தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காணும் கடவுள்கள்

வி பிட்சுமணி
தொட்டில் சேலையை விலக்கி
கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும்
மகளை பார்த்து கொண்டிருந்தேன்

தூங்கிற பிள்ளையை பார்க்காதே
என்றாள் அம்மா

திடீரென தூக்கத்தில்  சிரித்தாள்
கடவுள் வந்து  சிரிக்க வைக்கிறார்
என்றாள் அம்மா

திடுக்கென்று  அழுது தூங்கினாள்
காத்து கருப்பு  பயம் காட்டுகிதென
தொட்டிலின் கீழ் இரும்புதுண்டை
வைத்தாள் அம்மா

மீண்டும் என்  மகள் அழ
அடுக்களையிலிருந்து  ஓடிவந்து
கச்சை பால் கொடுத்தாள்
என் மகளின் அம்மா

மின்னல் விழுதுகள்

ரசிகன்
ஒரு மஞ்சள் பூசிய
மாலை வேளை சந்திப்பில்...
வெள்ளுடை விலாவரியாய்...
வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு
நெளிந்து கொண்டிருந்தது
அவளும் காதல் சார்ந்ததவையும்!
பக்கவாட்டில்
பசிக்கடங்கிய மழலையாய்
மடி சாய விழைந்தபடி நான்!
இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்
மீறப்பட்ட வண்ணம்...
சலித்துப்போயிருந்தன
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பேச்சுக்கள்...
ஏக்கங்களின் மிகுதியில்
மின்னல் கீற்றுகள்
உள்ளுக்குள்
வெட்டவெளிச்சமாய் பீய்ச்சியடிக்கப்படவும்
விரசங்கள்
வீரியம் காட்டிடவும்
சட்டென சுதாகரித்தவளாய்
எழுந்து நடை பழகுகிறாள்...
நிஜத்தை மறந்துவிட்ட நினைப்பில்
வந்தவள் என் பக்கம் வந்து
இடைக்கும் இடது கைக்குமான
தன் இடைவெளியை
என் வலது கைகொண்டு
இறுக்க அணைத்து நிரப்பியபடி
மீண்டும் நடைபயில்கிறாள்

காதல் கடிதம்

நதி
என் காதலை
உன்னிடம் சொல்ல
ஆசைப்பட்டே
கடிதம் எழுதினேன்.

உனக்கு புரிந்துவிடுமோ
என்று பயந்தே
அதைக்
கவிதையாய் எழுதினேன்.

கவிதை புரிந்தால்,
என் காதல் புரிந்தால்,
உன்னைத் தந்துவிடு
பரிசாய் எனக்கு.

கவிதை மட்டுமே
புரிந்தால்
என் வரிகளை
வாழ்த்திச் சென்றுவிடு.

கவிதையும் புரியாது போனால்
என் மடலோடு
என்னையும் சேர்த்து
என்னிடமே தந்துவிடு.

வாய்மொழி ஏதுமின்றி
விலகிச் சென்றுவிடு,
விடைபெற வேண்டித்
திரும்பியும் பாராதே.

அன்றி, என்னிடம்
கவிதையின் (என் காதலின்)
பொருள் மட்டும்
கேட்டுவிடாதே!

என்னுள்
புதைந்தே
இறந்துவிடுவேன்
நான்

(செத்த) குளம்

எழிலி
புகைப் படமாய்
நினைவுகளைச்
சுமந்து கொண்டு!

ஊரின் தொடக்கத்திலே
ஒத்தையடிப் பாதையின்
தாயாகிப் போன  குளம்!

பேருந்து நிறுத்தத்திற்கு
எங்கள் ஊரின்
பெரிய அடையாளம்!

பின்னால் பனை மரங்கள்!
வலப்புறம் கரும்புக்
கொல்லை!

காவலுக்கு முனிசாமியும்
கத்தாழையும் கள்ளியும்!

போய் வரவா? எனக்
கேட்கும்  ஆலமரக் காத்து!

இப்படியெல்லாம்
எதுவும்
இல்லைஇப்பொழுது!

வேலை தேடி
வெளியூர் போகும்
இளவட்டம் போலே
வெறிச்சோடி
காணாமல் போனது !

"குளம்"

பாட்டன் தலைமுறைக்கு
நிரம்பி  வழிந்தது!
தகப்பன் தலைமுறைக்கு
தண்ணீர் வற்றி
தரை வரை தெரிந்தது!
என் தலைமுறையில்
எப்போதோ வரும்
மழையில் தலை
நனைத்தது!
என்- பின் தலைமுறையில்..........!
யாருக்குத் தெரியும்?

அடுக்ககம் ஆகலாம்!

ஊர்க் குப்பையைக்
குத்தகைக்கெடுத்த
குப்பைக் கிடங்கு ஆகலாம்!

பிணங்கள் எரிக்கும்
இடுகாடாகலாம்!

ஏதோ ஓர் தொழில்
நுட்ப நிறுவனத்தின்-
வாகன நிறுத்தம்
ஆகலாம்!

கனிம நீர்
தயாரிப்பின்  களம்
ஆகலாம்!

எப்படியாயினும்
'செத்த' குளத்தில்
சில்லறை  பார்ப்பார்கள்!

மெத்தப் படித்தவர்கள்;
இயற்கையின்
மேன்மை
மறந்தவர்கள்!

செத்தும்'கொடுக்கும்'
குளம்!  சருகுகள்
பரந்து விரிந்த களி
மண் படிமம்!

கனிந்த பூக்கள்

முத்து கருப்புசாமி
சாலையோர டீக்கடை
நாள் முழுவதும்  உயிரோட்டமுடன்

உள்ளே....

பச்சை சட்டை
பதினைந்து ரூபாய்...
பச்சிளம் பாலகனின்
பளிச்சென்ற குரல்

புத்தகங்களை சுமக்கும்
கைகளில்
எச்சில் தட்டும் டம்ளரும்

மனதில் பறக்கும் பள்ளிக்கூட பறவையின்
சிறகுகளாய்
பாக்கெட்டில் பேனா

வலது கையில் சிலேடும்
இடது  கையில் நண்பனுமாய்
பள்ளி செல்லும் காலமிது - மாறாக
குடும்ப பாரம் சுமக்கிறான்
குடும்பஸ்தனாக!

தடம்மாறிய  பயணத்திலாவது  
திரும்ப வழியிருக்கும்
தடம்புரண்ட  பயணத்தில்  
விபத்தொன்ரும்  விதிவிலக்கல்ல!

வெளியே...

இலையோடு  கனி சுமக்கும்
கிளையொன்று
கூரை சுமக்கிறது!

அநேகமாய் வேர்விட்டிருக்கும்
மண்ணுக்கடியில் முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
வேரின் நீளம் நன்றாய் தெரிகிறது
புதிதாய் அரும்பியுள்ள அரும்பில்!

வசந்தத்தின் மடியில் காய்கனியுடன்
உறவாடும் காலமிது - மாறாக
கூரை சுமக்கிறது
தனி மரமாக!

வேதியியல் மர்ற்றம் கண்களுக்கு
புலப்படாததுபோல் - கல்லாப்பெட்டியில்
பணம் எண்ணும் முதலாளி

ஆம்!
கூரைக்குத்  தூணெடுக்கத்  தெரியாதவனுக்குக்  கூலியாள்
மட்டுமென்ன  விதி  விலக்கா

நான் இறங்கிச் செல்வேன்

வையவன்
முதல் மாடியின் கைப் பிடிச்சுவர்
பிடித்து நான் கவனிப்பேன்
எதிர் மரங்களில் அமர்ந்து
காக்கை நேசர் ஒருவர் பிட்டுப் பிட்டு
எறிகிற இட்டிலித் துண்டுகளுக்காக
காக்கைகள் தம் மொழியில்
கூவிக்கரைந்தே நன்றி தெரிவிப்பதை,
உயரத்தில் இருந்து தாழ்ந்து அவை
கொத்திச் செல்வதை ,
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
எல்லாம் தீர்ந்ததும் வரும்
விளங்காத மொழியை
வீம்புக்குக் கற்றுக்கொண்டிருக்கும்
என் மகளின் பள்ளிக்கூட பஸ்
இறங்கிச்செல்வேன் அவளை
அனுதாபத்தோடு அனுப்பி வைக்க

மாலை வந்துவிடும்
நான் வேலை முடிந்து திரும்பும் வேளையில்
அதே மரங்களில் இப்போது புறாக்கள்;
காதலுக்குத் தூது விட்ட
மன்னர்களை நினைத்தபடி
பார்த்துக் கொண்டே நிற்பேன்
நாட்டியம் ட்யூஷன் முடித்து வரும்
மகளின் வரவை எதிர்நோக்கி
சைக்கிளில் பூ விற்பவன் மணியடிப்பான்.
சாலை ஓரத்துப் புல்
அசையும் காற்றில்.
மூழ்கத் தொடங்கியிருக்கும்
சூரியன் மேற்கில் .
நான் இறங்கிச் செல்வேன்

தாம்பத்யம்

சோ.சுப்புராஜ்
எனக்கும் அவளுக்குமான
கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது
எங்களின் மண நாளிலிருந்து……
 
ஒருவரை நோக்கி ஒருவர்
இழுத்துக் கொண்டிருக்கிறோம் மூர்க்கமாக
முறுவல்களுடனும் முத்தங்களுடனும்…..
 
பொதுவான போட்டி விதிகள் எதற்குள்ளும்
பொருந்திப் போவதில்லை எங்களின் விளையாட்டு….
 
ஒருவரை நோக்கி ஒருவர்
நகர்ந்து விட நேர்கிறது அவ்வப்போது;
ஆயினும் சீக்கிரமே இயல்புக்குத் திரும்பி
இழுவையை தொடர்கிறோம்…..
கை தட்டி ஆரவாரித்தும்
கண்ணீரால் காயப்படுத்தியும் எங்களை
உசுப்பேற்றி விடுகின்றன உறவுகளும்….
 
மையக் கோடு மறைந்தாயிற்று
இழுக்கும் கயிறும் இற்றுக் கொண்டிருக்கிறது;
இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்
கால்களும் தளர்ந்து போயின…..
 
இருந்தும் இழுவையின் பிடி மட்டும்
இன்னும் இறுகிக் கொண்டு தானிருக்கிறது…..
 
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு
வெகுதூரம் வந்து விட்டோம்
இலக்குகள் எதுவுமின்றி
பழக்கத்தால் தொடர்கிறோம்;
வெறும் பாவணைகளிலும்…….!
 
– சோ. சுப்புராஜ்

வேழ விரிபூ

ருத்ரா
வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின்
மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல்
எல்வளை நீள அளைஇ ஒளிக்கும்
எலிகள் தின்ற காய்நெல் பழனம்
பாசடை பைம்புனல் குண்டுநீர் ஆம்பல்
குவித்தன்ன காட்டி விரிகிளர் ஊட்டும்
நீள்விழிக்காடு தீப்பெய்த நீழல்
நடுக்குறூஉம் காட்சி நலன் அழி செய்ய‌
மாவதிர ஓட்டிய மணித்தேர் வெற்ப‌ன்
கடிவிசை வலிப்ப கதழ்பரி மள்ளல்
துள்ளல் கூட்டி ஆறுவடுப்படுத்தி
அலரி ஆட்டிய அந்துணர் உள்ளி
நுண்சிறை வண்டினம் நுவல் இமிழ்தந்து
நுண்சொல் உரைப்ப நுழைபு மெய் விதிர்த்தான்.
வேழ விரிபூ விரியுரை இஃதே.
கடல்நுரைபோல் யான் அலைபடுகின்றேன்.
கண்விழி இருந்தும் க‌ல்ல‌ன் ஆகி
விரைவு ஆற்றாய் அலைவுறும் நெஞ்சு
அறிகில்லையாகி. ஊஊர்பு உருள் தேர் உருட்டி
நோதல் செய்தாய்!பொறிக்கல் நாட!
விரைதி விரைதி வேய்புரைத் தோள!
பாலாவி அன்ன பாம்புரி போர்த்து
பசலை பாய மாயும் மென் றடந்தோள்.

- ருத்ரா

பொழிப்புரை
------------------
வ‌ள்ளிக்கொடி ப‌ட‌ர்ந்த‌ நில‌த்தில் வெண்மையான‌ சிறுபூக்க‌ளுட‌ன் கிட‌க்கும்
கிழ‌ங்குக‌ளை ம‌ண்குழி ப‌றித்து வ‌ளைந்த‌ ப‌ற்க‌ளையுடைய‌ காட்டுப்ப‌ன்றி
தின்ப‌த‌னால் ஏற்ப‌ட்ட‌ வ‌ளைகளில் முற்றிய‌ நெல் விளைந்த‌ வ‌ய‌ல்களின்
எலிக‌ள் மேய்ந்து ஒளிக்கும்.ப‌ச்சைஇலைக‌ள் ப‌ட‌ர்ந்த‌ ஆழ்ந்த‌
நீர்த்த‌டாக‌ ஆம்ப‌ல் பூக்க‌ள் குவிவ‌து போல் காட்டி விரிந்து
கிள‌ர்ச்சியை ஊட்டும்.அவை ஆம்ப‌ல்க‌ள் அல்ல‌.அவ‌ள‌து நீள் விழிகளவை!
காத‌ல் நெருப்பின் சுட‌ர்போல் காட்டி  அந்த‌ தீக்குள்ளும் ஒரு த‌ண்ணிழ‌ல்
புதைத்து த‌லைவ‌னை மிக‌ப்பாடாய் ப‌டுத்தி ந‌டுங்க‌ச்செய்து
விடும்.ம‌ணித்தேர் ஒலிக்க‌ குதிரையை பூமி அதிரும் வ‌ண்ண‌ம் ஓட்டி வ‌ரும்
அவ‌ன் க‌டும் விரைவில் வ‌ரும் குதிரையின் குள‌ம்புக‌ளால் வலிமையும்
துள்ளும்பாய்ச்சல்களும் வ‌ழித்த‌ட‌த்தை புண்ணாக்கும்.அப்போது
அக்குதிரையின் த‌லையில் சூட்டிய‌ வெள்ளைப்பூ ஆட்டி ஆட்டி(வேழ‌ம் என்ற
க‌ரும்பின் வெண்பூ)வ‌ருவ‌தில் உதிரும் பூந்தாதுகள் இருப்பதாக (எண்ணி)உண்ண
வரும் சிறு சிறு வ‌ண்டுக‌ள் அதிர்வொலி காட்டும்.அதில் த‌லைவி கூறும்
நுட்ப‌க்குறிப்பு ஏதோ ஒன்று இருப்ப‌தாக‌ த‌லைவ‌ன்
மெய்விதிர்த்துப்போனான்.அந்த‌ "வேழ‌ விரிபூ" விரித்துச்சொல்வ‌து
இதுவே...என் உள்ள‌ம் அந்த‌ வெள்ளையான‌ க‌ட‌ல்நுரைபோல் (வேழ‌ விரி பூ
போல்)பிரிவாற்றாமையால் அலைப‌டுகிற‌து.அதை அறிந்து கொள்ளாத‌வ‌னாக கண்டும்
காணாத கல் நெஞ்சனாக தேரை மெதுவாக‌ ஊரும் வ‌ண்ண‌ம் உருட்டிவ‌ந்து என்னை
வ‌தைக்கிறாயே!ப‌ச்சை ம‌ர‌க்கூட்ட‌ங்க‌ள் புள்ளிக‌ள் போல்
போர்த்திருக்கும் ம‌லை நாட‌!மூங்கில் போல‌ வ‌லிய‌ தோள்க‌ளை உடைய‌வ‌னே!
விரைந்து விரைந்து வா!பாலின் ஆவி போல் ப‌ச‌லை நோய்
(பிரிவுத்துன்ப‌ம்)என்மீது பாம்புச்ச‌ட்டையாய்
போர்த்திக்கொண்டிருக்கிற‌து.அத‌னால் என் அக‌ன்ற‌ இள‌ந்தோள்க‌ளும்
மெலிந்து வாடுமே.(யான் என் செய்வேன்?)

நிறம் மாறும் பூக்கள்

மோகன்
உணவிற்குப் பின்
உறக்கத்திற்கு முன்
உறக்கத்திற்குப் பின்
நீராடும் முன்
நீராடிய பின்
ஒவ்வொரு மணிக்கும்
நீ எழுப்பிய ஒலி
என் செல்போனில்!

ஒலியற்ற
அதிர்வுகளாய்
சில நேரம்
என் தொடைகளை...
சில நேரம்
என் கைகளை...
சில நேரம்
என் இதயத்தை..
நெருடி இம்சித்தது.
அது இதமான இம்சை

நினைவில் சில கனவுகள்

கனவுசிற்பி
எட்டும் தொலைவில் வானம்,
விண்மீனும் கண் சிமிட்டும்,
வானவில் வந்து குடை பிடிக்கும்,
நீ என் அருகில் இருந்தால்!
உன் முகத்தில் விழும் கேசம்,
அழகின் கதைகள் பேசும்,
தோளில் சாய்ந்த உன் வாசம்,
என் சட்டையிலும் கொஞ்சம் மிஞ்சும்
நான்கு விழிகளில் ஒரு கனவு ,
என்று ஆகும் நனவு ,
என்றும் எதிலும் எங்கும்
உன் நினைவு