அமரர்.அருள் மா.இராஜேந்திரன் - கவிதாஞ்சலி
மன்னார் அமுதன்
பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே
ஆண்டுகள் நாற்பதாய் அருள்மா புரிந்த
அரும்பணி உரைப்பது மன்றக் கடமை
ஆற்றிய பணியில் குறைநிறை அளந்து
குற்றம் பரப்புதல் சிலரது மடமை
அருள்மா அவர்கள் அணிந்தது வெண்மை
ஆடைகள் போலவே உள்ளமும் தும்பை
அடியவன் தோளிலும் அருள்மா கைகள்
ஆதரவாகத் தொட்டது உண்மை
வருவார் அமர்வார் வார்த்தைகள் மொழியார்
வாசலில் காண்கையில் புன்னகை மொழிவார்
இலக்கிய உரைகளை இயம்பி அமர்கையில்
இனிதிலு மினிது இயம்பிய தென்பார்
அருளின் கதைகள் எல்லாம் விதைகள்
கருப்பொருள் செறிவைக் கதைத்தனர் பலபேர்
கதைகளின் மாந்தர் கண்ணில் படுகையில்
விதைகளில் பலது விருட்சமாய் வளரும்
வற்றிய கிணற்றில் தவளைகள் போலே
வாடயிலே நீர் ஊற்றினீர் எம்மில்
பற்றிய பிடியைத் தளர விடாதே
வருவாய் விரைவாய், உயர்வாய் என்றீர்
தூற்றிப் பழகா போற்றும் குணத்தார்
ஆற்றிய பணிகள் அத்தனை அருமை
கற்றதை எல்லாம் கைமண் அளவாய்க்
கருதியே அருள்மா கதைத்தது அருமை
பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்மா சிறப்புகள் எல்லாம் மெய்யே
-