தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

குழப்பம்

புவனா பாலா
நான் இவரை போல உயர வேண்டும்!
அவரை போல வாழ வேண்டும்!

என்று… எண்ணும்போதெல்லாம்

முகநூல் விரும்பிகளும்,
வாட்சப் வதந்திகளும்- என்

முன் உதாரண காரணிகளின்
கடந்தகால கண்ணுக்குத் தெரியாத

கருப்பு பக்கங்கள் என்று கண்டதை
காட்டும்போதும், எழுதும்போதும்

என் மனம் குழம்பி வாடுது ,
உலகம் வெறுத்து போகுது

இப்படி என் உந்து சக்திகளின்
உயர்குணமெல்லாம்-சில

புறங்கூறும் சக்திகளால்
ஓய்வெடுத்துக் கொள்ளும்போது!..

முன்னேற துடிக்கும் என்
செயலிழந்து போகிறேன்!
வாழ வழி துறந்து நிற்கிறேன்!!

ஆண்களில் ராமனில்லை

புவனா பாலா
ஆண்களில் ராமனும் இல்லை!
பெண்களில் சீதையும் இல்லை! – அனைவருமே
சூழ்நிலைகளுக்கு சந்து கொடுக்கும்
சந்தர்ப்பவாதிகளே!
பெண் சீதைகளாவது…
கண்ணுக்குத் தெரியாமல்
எங்காவது இருக்கக்கூடும்
ஆண் ராமன்கள்
எங்குமே இருப்பதுமில்லை
இனிமேல் பிறக்கப்போவதுமில்லை

கோலம்

புவனா பாலா
எத்தனையோ ஒத்திகை பார்த்து
உயிர்க்கொடுத்த என் வீட்டு
வாசல் கோலம்
சடுதியில் சலசலத்த
மழைத்துளிகளின் நடனத்தால்
தன் கோலம் இழந்து 
தெருவெங்கும்  பரவிப்போனது 
சிறிது நேரத்தில்
அதன்முகவரி மறைந்து போனது 

நீயில்லா வீடு

நா முரளிதரன்
நீயில்லாத வீடு...

கலைந்த அறை,
அழுக்குத் தரை !

ஆளற்ற அடுப்பங்கறை,
தூக்கமற்ற படுக்கையறை !

ஹாலே கதி என்று படுக்கையில்
நெஞ்சருகே உன்னாடையும்,
காதருகே உன் வார்த்தையும் தான்
நானுறங்க மந்திரம் !

முளை விட்டது,
நீ விட்டுப் போன உருளை !
கருத்தும் போனதடி,
நீ உண்ண சொன்ன மாதுளை !

ஹோட்டல் சாப்பாடு,
ஹாஸ்பிடலின் கூப்பாடு !

வாசற் கோலமும்,
பூஜையறை தீபமும்,
உன்னிரு விரல்களால்
எப்போது, நம் வீட்டில்?

முதலவன் எழுத்தும்,
இளையவன் கிறுக்கலும்,
சுவற்றில் அப்படியே, அகலாமல்
டாட்டூ வாக அங்கங்கே!

வாட்ஸப்பில் விழித்து
கழிகிறது நேரம் ...
குட் நைட் டெக்ஸ்ட்
தூங்குவதற்கும் அலாரம் !

நாட்காட்டியும் கடிகாரமும்
கை கோர்த்து என்னோடு
வேகமாய் ஓட!

அந்நாளுக்காக ...!!!
உங்கள் வருகைக்காக...!!!

லீவு லெட்டர்

முரளிதரன்
லீவு வேணும்...!!!

காலை விடிந்தும்
வேலை மறந்து
மெதுவாய் எழனும் !
நாளையை எண்ணாமல்
நல்ல தூக்கம் போடனும் !

கால்கள் (ஃபோன்) இல்லாத
நாட்கள் வேணும் !
வீட்டில், நினைத்த உடனே
நேரில் நிக்கனும் !

ரீல்ஸ் அண்ட் ஷார்ட்ஸ் ஐ
மறக்கச் செய்து,
காதல் செவ்வாயும்,
காவிய புதனும்
கண்டு மகிழனும்!

ஓலா கேப், கூகிள் மேப்
ஏதுமின்றி,
மொத்த ஊரையும்
சுற்றித்திரியனும் !

நாட்டு நடப்பு 
அடுத்த நொடியே வேணாம்,
டீக்கடை பேப்பரில்
அடுத்த நாள் போதும் !

வேளைக்கு வேளை
வித விதமாய் வேண்டாம்,
பசி எடுக்கத்
தின்று பழகனும்!

வேலை நாட்களில்,
பரபர வீதியில் !

பள்ளிச்சிறுவர்,
ஆபீஸ் பைக்கர்ஸ்,
ஹாரன் சத்தம்,
ஹாரர் முகங்கள்,
அய்யோ பாவம் ??!!

சிக்னலில் பொறுத்து,
சிரித்திட வேண்டும்.
எனக்கு லீவு பா !! என்று,

அரை குறையாக...
அரசியல், சினிமா
அனைத்தும் பேசி
அன்றே மறக்கணும் !

இருள் விலக்கும்
காலைச் சூரியன்,
நண்பகலின்
உச்சி வெயில்,
கண்ணில் பட்டவுடன் 
கலைந்து போகும்
மாலை வானின்
மேகச்சிற்பங்கள்,
கூட்டைத் தேடி
காக்கைக் கூட்டங்கள்...!

தினம் தினம் வருவது தான்
இப்போதாவது ரசிக்கனும் !

ஜெட்டின் புகையை
நின்று ரசிக்க,
கண்ணில் பட்டதைக்
கண்டு ரசிக்க,
கமிட்மெண்ட் இல்லாத
லீவு வேணும் ??!!

மூளையை வேலையில்
முழுசாய் செலுத்த
கொஞ்சம் லீவு வேணும் !!
கொஞ்ச நாள் லீவு வேணும் !!

சுவர்கள்

இராம. வயிரவன்
அது தடை ஓட்டம்!
அங்கீகரிப்புச் சுவர் !
புத்தியின் வேரிலிருந்து!
தன்நம்பிக்கையின்மையாக!
தயக்கமாக!
பயமாக!
தடித்து முளைக்கிறது!
மீண்டும் மீண்டும்!!
உடைத்துக் கடக்க வேண்டும்!
உளிகளும் கோடறிகளும் இருக்க!
நகங்களால் !
பிறாண்டிக் கொண்டிருக்கிறோம்!
ஒன்றை உடைத்துப் போட்டு முன்னேற!
அடுத்த சுவர் எழுகிறது!
தடைகளைக் கடந்து!
ஓட்டம் நிறைவு செய்து !
முகக்கண்ணாடிகளை !
உறித்துப் போட்டபிறகுதான் தெரிகிறது!
சுவர்களெல்லாம் வெறும் கானல் பிம்பங்களே என்று!!
ஓடுபாதையை!
குழந்தைகள்!
கண்களை மூடிக் கொண்டு!
எளிதாக ஓடிக் !
கடந்து போகிறார்கள்!!
பயிற்சி எடுக்க வேண்டும்!
குழந்தைகளிடம்!!

யாசகம்

பால.அபி
நீ அருகிலிருக்கையில் நிமிட முள்
உறையவே வேண்டுகிறேன்..

நீ தொலைவில் இருக்கையில்
கால நேரம் தொலையவே யாசிக்கிறேன்...

என்னவனே

பால.அபி
இமைகள் வருடும்
உன் இதழ்கள்;

அக்கினித் தென்றலாய் விரவும்
உன் மூச்சுக்காற்று;

உன்னிரு கைகளின்
தீண்டல்;

தீண்டலினும்
என்னைக் கொல்லும்
உன் பார்வை;

ஏங்குகிறேன் உன் பார்வைக்கே...
என் கனவல்ல
என் நினைவெல்லாம் நீயே,
நிஜத்திலும் நீயே...

நான்
உனதருகே
உணருகிறேன்
உன் என்னை...

சிறகு தா தெய்வமே

முனைவர். கிறிஸ்டி ஆக்னலோ
சிறகு தா தெய்வமே......
என் உறவின் நிழல் தேட.
நான் வாழ்வேன் என்று நினைத்தால்
வீழ்ந்து போனேன் பல தருணம்...
வீழ்ந்தேன் என்றெண்ணினால்...
வாழ்வு வந்தது வசந்தமாய்.
வாழ்ந்தே விட்டேன் என்றால்...
வழி இல்லா வாழ்வாய் ஆனது.
வாழ்வும் நீ... வளமும் நீ...
என்றுனை நாடினால்...
நீயோ சொன்னாய்...
நீ போன பாதையில்,
நான் இல்லை என் பகை உண்டு.
உன் நிலை நீ தேடியது என்று,
உன் உரை முடித்தாய்,
என்னை தனியே இங்கு தாளம் இல்லா
பாடல் போல ஆக்கி சென்றாய்!
நான் உண்டு என் பாடல் உண்டென்று வாழ நினைத்தேன்
பாடகன் வந்தான்,
பாடுவேன் வா என்றான்...
பல மெட்டு போட்டாலும்,
என் பாடல் அவன் பாட தாளம்
இல்லா பாடல் ஆகி விட்டது.
மெட்டுகள்... பல தாளம்...
தருவான் என்றான்... தனியே....
தளர்வுடன் விட்டு செல்வான்...
என்று நினைக்க செய்தாய் நீ.
என் நினைவுகள் உன் வரம் தானே.
மதிக்க நான் உண்டு உன்னை,
மதியில் கூட நினைக்க
யார் உண்டு என்னை.......?

வாழ்வும் வீணாகும் வார்த்தையில் வீழ்ந்தால்

முனைவர். கிறிஸ்டி ஆக்னலோ
தரம் இல்லா மனிதனிடம் தரம் தேடும் உன்னை
இன்னார் என்றெண்ணாது உலகம்.
போலி அன்பு பொய் வார்த்தைகளால்
புண்ணாக்கும் உறவை,
மாற்றி பேசி வார்த்தை தேடி உன்னை வீழ்த்தும் உறவு
உனக்கு ஒரு எரி-நகரம்...
உன் நினைவை விரித்து அதை சிறகாக்கி
பறந்திடு என் மனமே!
உன்னை எரிக்க நினைக்கும் அளவு
நீ தரம் குறைந்தால்...
தங்கமும் வீண் தான்...
தரணியில் உன் வாழ்வும் வீண் தான்...