தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நேசம்

கவிரோஜா
பார்த்தவுடன்
மனதிற்குள் உன்னோடு
உரையாடிக்கொண்டே..
மௌனமாய் கடந்து போகிறேன்..
ஒவ்வொரு நாளும்
உன்னை மட்டுமல்ல;
உன் மௌனத்தையும் நேசிப்பதால்..

எதிர்பார்ப்பு

கவிரோஜா
காத்திருக்கிறேன்…
குறுந்செய்தியாய் உன்னிடம்
இருந்து வருபவை எல்லாம்…
உன் குரலாக என்னோடு..
உரையாடும் என்று...

தேடுவது

செண்பக ஜெகதீசன்
வாலிபம் என்பது !
வணங்காமுடி, !
அது !
வானைப் பார்க்கிறது.. !
வயோதிகம் !
வளைந்து மண்ணைப் பார்க்கிறது- !
தொலைத்துவிட்ட இளமையைத் !
தேடிப்பார்க்கிறதோ…!!

கனவும் நனவும்

செண்பக ஜெகதீசன்
வானம் பொத்துக்கிட்டு !
ஊத்துது.. !
வரப்பும் தண்ணியில !
மூழ்குது.. !
வயலும் குளமாத் !
தெரியுது.. !
தெருவுல தண்ணியும் !
ஓடுது.. !
தேரிக் காட்டிலும் !
தேங்குது- !
தெரிந்தது இப்படி !
கனவிலே, !
வறண்டு கிடக்குது !
வெளியிலே, !
வாங்க வேண்டும் !
தண்ணீரே…!!

இனிக்கும் நினைவுகள்

ஜே.ஜுனைட், இலங்கை
இனிப்பின் சுவை!
இதுதான்… சின்ன வயதில்…!
எங்கள் நினைவில்…!
சவர்க்கார முட்டையூதி!
சுவரில் வைத்து உடைத்தோம்…!
பட்டம் செய்து பறக்க விட்டோம் - அதில்!
நாமும் கற்பனையில் பறந்தோம்…!
நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம்!
மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம்!
வாழை நாரில் பூக்கள் தொடுத்து!
வீணை செய்து கீதம் இசைத்து!
கூட்டாய் விளையாடினோம்..!
முற்றத்து மணலில் வீடு கட்டி!
உள்ளே சென்றோம் உடைந்ததுவே!
வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு!
நாமும் சென்றோம் கற்பனையிலே…!
என்ன சொல்ல, என்ன சொல்ல!
எல்லாம் இன்று ஞாபகமே!
இனிப்பின் சுவையும், இன்ப நினைவும்!
இதுதான் வேறு இல்லையே.!!
களிமண் உருட்டி!
சட்டி, பானை செய்தோம்!
வேப்ப மர நிழலிலே!
அடுப்பு மூட்டி விளையாடினோம்!
இன்னும் சொல்ல, இன்னும் சொல்ல!
நேரம் இங்கு போதவில்லை!
அன்று கொண்ட ஆனந்தமே!
உண்மை, உண்மை வேறு இல்லை

குரங்கு மனம்

ரகுவரன்
விட்டுச் சென்ற காலம்
வீணாகிப் போனது!
விடியாத பொழுதெல்லாம்
பிழையென்று வசை தீர்த்தன!

இரவுப்படுக்கையிலே
நித்திரையை தேடினேன்......
மீண்டுமொரு விடியலிலே
மாண்டன உறக்கமெல்லாம்!

நொந்து போன மனம்
சிந்தித்து சொன்னது
இனியொரு விதி செய்வேன்!

அலைந்த மனம் குழைந்து நிற்க
பூட்டிய கண்களில்
தொலைந்தன காட்சிகள்!

இன்னொரு பகல்!
இன்னொரு குளியல்!
இன்றொரு வேலையென்று
சென்றன பொழுதுகள்....

அஸ்தமனத்தில் உதித்த
வீரச்சிந்தனைகள்
அடுத்த நாள் உதயத்தில்
அஸ்தமித்து போயின....
பழையபடி வேதாளம்,
முருங்கை மரம்......?

நன்றி கூறுவேன்

ஜே.ஜுனைட், இலங்கை
வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் !
எதுவும் இல்லாமல் போனது… !
இன்னொன்றை !
மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் !
மரமாக வந்து கதை பேசியது…!
இலைகளையும் பூக்களையும் !
உனக்குள் !
எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்.. !
மண்ணைப் போட்டு மூடினாலும் !
உன்னை !
மீறி வரும் சக்தி எங்கே என்றேன்…!
மறுபடியும் வித்தொன்றை !
சிதைத்தொருக்கால் பார்த்தேன்… !
மாய வரம் ஏதேனும் !
அங்குள்ளதுவா தேடினேன் -!
“வித்திலைகள்” மட்டும் தான் !
எனைப் பார்த்து முறைத்தன…., !
மற்றதெல்லாம் எனை விட்டு !
என் கண்ணை மறைத்தன… !
பூவின் நிறமேதும் அங்கு இல்லை.., !
கனியின் தீஞ்சுவையும் காணவில்லை…!!
விருட்சம் அதன் தலைவிதியை !
வித்தினுள்ளே தேடிப் பார்த்தேன் -!
ஒன்றும் புரியவில்லை…,!
ஒரு வித்தை நாட்டிப் பார்த்தேன் -!
கன்றாய் எழுந்தது !
மரமாய் விரிந்தது !
பூக்கள் சிரித்தன !
பூச்சிகள் வளைத்தன !
கனிகள் விளைந்தன.. !
என் கண்கள் வியந்தன..!
வித்திற்கு நன்றி சொல்ல !
தேடிப் பார்த்தேன் - !
காணவில்லை… !
விந்தை தான்..!, !
இறைவனுக்கே நன்றி சொல்வேன்

வார்த்தைக்குள் அகப்படவில்லை

ஜே.ஜுனைட், இலங்கை
பூக்களுக்குள் !
வாசம் எங்கே !
தேடினேன் - !
காம்பு மட்டுமே !
மீதமாகியது கைகளில்..!!
வெற்றிகளின் !
ஓரம் வரை சென்றேன், !
பெரும் கிண்ணக்குழிகளாய் !
நின்றன…!
மழை நாட்களில் !
“நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்..,!
வாழ்வின் நிலையாமை !
புகட்டின…!
சாலைகள் தோறும் !
கற்களைப் பார்த்தேன், !
மனித இதயங்களின் !
மறு வடிவம் யாம் என்றன..!
கண்ணாடி தேசத்திற்குள் !
நுழைந்தேன், !
என் நிழலைத் தவிர !
மற்றெல்லா நிழல்களும் !
ஒளிந்து கொண்டன…. !
உண்மை கொண்டு !
உலகைநோக்கினேன், !
பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம் !
பூஜ்ஜியமாகின..!
பார்வை தாண்டி !
நோக்கும் போது !
பௌதிகஅதீதம் காட்சிதந்தது.., !
வார்த்தைக்குள் அகப்படவில்லை !
அது..!!!

வாசிப்பு

கவிரோஜா
பார்வையால் என்னை தேர்ந்தெடுத்து..
விழிகளால் ரசித்து..
விரல்களால் என் பக்கங்கள் புரட்டி..
உன் மனதில் என்னை பதியவைப்பாய் என்று..
வரிசையாய் கால்கடுக்க காத்திருக்கிறேன்..உன் வாசிப்புக்காக..
இப்படிக்கு புத்தகம்.

செய்தித்தாள்

கவிரோஜா
ஒவ்வொரு நாளும்
தேடுகிறேன்
வாங்குகிறேன்
வாசிக்கிறேன்..
விரும்புகிறேன்..
விமர்சிக்கிறேன்..
கைவிடுகிறேன்..
மறுபடியும் மேலிருந்து