தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

சமீபத்திய கவிதை

அக்காவுக்கு ஏழைத் தாய்வீட்டு பொங்கல் வரிசை...

ரஜினிகாந்தன்

ஒருகட்டு கருப்பங்கழி
காய்வெட்டா வாங்கிவந்த
பூவன்பழம் நாலுசீப்பு
கூடவே
ரெண்டண்ணம்
இஞ்சிக்கொத்து மஞ்சக்கொத்து
கடன்சொல்லி வாங்கிவந்த
பூணம் பொடவை ஒண்ணும்
பூப்போட்ட கைலி ஒண்ணும்
வரிசைப்பணம் அம்பதும்
வடக உருண்டை பொட்டலமும்
என
அம்மா அனுப்பிவைப்பாள்
அக்காவுக்கு
பொங்கல் சீர்

உந்திப் பெடல்மிதித்து
சந்தோஷமாய்
சைக்கிளேறிப்போகும்
என்னை
தெருமுனையில் திரும்பும்வரை
கையசைத்து
பின்மறைவாள்

ஆறுமைலுக்கு
அப்பாலிருக்கும்
அக்காவீடு போவதற்குள்
தெப்பலாய் நனைந்திருப்பேன்
தேகமெல்லாம்
வியர்த்திருப்பேன்

தெருமுக்கு கடைநிறுத்தி
தின்பண்டம் கொஞ்சம்
மயிலாத்தாவிடம்
பேரம்பேசி
மல்லிப்பூ ரெண்டுமுழம்
என
என்பங்குக்கு கொஞ்சம்
சீர்வரிசைப்பைக்குள்ளே
சேர்த்தே
எடுத்துப்போவேன்

'' வாடா'' தம்பியென
வாஞ்சையோடு அழைக்கும்
அக்காவின் வீட்டுக்குள்
வெரால்மீனு கொழம்பும்
மசால்வடையும்
மணக்கும்

எப்படியும் வருவான்
தம்பியென
கெவுளிச்சத்தத்தை வைத்தே
கணித்துசெய்திருப்பாள்
அக்கா

பனைவிசிறி தந்துவிட்டு
மோரெடுத்துவர
உள்ளறைநோக்கி ஓடும்
அக்காவுக்கு
பிறந்தவீட்டு சீரைக் கண்டு
பெருமை
பிடிபடாது.

பாக்கு இடிக்கும்
மாமியாக்காரி
பார்க்கட்டும் என்பதற்காகவே
தெருத்திண்ணையிலேயே
பரத்திவைப்பாள்
பிறந்த வீட்டு
சீதனத்தை.

"இந்த
இத்துப்போன வாழைக்காயத்
தூக்கிட்டுத்தான்
இம்புட்டுத்தூரம்
வந்தானாக்கும்"
என்னும்
நக்கலுக்கு வெகுண்டு
நாசிவிடைக்க
கிளம்புகையில்
பதறிஓடிவந்து
பாதையை மறிப்பாள்
அக்கா.

வரிசைப்பணத்தைக்
கையில்திணித்துவிட்டு
"வர்றேன்க்கா" என்ற
ஒற்றைச்சொல்லுக்கு
ஓலமிட்டு
அழுவாள்

அழுகை அடக்கி
சிரிக்கமுயன்று
கண்ணீர்மறைத்து
கவலை விழுங்கும் அக்காவை
இன்றுநேற்றா
பார்க்கிறேன்

வரிசை குறித்த
வாக்குவாதங்கள்
வருடந்தோறும்
அரங்கேறியபடிதான் இருக்கும்
அக்காவின்
புகுந்தவீட்டில்

சைக்கிள்தள்ளி
விருட்டென ஏறிமிதிக்கையில்
"வெறும்பயக் குடும்பத்துக்கு
வீறாப்புக்கு கொறச்சலில்லே"
என்னும்
குத்தல் வாசகம் கேட்டு
உச்சிவெயில்கணக்காய்
உள்ளம்
கொதிக்கும்

வெரால்மீனுகொழம்பும்
மசால்வடைவாசமும்
தெருமுனைவரை
என்னை
துரத்திவந்து
பின்மறையும்

உச்சிவெயிலில்
ஆவேசங்கொப்பளிக்க
பசித்தவயிறோடு
திரும்பும் நான்
எப்படிக் கேட்கமுடியும்
அக்காவிடம்
அம்மா கேட்டனுப்பிய
சாயம்போன இரவிக்கை
இரண்டும்
கட்டிப் பழசான
சேலை ஒன்றும் ?

குறிப்பில்லாக் கவிதை (random)

துளிப்பா

இரா.இரவி

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை!
ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை!
வாழ வழியின்றி முள்வேலி!
வாடி வதங்கினர் குழந்தைகள்!
இழவை கேட்க நாதியில்லை!
உலக மகா கொடூர கொலைக்காரன்!
உலக வலம் நாளும் வருகிறான்!
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்!
ஒருவரும் தட்டி கேட்கவில்லை!
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்!
மூட நம்பிக்கைகளில் ஒன்றானது தேர்தல்!
மேதினியில் பணம் படைத்தவர்களே வேட்பாளர்கள்!
மடயர்கள் மலிந்து விட்டனர்!
மூளைக்கு வேலை இல்லை!
அட பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள்.!
போட்டி போட்டன தொலைக்காட்சிகள்!
பெண்களை அழ வைத்துப் பார்ப்பதில்!
ஏட்டிக்குப் போட்டி மாமியார்கள்!
ஏதிர் தாக்குதலில் மருமகள்கள்!
ஈட்டிக்காரனைத் தோற்கடித்தனர் சண்டையில்!
பட்டுச்சேலை ஆசையை விட்டு விடு!
பாவம் பட்டுப்பூச்சிகளை வாழ விடு!
பட்டு மேனியாளுக்கு தேவையில்லை பட்டு!
துட்டு அதிகம் முடங்கி விடுகின்றது!
கட்டு கைத்தறி சேலை தினம் கட்டு!
பொன் நகை மோகம் மலிந்தது!
பெண்கள் பலரது மனமும் அடிமையானது!
விண்ணை எட்டியது விலை உயர்ந்தது!
வஞ்சியர் இனம் கடையில் குவிந்தது!
ஆண்கள் இனம் அவதிப்பட்டது!
கோடிகளை உதியம் பெறுகிறான் நடிகன்!
கோடம்பாக்கத்து கோமகனாய் வலம் வருகிறான்!
கொடி கட்டி பொழுதுபோக்குகின்றான் ரசிகன்!
கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்கிறான்!
தடியால் அடி வாங்கி காயமும் படுகிறான்!
தமிழர்களின் கலைகளை பறைசாற்றிடும் சிலை!
பார்த்தவர்கள் வியப்பில் ஆகின்றனர் சிலை!
இமி அளவும் இல்லை அதில் செயற்கை!
இமைக்காமல் ரசித்து அடைந்தனர் இன்பம்!
சாமி நம்பாதவரும் வியப்படைந்த நிலை!
நடிகையை சேர்த்தனர் அரசியல் கட்சியில்!
நல்லவர்கள் விலகி விட்டனர் அரசியலில்!
கோடிகள் குவிக்க வாய்ப்பு வழங்கினார்கள்!
கட்சியில் மேல்சபை பதவியும் தருவார்கள்!
கேடிகள் பல்கிப் பெருகி விட்டார்கள்!
ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான்!
பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மான்!
இன்பக் காட்சி தமிழ் இலக்கியத்தில் காண்!
இணை பிரியாத ஜோடிகளின் காதல்!
எண்ணிலடங்காத இனிய உணர்வு தான்