தைகளின் கன்னத்தில் !
எனதறையின் ஒவ்வொரு மூலையில் !
திறந்தே கிடக்கும் அலமாரிகளில் !
வீட்டின் முன்னிற்கும் யூகலிப்டஸ் இலைகளில் !
இருசக்கர வாகன கைப்பிடியில் !
கடந்த ரம்சானில் வாங்கித் தந்த குர்தாவில் !
எங்குமில்லை தடயங்கள்.!
ஈத்தப்பழத்தோடு உரையாடிக் கொண்டே!
பழைய கவிதை நூலை புரட்டினேன். !
சோக கவிதையின் கடைசிப்பத்தியில்!
முத்தங்களை முட்டையிட்டிருக்கிறாள். !
இந்த கண்ணீர்த்துளிகள் படும் முன் !
சடாரென மூடுகிறேன்!
அடைகாத்தல் ஒரு கடினப்பணியே

கூடு விட்டு கூடு பாயும்

அல் அமீனுல் தஸ்னீன்
உச்சிமயிர் பிடுங்கியெறிந்த !
ஐவிரல் பதினான்கு மடிப்புகளுள் !
மூச்சடங்கு முன் துடித்த !
பாவங்களின் ஒப்பாரி. !
தற்கொலை கடிதமெழுதியவன்!
அமர்ந்த நாற்காலியில்!
தூக்கு மாட்டியவளின் கால்தடம். !
அரூபிகளின் அருவாள்கள் !
துருவேறி துறவு பூண்டதால்!
நாடிவர்மத்தில் துளைத்து !
கருணைக் கொலை. !
கவிதைகள் !
இனி!
கூடுவிட்டு கூடுபாயும்.!