தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தீர்வு

கா.ந.கல்யாணசுந்தரம்
 
பிறந்தது, வளர்ந்தது
வாழ்ந்தது....என்று
நம் வாழ்க்கை எப்போதுமே
யதார்த்தமாய் இருந்தாலும்...
உள்ளம் என்ற உன்னத
உணர்வுப் பூங்காவில்
உணர்ந்தது, நெகிழ்ந்தது
மகிழ்ந்தது என்னும்
வண்ணமலர்க் கூட்டங்கள்
வாடாமல் மணம்
வீசுகின்றன...

உறவுகள், மரபுகள்
சொந்தங்கள், பந்தங்கள்
இவையெல்லாம்....
மானுடத்தின்
வரவுகள் என்றாலும்,
சேவைகளும், சிந்தனைகளின்
பகிர்வுகளும் நமது
விருதுகள் என்ற நினைவுகள்
வாழ்நாளில் ஆளுமை செய்ய...
எனது எச்சங்களுக்கு
நானே தீர்வு காணுகின்றேன்!
 

மின்வெட்டு

ஈரோடு தமிழன்பன்
இப்போது
இருளைச் சுவாசிக்கிறது ஊர்;
வெளிச்சம் விலக்கிய நரம்புகளை
மீட்டுகிறன, இதன் விரல்கள்.

இமை திறந்த
இரவின் கைகளில் இந்தப் பூமி
நிர்வாணமாய்த் தன்னை
ஒப்படைக்கிறது.

இருள்மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளா விளக்குகள்?
எங்கே அவை?

ஒளித் தூசுகள்
உதிர்ந்த இரவின் சிறகுகள்
எங்கும் விரிகின்றன.

பறிபோகாத அந்தரங்கம்
பத்திரப்படுத்தப் படுகின்றது..

விஞ்ஞானம்
நிம்மதி தேடிப் போய்
விண்ணப்பிக்கிறது இயற்கையிடம்.

வானொலி தொலைக்காட்சிகள்
தவறுகளுக்கு
மண்டியிட்டு யாரிடம் கேட்கின்றன
மன்னிப்பு?

வலிகளி வார்த்தைகளைக்
காயங்கள்
உரக்க உச்சரித்தாலும்,
நோயாளிகள்
பாயில் அமர்ந்த மரணம்
அஞ்சாதீர்கள்
அவசரப்படவில்லை நான் என்கிறது.

மூடப்பட்டன
பாடநூல்கள் எனும் மகிழ்ச்சியில்
கல்வி
கலந்துரையாடுகிறது மாணவர்களோடு!

தேர்வு
வெப்பங்கள் மீது பாய்கின்றன
ஈரக் கறுப்பு அலைகள்!

விடைகள்
விளக்குகள் அணைந்த தருணம் பார்த்து
வெளிப்படுகின்றன.

கனவுகளுக்குத்
திறந்து வைக்கப்பட்ட அறைகளில்
காதலர்கள்
பரிமாறிக் கொள்ளும் முத்தங்களைச்
சிந்தாமல் சிதறாமல்
சேகரித்துக் கொள்கிறது இருள்;
இதற்கென்றே
இருள் தூங்காமல் இருக்கிறது.

வெளிச்சத்தால்
தண்டிக்கப்பட்ட இரவு
இதோ
விளையாடிக் கொண்டிருக்கிறது
விடுதலையாகி!

(நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

எட்டாவது நரகம்

சோலைக்கிளி
நீ நரகத்தைப்பற்றியோ அச்சப்படுகிறாய்?
அது இலகுவானது.
அங்கே மலைப்பாம்புகள் ஆயிரமாய் இருந்தாலும்
அஞ்சத் தேவையில்லை அதைப்பற்றி.

வேதம் சொல்வதைப் போல
சீழிலான ஆறுகளும்
செந்தீயில் காய்ச்சிய ஈயக் குழம்புகளும்
பாவ ஆத்மாக்களுக்காய்ப் படைக்கப்பட்டிருக்கலாம்.

செவிட்டு மாலிக் அதன்
அதிபதியாகி
பலநூறு தடவைகளுக்க ஒரு தடவை
"பேசாமல் கிடவுங்கள்" என்று
கட்டளை இடலாம்.

அழு குரல்கள்
சொர்க்கத்தில் உள்ளோரை சிரமத்துக்குள்ளாக்கி
அவர்களின் கோபத்தையும்
சாபத்தையும் சம்பாதித்தும் கொள்ளலாம்.

நீ நரகத்தைப்பற்றியோ அச்சப்படுகிறாய்?
நான் அதைப்பற்றி நினைப்பதே கிடையாது.

ஏழு நரகங்கள் உண்டென்று சொல்வார்கள்.
நாம் கொடுமைகள் நிறைந்த
ஏழாவது நரகம்தான் சென்றாலும்
பின்னொரு நாளில் மன்னிப்புக் கிடைக்குமாம்...

நான் நினைப்பதும்
ஒரு பொட்டுப்பூச்சியைப்போல் பயந்து சாவதும்
மன்னிப்பே கிடைக்காத எட்டாவது நரகமாம்
இந்த உலகத்தைப் பற்றித்தான்!-சோலைக்கிளி(காகம் கலைத்த கனவு)

கண்ணாடி வளையல்கள்

ருத்ரா
நீ
ஒலித்தாலும்
உடைந்தாலும்
இனிக்கும்.

கண்ணாடி
வளையல்களிலிருந்து
கண்ணாடி விறியனா
தீண்டியது ?
மூச்சை நிறுத்தியது
உன் ஓசை.

உன் ஓசைப்பூக்கள்
உதிர்க்கும்
மகரந்தமே
என் அன்றாட உணவு.

கண்ணாடி ஓசைக்குள்ளும்
கனமான சம்மட்டிகளா ?
என் இதய நாளங்கள்
கொல்லம்பட்டறை ஆனது.
ஆனாலும்
துடித்து துடித்து
அது அடித்தது
அத்தனையும்
அந்த மயிற்பீலியின்
அசைவுகள் அல்லவா ?

தாஜ்மகாலை
உருக்கிச்செய்ததில்
உன் ஓசையில்
காதலின்
உளிச்சத்தங்கள்.

சோழிகளைக்
குலுக்கி
எப்படி
இப்படி ஒரு
புதை குழி
வெட்டினாய்.

அமிழ்ந்ததும்
புரிந்து கொண்டேன்
அத்தனையும்
அமிழ்தம் என்று.

தைரியம் தான்!
கண்ணாடி
வீட்டுக்குள்ளிருந்து
கல்லெறிகின்றாய்.
ஏனென்றால்
நீ
உடைந்தாலும்
நொறுங்கிப்போவது
நான் தானே!

உன் ஒலியை
என்றோ கேட்டது.
அது என்னை
விரட்டிக்கொண்டேயிருக்கிறது.
கடந்து போகட்டும் என்று
நின்று பார்த்தேன்.
அது இப்போது
என்னை
இழுத்துக்கொண்டே
ஓடிக்கொண்டிருக்கிறது.


எந்த ரிஷி சபித்தது ?
செம்மங்குடிகளும்
பாலமுரளிகளும்
உன் கண்ணாடிக்
குருகுலத்தில் கிடந்து
இதன் ஓசைகளில்
'சாதகம் '
செய்யவேண்டும் என்று ?

உன் ஓசைகளின்
பின்னேயே சென்று
நின்றேன் ஒர் இடம்.
இன்னும் உனக்கு
நாலு ஜோடி வளையல்கள்
விலை கேட்டேன் அவனிடம்.

'ஜோடியாய் எல்லாம்
கிடைக்காது '
என்று சொல்லிச் சிரித்தான்
கடைக்காரன்.

ஏனென்றால்
நான் போய் நின்றது
' ஒரு வீணைக்கடை '.

உன் ஓசையின்
கைதி நான்.
நன்றாய் உற்றுப்பார்.

உன்
கண்ணாடி வளையல்கள்
என் கை விலங்குகள்.

கிளு கிளு வென்று
எனக்குள்
'கிடார் ' வாசித்து
கிறு கிறுக்க வைத்தது
போதும்!

'மன நல மருத்துவ '
மனைக்கு
நான் போகும் முன்
என் மனதுக்குள்
வந்து விடு.

நீ
கிளப்பிய ஒலிகள்
வெறும்
'டெசிபல் 'களாய்
காற்றில் கிடந்தபோது
ஒரு நாள்
நான் அதில்
இடறி விழுந்தேன்.

வீணை இடித்து காயமா ?

இந்த விழுப்புண்ணுக்கு
வானவில்லில்
ஒரு 'பேண்டேஜ் ' போட்டேன்.

கனவை
விரித்துப் படுத்து
புரண்டு கொண்டிருக்கிறேன்
உறக்கம் வராமல்.

என் கற்கோட்டைக்குள்
கலகம் மூட்டும்
கண்ணாடிச்சிப்பாய்களே.

உங்கள் ராணியிடம்
சொல்லுங்கள்
ஓசை அம்புகளால்
நான் வீழ்ந்து விட்டாலும்

இந்த 'ராஜ்யத்தில் '
தோல்வியின் அர்த்தமே
வெற்றி தான் என்று

தமிழ்மனம்

நளாயினி தாமரைச்செல்வன்
கானல் நீரா?!
காவியமா?!
கடுகதியாய் போகும்
எண்ண ஓட்டமா?!
நினைவுகளுக்கு
சக்கரம் பூட்டிய வேகமா?!

குழந்தைத்தனத்துள் தெரியும்
குதுகலமா?!
இதுவரை யாருமே
வெளிக்காட்டாத
உயரிய சிந்தனையா?!
யாருமே அனுபவித்திராத
இன்ப ஊற்றா?!

என்னவென்றே இனம் காணமுடியாத
ஒரு தளுவல் !!
காற்றில் பறக்கும் அனுபவம்
மலையின் உச்சியை
தொட்டுவிட்ட அனுபவம்
யாரும் அருகில் இருப்பதை கூட
மறந்த நிலை

இவை எல்லாம்
சின்னத்தனமாய் தெரியவில்லை
ஆனாலும்

சமூகத்திற்கு பயந்த சாபக்கேடாய் மனதுள்
தொட்டுவிட்ட தொட்டாச்சினுங்கியாய்
தன்னை மறைத்துத்தான் கொள்கிறது.

அப்பப்போ தன்னை இனம் காட்டும்
அந்த தொட்டாச்சினுங்கிக்கு உள்ள மனசு கூட
பாவம் மனித மனசுக்கு
தனக்குள் இருக்கும்
மனசை காட்ட
சந்தற்பம் கிடைக்காமலே போகிறது

மஞ்சு விரட்டு

ஈஸ்வரி
காலையில் எழுந்ததும்
பிள்ளை போல்
என்னை குளிப்பாட்டி
கொம்பு சீவி
நெற்றிக்கு திலகமிட்டு
பொட்டிட்டு பூ வைத்து
பலூன் கட்டி அலங்கரித்தாய்!

இனிப்பான புது பொங்கல்
திகட்டாத செங்கரும்பு
என தடவி தரும் போது
நினைத்து விட்டேன்
என் வளர்ப்பு அன்னை
என்று உன்னை!

ஒரு மணி நேரத்தில்
காட்டி விட்டாய்
வாடி வாசலில்
நீ யார் என்று!

கேட்டேனா! உன்னிடம்
இந்த புது சோறும்
புது பகட்டும்
எப்போதும் போல்
பருத்திக்கொட்டையும்
புண்ணக்கும்
தந்துவிட்டுப் போயேன்!

வயிற்றுக்கு சோறுட்டு
வளமாக வளர்த்து விட்டு
எதற்காக வருடம்
ஒரு முறை உன்
உயிருக்கு நீயே
உலை வைக்கிறாய்

இருட்டுப் பன்றிகள்

வ.ந.கிரிதரன்
பன்றிகளிலும் பல்வேறு
வகைகள்.
காட்டுப் பன்றி! கடி
முட் பன்றி! வீட்டுப்
பன்றி! விதம் விதமான
பன்றிகள்!
உள்ளேயொருவிதம்.
வெளியில் இன்னுமொருவிதம்.
சாக்கடைக்குள்
சஞ்சாரிப்பதில்
ஆனந்திக்குமிவை.
காட்டுப் பன்றிகள்
போடுமாட்டத்தில்
ஆடிவிடும் பயிரினங்கள்
நிற்குமே
வாடி.
விடியும் வரை தொடரத்தான்
போகின்றதிவற்றின்
வாசமும் நாசமும்.
வயற்காரன் வரும்வரை
இவற்றினாட்டத்தைக்
கட்டுப்படுத்துவார்
யாருமிலர்.
இரவின் இருளகற்ற
இரவி
வரும் வரையில்
தொடரத்தான்
போகின்றது இவற்றின்
ஆட்டமும்.
அதுவரையில்
மரணத்துள் வாழ்வதைப்
போல்
பன்றிகளுடனும்
வாழப் பழகிக்
கொள்வோம்.
- வ.ந.கிரிதரன் ( நன்றி : திண்ணை )

மின்ன‌ல் க‌யிறுக‌ள்

ருத்ரா
நேற்று வரை ஒடக்கான் அடித்தவன்
இன்று நான் ஒரு ஒடக்கான்.
என்னை அடித்தது
அவள் கூரிய விழிகள்.

நாக்கில் தொட்டுக்கொண்டு
தரையில் பம்பரம் குத்தினேன்.
கயிறு என் கையில்.
இன்று நான் தலையாட்டும் பம்பரம்.
கயிறு
அவள் வளையல் ஒலிகளில்.

கோலிக்குண்டுகள் உருட்டி
எத்தனை பேர் முட்டிகள்
பெயர்த்தேன்.
இன்று
கண்ணீர் முட்டி
கனவுகள் முட்டி
அவ‌ள் நினைவுக‌ளில் மோதி
ப‌ல‌த்த‌ காய‌ம்.
அவ‌ள்
பார்வையே விப‌த்து ஆகும்.
அவ‌ள்
பார்வையே "பேண்டேஜ்" போடும்.

யார் கேட்டார்க‌ள்
ப‌ம்ப‌ர‌மே இல்லாம‌ல்
ப‌ம்ப‌ர‌ம் விடும்
"ப‌தினாறு" வ‌யதின்
இந்த‌ மின்ன‌ல் க‌யிறுக‌ளை?

உள்ளூர் அழகி

முகவை சகா
ரெட்டை  ஜடை பின்னலுடன் புத்தகம் சுமந்து
வருவாயே அந்த வயதிலேயே
அறிமுகம் ஆகிவிட்டாய் என் காதலுக்கு நீ!

நீயாய் வளர்த்து நீயாய் பறித்து நீயாய் கோர்த்து
உன் கூந்தல் சூடும் பூச்சரம் தோற்றுத்தான் போகும் கடைசியில்
உன் புன்னகைக்கு

என் கடைக்கு வந்து கால் கிலோ சர்க்கரை வாங்க
அரை கிலோ சிரிப்பாயே
ஒரு மூடை சர்க்கரைக்கும் இனிப்பு தீர்ந்துவிடும்

உன் அக்காவின் திருமணதிற்கு தாவணியோடு நின்றாயே
மாப்பிள்ளையின் தம்பியாய்
மறுபிறவி கேட்டது மனசு

ஏழாம் முறையாய் நான் கொடுத்த காதல் கடிதத்தை
கிழித்து போட்டு கன்னத்தில் அறைந்து சொன்னாயே
"நீ ஒரு ஏழை, பிழைக்க வழி பார்" என்று

ஏழரை சனி என்று வெறுத்தாலும் பரவாயில்லை
ஏழை நீ என்று வெறுத்து விட்டாயே

இன்று நரை முடியுடனும், இரண்டு பிள்ளையுடனும்
உன் பணக்கார கணவன் பாதியில் விட்டதாய்
என் அம்மாவிடம் சொல்கிறாயே

என் வறுமை வசதியானது
உன் வசதி இன்று உன் வாழ்வை குடிக்கிறது
என் மனைவி சொல்கிறாள் என்னிடம்
"ஏன் அந்த அக்கா என்னை மட்டும் ஏக்கமாய் பார்கிறார்கள்
அருகிலே போனால் விழகி போகிறார்கள் " என்று

மௌனமாய் சிரித்தேன்
நான் உன்னிடம் வாங்கிய ஏழாவது அறை
இன்று ஆற துவங்கியது

தனிமை

கே.ஸ்டாலின்
மரத்தடியில் விளையாடிய சிறுவர்கள்
வீடு திரும்பினர்
வீடு திரும்புதலென்பது
விளையாட்டின்
எந்த விதிகளுக்குட்பட்டதென்ற
விளங்காத குழப்பத்தில்
வெயிலை வெறித்தபடியுள்ளது
நிழல் மட்டும் தனித்து

வளர்ந்த குழந்தைகளை பார்த்தபடியிருக்கும்
உடைந்த பொம்மைகளின்
இமையா விழிகளில்
உறைந்திருக்கும்
உலகத்துத் தனிமையின்
உச்சபட்ச அவஸ்தை