தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இயலாமை

இரா. பி
கண் முன்னே கொடூரங்கள்!
அன்றாட வாழ்வில் அத்தியாயமாகி!
இயலாமை எனும் அரணின் பின் மறைந்து!
இரக்கம் ஒரு சொல்லாக!
நீதி ஒரு துணுக்காக!
மனிதம் ஒரு புறம்; மனிதன் மற்றொரு புறம் !
காலத்தின் போக்கில் வாழ்வைக் களித்து!
அநீதி கண்டு பொங்கி எழுவது அநீதி என்று!
நீதி அளக்கும் தராசில்!
ஒரு புறம் கனம்; மறுபுறம் கனக்கும் மனம் !
எப்போதாவது என ஒரு சொல் சாபத்துடன்!
வாழ்வில் முற்றுப்புள்ளி அற்று!
தொடரும் பல சாபங்கள்!
இயலாமைதான் வாழ்க்கையோ?!

பயணம்

இரா. பி
காலத்தின் படிகளில் பின்னோக்கிச் சென்று!
உற்று நோக்கி, உண்மையான உருவத்தை!
ஒரு கேள்வி கேட்க!
கண் விழித்து!
கனவுகளைத் தொலைத்து!
தொடங்கும் ஓர் ஆன்மீகப் பயணம் !
நிகழ்கால என்னை, கடந்த கால நான்!
எதிர் கொண்டு,!
பேசத் தயங்கி,!
உள்ளம் நடுங்க,!
கேட்ட ஒரே கேள்விக்கு விடை என்ன?!
எங்கே என்னைத் தொலைத்தாய்? !
விடை தேடி மீண்டும் தொடங்கும்!
ஆத்மார்த்த யாத்திரை!
கட்டுங்கடங்காத காலம்!
எட்டுத்திக்கிலும் எண்ணம்!
தட்டுத்தடுமாறி தொடங்கிய!
வாழ்வின் முடிவில் பயணம் !
எவனோ ஆகும் முயற்சியில் முதல் தோல்வி!
இவனோ எனும் கேள்விக்கு விடை தேடி!
அவனும் அப்படித்தான் எனும்!
சமூக விதிக்குட்பட்டு!
வரையறை தாண்டியவர் கண்டு பெருமூச்சு விட்டு!
இதுதான் எனும் தொடக்கத்தில் முடிவுறும் பயணம்!

நம்பிக்கை

இராமதனவந்தினி
கண்களின் கனம் தாங்க
முடியாமல்
கண் இமைகள் கூட
பலமுறை கீழ் விழுந்து தான்
மேல் எழுகிறது...

அன்றும் இன்றும்

இரா.சுஜீவன்
நடுநிசி் நேரம்
களிமண் வீடு கிடுகுக்கூரை
இடியில்லை மின்னல் வெட்ட
மழை பெரிதாயில்லை
ஆனாலும் தூவானக்குளிர்
தம்பி தங்கைகள் ஒற்றை அறை வீட்டுக்குள்ளே
விறாந்தையில் ஓலைப்பாயின் கதகதப்பில்
நானும் தாயும் காவலுக்கு

எங்கோ தூரத்தில் நாய் ஒன்று
குரைக்க தூக்கம் கலைந்து பயம் நெஞ்சை இறுக்க
உக்கிப்போன பனைஓலை வேலி பேருக்கு
ஓட்டை வேலியை ஏசியபடி வெளியே நோட்டமிட
காலடிச்சத்தம் நன்றாகவே கேட்கிறது கூடவே
மெலிதான உரையாடல் ஒழுங்கையில்
கறுத்த உருவம் வெட்டும் மின்னலில்
வேலிக்கு மேல் தெரிகிறது

பின் வளவில் பனைமரங்கள் காற்றில் ஆட வெள்ளையன் ஒங்கி குரைக்க
அவ்வுருவம் நகர்கின்றது
தொடர்ந்து ஐந்து உருவங்கள்
மறைந்து போக பனைகளை நினைத்தபடி
தூங்கிபோனேன்

விடிகாலை கரித்தூளால் பல்துலக்கிகொண்டு
மட்டை படலையை காலால் தள்ளி
வேலியோரமாய் நடக்கின்றேன் எதையோ தேடி
கிடைத்துவிட்டது ஈரமண்ணில் அழுந்தி மழைத்தூறலில் சிதைந்த உன் காலணியின் தடங்கள் .............. நீ தான்
இன்று புன்னகைத்துவிட்டு செல்கிறாய்
அன்றும் எனைப்பார்த்து ...............?

என் சீருடைப்பிறையே

கிண்ணியா பாயிஸா அலி
சீருடைப்பிறையே!!
எனதில்லத்துமுற்றத்தில்!
நெல்லுமணி பொறுக்கும்!
சின்னச்சிட்டுக் குருவியாய்!
பள்ளிநேரமதில் நீ……!
சாடிகொண்ட செடிமலர்களுக்குள்ளே நெடிய!
வாயுறுப்பிறக்கி அமுதமுறிஞ்சும்!
வண்ணத்துப்பூச்சியே!!
கண்ணாடித்தொட்டியுள் பச்சைப்புழுவாய்!
வளைந்து நெளியும்!
வலிஸ்நேரியப் பற்றைக்குள்!
ஒளிந்து விளையாடும் பொன்மீன்குஞ்சே! !
குப்பை கிளறிக்குறுணல்!
கொறிக்குமென் வெண்கோழிக்குஞ்சே!!
மாடத்து மினாரங்களில்!
சடசடத்துப் பறக்கும் வெள்ளிப்புறாவாய்!
பள்ளி மைதானமதில் படபடத்துத்திரிபவளே!!
சீரூடைப்பருவமதில் நான்!
சுவாசிக்கமுடியாதுபோன!
சுதந்திர வானங்களுக்கான!
அத்தனைசிறகுகளையும்!
மொத்தமாய்விரித்திருக்கிறேன்!
உன்!
இலட்சியத்தேடலுக்காய்!!
புரிந்துகொண்டேன்!
சிரிப்பாலானவளே!!
சீருடைப்பிறையே!!
பேனாபிடித்த உன்!
சின்ன விரலிடுக்கின்!
பெருவெளிகளுக்குள்ளே!
எட்டா முடிவிலித்தூரத்தில்!
விரிந்து வியாபித்துக் கிடக்கின்றன!
சிகரக் கனவுகள்.!
எனவேதான்!
இறைஇறைஞ்சலுக்காய்!
இருகரமுயர்ந்திடக்!
காத்திருக்கிறேனம்மா உன்!
எல்லாவிதத்தேடல்களுக்குமான!
அடைவுமட்டங்களுக்காய்…….!!
என்!
தேர்ர்ச்சித் திட்டங்களோடும்!
உன்னதமான!
தாய்மையின் பரிவுகளோடும்

உனக்கான நாட்கள்

ரமா
உனக்கான நாட்களில்
கொஞ்ச நேரம் உன் மனதுடன்
கோபித்துக் கொள்ளலாம்..
யாருக்கும் தெரியாமல்
கண்ணாடி முன்
ராம்ப் வாக் செல்லலாம்..
சிரித்துக் கொண்டே அழலாம்
அழுது கொண்டே யாருக்காகவோ
சிரிக்கலாம்...
உனக்கான கவிதைகளை நீயே எழுதிக்
கொள்ளலாம்
எதிர்கால கனவுகளை உன் மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டே டோப்பமின்னை சுரக்க வைக்கலாம்
கடந்த கால கசப்புகளை சிறிது சிறிதாக வடிகட்டி உனக்கான தெரபிஸ்ட் ஆக நீயே ஆகலாம்...
மல்லாந்து படுத்துக் கொண்டு
அலைபேசியில் கிசு கிசுகள் பேசலாம்..
பிடித்த புத்தகத்தின் தூண்டிலில்
மீண்டும் ஒரு முறை சுகமாக மாட்டிக் கொள்ளலாம்...
மைக்கல் ஜாக்சனாகவே மாறி பீட் இட்
பாட்டுக்கு உனக்கு தெரிந்த வரிகளை உரக்க பாடிக் கொண்டே வெஸ்டர்ன் ஆடலாம்...
உன் வீட்டின் மூலையில்
உனக்காகவே காத்திருக்கும்
ரோஜா மலரை மெல்ல முத்தமிடலாம்...
ஒரு வேளை எழும்ப மனமில்லாமல்
அந்த நாளை கட்டிலிலேயே கழிக்க
விரும்பினால் ...
உன்னை நீயே அணைத்துக் கொண்டு
உன் பாரங்களை தலையணையிடம்
தந்து விட்டு நிம்மதியாக உறங்கி விடு
நாளை உனக்காகவே காத்திருக்கும்....

நகர்வு!

கலாநிதி தனபாலன்
நகரும் போதுதான்!
நதி அழகு!
நடக்கும் போதுதான்!
வாழ்க்கை அழகு!
நடந்தேன் நடந்தேன்…!
ஊரை விட்டு !
உறவை விட்டு!
ஒரு நகர்வு!
நடந்தேன் நடந்தேன்!
ஈழம் விட்டு !
இருந்த சொந்தம் விட்டு!
இன்னொரு நகர்வு!
நடந்து கழைத்து!
நின்று நினைத்துப்!
பெருமூச்சு விட்டேன்!
அப்போது தெரிந்தது!
வாழ்வின் அருமை!
அதற்குள் அடுத்தடுத்த நகர்வுகள்!
காலநதியில் கால்பதித்து!
கல்வி தேவதையோடு!
கைகோர்த்து!
கனதூரம் நடந்தேன்!
ஓரமாய் ஒளிர்ந்தது!
ஒரு புதிய விடியல்!
விடியலைக்கண்டு!
வட்டம் விட்டு!
வெளியே வந்து பார்த்தேன்!
வாழ்க்கை வனப்புடையதாயிற்று!
நடக்கும் போதுதானே!
வாழ்க்கை அழகு!
நம்பினேன் நடந்தேன்!
நடந்தது வாழ்க்கை!
நலமாக.!

அவளாய்.......... அவள்

பாலா
அவள்.........

அன்னையாய்,
அன்பு மனைவியாய்,
அன்பு மகளாய்,
அக்காளாய்,
தங்கையாய்,
அனைத்துமாய்...........

நின்று பேசும் பேச்சிலும்,
உரத்து உணர்த்தும் அன்பிலும்,
அமர்ந்த பார்வை அதட்டிலும்,
விரிந்த அழகு நினைப்பிலும்,

ஆளும் அன்பை அதிகம் கொட்டி,

நகர முடியாப் பேச்சில்
நகர்த்தி போனதும்,
அகன்ற அன்பில்
ஆழமாய் புதைத்ததும்,
வீழும் நிலையிலும்
விழாமல் பிடித்ததும்,
வாழும் வரையில்
வகை சொல்லி வளர்த்ததும்,
விளங்காத வாழ்வில்
அர்த்தம் தந்து நின்றதும்.......

நீயே..........
பெண்ணாய் உன் இருப்பு......
உன்னால் ஆனது செழிப்பு.......

உன்னால் இருக்கும்..... இயங்கும்,
.....பாலா

புன்னகை

சபீனா பகுருதீன்
புன்னகையோடு கடந்து செல்லுங்கள் !
உங்கள் வாழ்வில் பல துயரமான நேரங்களில் !
புன்னகையோடு கடந்து செல்லுங்கள் !
உங்களின் நெருக்கமான உறவு உங்களை விட்டு பிரியும் பொழுது !

புன்னகையோடு கடந்து செல்லுங்கள் !
வாழ்வில் பல இன்னல்களை சந்திக்கும் பொழுது !

புன்னகையோடு கடந்து செல்லுங்கள் !
உங்களது கண்களில் கண்ணீர் துளிகள் விழும் பொழுது !

புன்னகையோடு கடந்து செல்லுங்கள் !
உங்களது வாழ்க்கைக்கான தேடலை தேடும் பொழுது !

புன்னகையோடு கடந்து செல்லுங்கள் “
உங்களது வாழ்வில் அனைத்தும் புன்னகையாக மலர !!

கண்ணே என் கண்மணியே

தருணா. கே
கண்ணே என் கண்மணியே
வாசல் தாண்டி வாராயோ
மின்னும் என் வெண்ணிலாவே
என்னை நீங்கி போனாயோ
வீழும் என் மழை தூளியே
என் வாழ்வில் வண்ணம் மீட்டி தாராயோ

என் விழியால் வரைந்த விண்மீன் நீ
என்றும் வசப்படாத உன் கண்கள் ஒர் தீ
என்னை கவிஞனாய் மாற்றியதற்கு நன்றி

உன் தோழனை சில கணம்
உன் பாதியாய் மாற ஏங்கும் என் மனம்
வாடுதே என் வானம்

ஒரு வார்த்தை சொல்வாயா
இல்லை உயிரோடு என்னை கொள்வாயா
என்னுடன் உன் கரங்களை சேர்ப்பாய
உன் பாதியாய் என்னை ஏற்பாயா

கன்னெய் என் கண்மணியே
சிந்தும் என் தேன் துளியே
ஒளிரும் என் ஓவியமே
என்னை மறந்து போனாயோ...