தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஆக்கியோன் - ஹைக்கூ

ராஜேஷ் ஞானசேகரன்
வரிசையாய் வந்த எறும்புகள்
வாசனை அறிந்ததும் வட்டமிடுகின்றன
வாசலில் போட்ட புள்ளிக்கோலத்தைச் சுற்றி.

மெட்டி

சுபா செந்தில்
மூத்தவளை விட்டு விட்டு
இளையவலுக்கு மட்டும் மகுடம்
சூட்டப்படுகிறது மணமகளின் கால்களில் - மெட்டி

என்னை மறந்து விடுங்கள் !

புவனா பாலா
ஆடி அடங்கி
குளிர் சாதன பெட்டிக்குள்
என் உடல் அடக்கம் பண்ணி கிடக்கையிலே

எனக்கு வாழ்க்கை துணையானவள்
என் உடன் இருந்தே பழகியவள்
திடீரென்ற இந்த விதி விளையாட்டால்
திக்கு தெரியாத
விடலை பிள்ளையாய் தடுமாறி
எப்படி நாட்களை தாண்டப்போகிறோம்
என்ற தடம் தெரியாமல்
கண்களால் எனைத்தேடியே
ஒப்பாரி பாட்டை ஒப்புவிக்கிறாள்
ஒரு பிசிறின்றி

என் குருதியால் உருவாகி உயிராகி
எனக்கு வாரிசானவர்களும்,
அந்த வாரிசுகளுக்கு வாய்த்த
அடுத்த வம்சத்தவரும்
எந்த பிறவியில் உன்னை காண்போம் என்று
அழுது களைக்கின்றனர்

கூடியிருந்த சொந்தங்களும்
முகம் தெரிந்தவர்களும்
பேசி பரிச்சயமானவர்களும்
என் குணம் சொல்லி
கண்ணீர் சொரிகின்றனர்

இவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல்
எடுத்த உடல் விட்டு
அவர்களின் கண்ணுக்கு
தெரியாமல் நிற்கிறேனே

காலன் என்னை
என் வினைக்கேற்ற
உடல் எடுக்க தயார்பண்ண
வரிசையில் ஒன்னும்
புரியாமல் நகர்கிறேனே

என்னுடைய தருணம் வந்தும்
பிறவி எடுக்க செல்லாமல்
விடைப்பெற உணர்வின்றி
உங்களையே பார்த்துக்கொண்டு
வருத்தத்தில் வாடுகிறேனே !

காற்றோடு கரைந்துவிட்டேன்
தேடி எடுக்க முடியாமல்
தொலைந்துவிட்டேன்
தொலைந்த என்னை தோண்டி
எடுக்க முயலவும் வேண்டாம்
நித்தமும் நொந்து
கண்ணீரிலே மிதக்க வேண்டாம்

என்மீது மதிப்பிருந்தால்
என்னை மறந்து உங்கள் வாழ்க்கை
வழியில் முன்னேறுங்கள்
எனக்கு சாந்தி கொடுத்து
என்னை அனுப்பி வையுங்கள்
வேறு உடல் எடுக்க வழிவிடுங்கள்.

ஈரமில்லை!

ராம்ப்ரசாத்
ஆகாயமார்க்கமாக பயணப்பட்டவர்களை!
ஆகயத்தோடே தன்னோடு!
அழைத்துக்கொண்டுவிட்டான்!
அந்த காலன்...!
எருமை வாகனத்தவன்!
அழைத்தால் போகாதவரும்!
உண்டோ!!!...!
!
கும்மிருட்டில், கொட்டும் பனியில்!
வழிதவறி அடைக்களம் தேடும்!
பூனைக்குட்டிகளை!
அரவணைத்துப்பாலூட்டும்!
ஐந்தறிவு நாய்கள் கூட‌!
உயிர்கள் தோன்றிய‌!
காலம் தொட்டு!
இயற்கை வளர்த்துவிட்ட‌!
வேட்டை விதிகளை மறந்து,!
நட்பு பாராட்டும்போது,!
அறிவை வளர்க்கும் பொருட்டு!
கல்வி கற்கும் நோக்கில்!
உன் நாட்டிற்குப்பயணப்பட்ட‌!
என் தோழனை!
அடித்துத் துன்புறுத்தி!
ஐந்தறிவு விலங்கினம் நாயல்ல!
நான்தானென்று சொல்லாமல்!
சொல்லியிருக்கிறாய்...!
உனக்கொன்று சொல்கிறேன்...!
!
தெய்வப்பிறவியாவது உனக்கும்!
எனக்கும் பெரிய விஷயமே...!
ஆனால்,!
குறைந்தபட்சம் மனிதனாக இருக்க‌!
முயற்சி செய்வோம்...!
!
உன் நாட்டைச்சுற்றி!
நாற்புறமும் கடல்சூழ்ந்து!
என்ன பயன்,!
நெஞ்சில் எவருக்கும்!
ஈரம் இல்லையே...!
முப்புறம் மட்டுமே!
கடல் சூழ்ந்த‌!
என் நாட்டிற்கொருமுறை!
வ‌ந்துபோ...!
உன்போன்ற‌ பிற‌விக‌ளுக்கு!
நாயாவ‌தே பெரிய‌ சாதனை!
தானென்பேன். பிற்பாடு,!
ம‌னித‌னாவ‌தெப்ப‌டி என்று!
பார்க்க‌லாம்...!
!
காலன்,!
வீட்டுக்க‌த‌வை த‌ட்டும்!
எட்ட‌த்தில்தானிருக்கிறாய் என்ப‌தை!
ம‌ற‌வாதே என்றென்றும்...!
இடைப்பட்ட குறுகிய நேரத்தில்!
உயிர்களிடத்தில் அன்பு செலுத்த!
கற்றுக்கொள்...!
பாகுபாடு பார்ப்பின்!
அதற்கும் உன் நாட்டிலேயே!
உன்னை எதிர்க்கவும் மக்கள்!
இருப்பார்கள் என்பதையும்!
மறவாதே என்றென்றும்

அப்பாவின் கோபம்

ஜே.பிரோஸ்கான்
இறப்புக்கு வந்தவர்களில் சிலரை!
தன் கடைசி நாளில் அப்பா!
பார்த்திருக்கவில்லை.!
உசுரோடு இருக்கும் போதோ!
நோய்மையில் சுருண்டு பாய்!
படுக்கையாகியிருக்கும் போதோ!
வராத கூடப்பிறந்தவர்களும்,சொந்தங்களும்,!
நெடு தூரக்கிராமத்திலிருந்து வந்து!
கண்ணீர் வடிப்பதை அப்பா உயிர்த்திருந்தால்!
கண்டித்திருப்பார்.!
ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட!
வழியில்லாத படி படுக்கையாகி!
இருக்கும் போதும்,!
தனக்கு நான்கு ஊர் கழித்து!
உறவுகளிருப்பதாக சொல்லவேயில்லை.!
அம்மாவும் அப்பாவின் உணர்வுக்கு!
கட்டுப்பட்டவள் தான்.!
மூச்சு கூட விடவில்லை அம்மாவும்,!
இது பற்றி.!
தலையில் அடித்தடித்து கதறும்!
என் அப்பம்மாவை பார்த்து!
கடைசியாய் பார்த்துக்குங்கே உங்க,!
பிள்ளையின் முகத்தையென்று சொல்லும் போது.!
அப்பம்மா தன் தலையை உயர்த்தி!
பரிதாபமாக என்னைப் பார்த்தப்போ?!
அப்பா என்னை கோபத்தோடு பார்த்ததை!
நான் கவணிக்கத் தவறவில்லை

ஆல மரத்துப் பேயும் அம்மம்மாவும்!

ஜே.பிரோஸ்கான்
ஊர் வடக்கு எல்லைப்பக்கமாக!
ஓங்கி வளர்ந்து நின்ற அந்த மரத்தில்!
பேய்கள் காய்த்திருப்தாக அம்மம்மா!
சொல்லும் கதையில் பயமிருக்கும்.!
ஆலை மரத்தைத் தாண்டிப் போய்தான்!
தாவணிக் குமரிகள் குடி நீர்!
இரைத்து வர வேண்டுமென்பதாகவும்,!
எங்க இன்ஜினியர் மாமா கணிதப்பாடம்!
கற்க கஷ்டப்பட்டு போனதெல்லாம்!
அந்த ஆல மரத்தை தாண்டித் தானாம்.!
ராத்திரி வௌவால்களின்!
சப்த மொழிகளை பேய்கள்!
ரகசியமாய் அறிந்து கொண்டதாகவும்,!
அம்மம்மா சொல்லும் கதை பயங்கரம்.!
நிசி நாய்களின் ஊளையில்!
வௌவால்களின் சப்தம் அடங்கிப்போவது பற்றி!
அம்மம்மாவிடம் கேட்டால்?!
பேய்களின் திருவிழா நடந்தேறுவதாக!
அம்மம்மா மொழிவா.!
இத்தனை கதையையும் அம்மம்மா!
சொல்லக்காரணம்.!
அந்த ஆல மரத்துக்கிளை விழுதில்!
ஒரு தடவையேனும் ஊஞ்சலாட வேண்டுமென்று,!
பகல் உணவின் போது,!
அம்மாவிடம் கேட்டதையும், குமரிப் பெண்ணாய்!
நடக்க கத்துக்கோயென்று அம்மா கண்டித்ததையும்,!
அம்மம்மா செவியுற்றுருக்க கூடும்.!

படுக்கை சிலுவையில்

கோகுலன்
வீசத்தொடங்கிவிட்ட !
அதிகாலை வெளிச்சத்தென்றலில்!
மெள்ள அசைந்தாடுகின்றன!
சாரளத்தின் கண்ணாடி சீலைகள்!
கொல்லைப்புற வேலியின்!
குருவிகளின் இசையருவியில்!
சில்லிடுகிறது செவிப்பறை!
கடலின் நுரைகளை நாற்புறமும் !
கரை சேர்க்கும் அலைகளாய்!
மொட்டவிழும் மல்லிகையின் !
மணத்தை திசைகளில் பன்னீராய்!
தெளிக்கிறது குளிர்காற்று!
நள்ளிரவில் வீடுதிரும்பும் !
பனித்துளி கணவனுக்கு!
பிரியத்துடன் விடைகொடுக்கும்!
பசும்புல் பத்தினிகள்..!
எழுந்து ரசிக்க விரும்பாத !
எத்தனையோ இதயங்களை!
மேலும் சில இரும்பாணிகள் கொண்டு!
படுக்கை சிலுவையில் அறைகிறது !
சோம்பல்!!

தொலைவின் அருகாமைகள்!

கோகுலன்
எங்கோ நகர்ந்துகொண்டிருக்கும் !
அதே நிலவு இங்கும் !
இந்த குளத்திற்குள்ளேயும் தான்!
மழையில் அழும் வான்விழிகளின்!
வண்ணவில் புருவங்கள்!
ஒவ்வொரு அருவிக்கரையிலும் தான்!
யாருமற்ற நள்ளிரவின் நிசப்தம்!
ஒவ்வொரு ஆரவாரத்தின் !
பிரித்துப்பார்க்கப்படாத மையத்திலும் தான்!
எங்கோ என நினைத்திருக்கும்!
அந்த முடிவில்லாத ஒன்று!
தனித்த நமக்குள்ளும் தான்.!
தொடுவானத்தின் அக்கரையில் !
கையில் விளக்குடன் !
காத்துக்கொண்டிருக்கும் நீயே,!
என்னினும் நெருக்கமாய் அமர்ந்துகொண்டு!
எனக்குச் சொல்கிறாய்..!
தொலைவின் அத்தனையும் !
அருகாமையிலும் சாத்தியம்தான்!!

துளிகளே தூண்களாய்

கோகுலன்
கருகிப்போகும் பயிர்களுக்கும்!
உருகிப்போகும் உயிர்களுக்கும்!
ஊட்டத்தின் ஆதாரமான மழைத்துளிகள்!!
வாழ்வின் உயர்வுக்கும்!
உலகின் வளமைக்குமான பாதைகளில்!
வழிநடத்தும் உழைப்பின் !
வியர்வைத்துளிகள்!!
சாலையோரம் முதியோரை!
பிச்சையெடுக்கும் சிறுவர்களை காண!
கருணையுடன் பொங்கிவரும் !
கண்ணீர்த்துளிகள்!!
சந்ததிகள் விதைத்திடும் !
உயிர்த்துளிகள்..!
கவலைகளின் மருந்தாய் !
மழலை முத்தத்தின் எச்சில்துளிகள்..!
என,!
துளிகள்தான் தூண்களாய்!
தாங்கிநிற்கின்றன இந்த உலகை!!

உறவுகள்

புவனா பாலா
நம்மிடமிருந்து
பெற்றதனைத்தும் மறந்துவிட்டு!

நாம் அவர்கள் அன்பில்
அசரும் நேரம்...

தங்கள் நாக்கு உலர...
வார்த்தைகளை உதிரவிட்டு!

நம்மை அலறவைக்கும்
உதற முடியாத உடன்படிக்கை!