தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஆண்டவன்

கண்ணதாசன்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!- 

தாய்மை

வாணிகல்கி வனிதா
அம்மா,
அணுவைச் சிதைத்து
ஏழ்கடலைப் புகட்டிப்
பொதுவாய் நின்ற
ஓர் இன்பக்கொள்கை!
அம்மா!

உலக வாழ்க்கைக்கு
அப்பாற்பட்ட ஓர் உண்மை
உயிர்பெற்று உலவுகிறது
இவ்வுலகில்!

அம்மா என்ற மூன்றெழுத்து,
மனம் என்ற மூன்றில் பிறந்து,
உயிர் என்ற மூன்றில் கலந்து,
தாய்மை என்ற மூன்றில்
முடிசூடிக்கொள்கிறது,
இவ்வுலக உறவுகளிடம்!

ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா!

ஆண்டாண்டு அழுதுபுரன்டினும்
ஆண்களுக்குக் கிட்டாத ஓர்
அரிய உணர்வு,
தாய்மை

சமத்துவம்

சு.மு.அகமது
 
உணர்வுகள் பட்டுத் தெறிக்கிற போது
உறவுகள் படுத்துரைக்கும்

காதோர வெண்மை பற்றி கவலையில்லை
எனக்கு முன்பே
கிழடு தட்டிப்போன வரையறைகள்

பூக்களுக்கான எனது நேசம்
குருடாய் போன குதர்க்கியாய்

தூர தேசத்து பறவைகளின் சிறகுகள்
அலை பதிவியாகி
எங்கோ எனக்காய் காத்திருக்கும்
அறிவு ஜீவிக்கான நேர்க்காணலில்

விழித்தெழும் பால்யத்தில்
இன்றும்
ஆறடிக்கப்படாமல் தொடரும்
சா’தீய’ வன்கொடுமைகள்

சாத்தியப்படும்
என்றாவது ஒரு நாள்
சாக்குழியிலிருந்து கிளர்ந்தெழும்
சாதிகளற்ற சமத்துவம்.
 

கனக்கும் முகங்கள்

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
எல்லோர் முதுகிலும்
தூக்கமுடியா கனத்துடன்
கண்களுக்குத் தெரியா பை!

பை நிறைய
பல வடிவத்தில்
பல வண்ணத்தில்
அவரவர் முகங்களின்
போலி முகங்கள்!

நேரத்திற்குத்தக்க
ஆளிற்குத்தக்க
முகங்களை மாற்றிக் கொண்டு
அகங்களில் அழுக்கேற்றியபடி
விரைகின்றனர் எல்லோரும்!

எப்போதும் எல்லோருக்குள்ளும்
ஒருமித்த ஒரே வருத்தம்தான்
உண்மைமுகம் உள்ளோர் இல்லை என

என் வீட்டுத் தோட்டம்

எட்வின் பிரிட்டோ
 
மயிர்க் கால்களில் மகரந்தம் விதைத்து,
தென்னையின் தலைக்கோதிப் போகும்
மார்கழி இளந்தென்றல்.

'என்னருகே வா' என்று
இறகுச் சிமிட்டும் பட்டாம்பூச்சி.

துளித்துளியாய் அழகு சொட்டும்
பனிப்பூத்த ரோஜா.
அவ்வப்போது என்னைப்
புன்னகைக்கச் சொல்லி
புகைப்படமெடுத்துப் போகும்
மின்மினிப் பூச்சிகள்.
ஓடி வந்த வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மலர்ச்செடிகள்.

கிளைகளினூடே விரல் நீட்டி
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்.

பாடி முடித்த பறவைகளுக்கு
பாராட்டுதலாய் கிளைத்தட்டும் மரங்கள்.

இன்னும் பல இவைப்போல்
வர்ணம் குழைத்துப் பூசுமென்
கறுப்பு வெள்ளை வாழ்க்கைக்கு

மௌனமாய் ஒரு விரதம்

காவிரிக்கரையோன்
"இன்றைக்கு மௌன விரதம்" தாள்
நிறப்பி அனுப்பிய பின்
கண்ணால் வார்த்தைகள் வார்த்து
நீ கோர்த்த வாக்கியங்கள் எனக்கு
புரியவில்லை என்ற பயமேன் உனக்கு?

இதயத்தின் துடிப்பு இதயத்துக்கு
அந்நியமாய்ப் போய் விடுமா?
புல்லிடுக்கு பனித்துளிக்கு
பகலவன் கண்கள் எதிரியாய்
போன கதை தெரிந்திருக்கும்தானே
உனக்கு?

அப்படி உன் விரதம் வீழ்த்த என்
கண்களும் உன் கண்களும் தயார்
நிலையில் இருப்பது தெரியவில்லையா?
நீ முடிப்பதாய் தெரியவில்லை,
நானும் முடிக்க சொல்வதாய் தெரியவில்லை,

அதுவரை
விரதங்கள் கோபிக்கும் உன் மௌனத்தை
நீ தகர்த்தெறியும் அந்த மணித்துளிகளின்
வரவுக்காய் காத்திருக்கிறேன் நான்

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

எம்.ரிஷான் ஷெரீப்
இன்றொரு கவிதை எழுதவேண்டும்
சொல்லும்பொழுதே தாளொன்று
பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று
உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில்
எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின்
கவிதைத் தலைப்புகளே இங்கு
சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை

கரும்பலகையில் வெண்கட்டி போல
தேய்ந்துபோகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்

சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன்
இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன்
கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள்
எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்

- எம்.ரிஷான் ஷெரீப் (மூலம் சிங்களமொழியில் - திலீப் குமார லியனகே)

புரிந்துகொள்ளுங்கள்

திவ்யாநாராயணன்
பெற்றவர்கள் சொல்லி
புரியாதது
எல்லாம்,
ஒருநாள்...
வாழ்க்கை
புரியவைக்கும்

அப்பொழுதில்
புரிந்து கொண்டால்
காலம் கடந்தது மட்டும்
அல்லாமல்
வலிக்கவும் செய்யும்,

அந்த தருணத்திலும் உன்னை
தாங்கிபிடிக்கபோவது
உன் முதல்
நலம் விரும்பி
பெற்றோர்கள் தான்
புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே

கண்ணம்மா - என் குழந்தை

சி.சுப்ரமணிய பாரதியார்
சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே!

ஓடி வருகையிலே - கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ!

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?

 

பெண் பார்க்கும் படலம்

மணிமேகலை
பெண்ணின் கையில்
காபி டம்ளர்கள்
அடங்கிய தட்டு

இவள் தான் இனி
எங்கள் வீட்டின்
புது வேலைக்காரி