சுக வாழ்வு - நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை

Photo by Peter Olexa on Unsplash

சுதந்தரம் இல்லாமல் இருப்பேனோ?--வெறும்
சோற்றுக் குயிர்சுமந்தே இறப்பேனோ?

விடுதலை யடையாமல் விடுவேனோ?--என்னை
விற்றுடல் வளர்ப்பதில் கெடுவேனோ?

மானத்தைப் பெரிதென்று மதிப்பேனோ?--அன்றி
மாற்றவர்க் குழைத்துடல் நசிப்பேனோ?

தொழுதுடல் சுகிப்பதைத் தொலைப்பேனோ?--இன்றித்
தொழும்பனென் றேபெயர் நிலைப்பேனோ?

பயமின்றித் தருமத்திற் குழைப்பேனோ?--விட்டுப்
பாவங்க ளுக்கொதுங்கிப் பிழைப்பேனோ?

ஞான சுதந்தரத்தை அடைவேனோ?--இந்த
ஊனுக்கு ழைத்தடிமை தொடர்வேனோ?
நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.