மனித இயங்குதலில்
முதுகெலும்பு
விரைவுகளில்
வாகனங்கள் இவை
மையமாய்க் கொள்ளும்
சங்கிலி
மூன்று ராட்சதக்
கண்ணிகளில்
காலத் தொடர்ச்சி
நினைவு அடுக்குகளில்
மூன்றாம் பிறையாய்
சில
பசுமை விரியும் காடுகள்
மண்ணுள் விரையும் வேர்கள்
எதன் கண்ணிகளும் ஆகா
அவை
உயிர்ப்பின் சுதந்திர வடிவங்கள்
பிணைத்து நெருக்கி
வழி நடத்தும்
உறவு பணியிடச் சங்கிலிகள்
அதிர்ச்சிப் புதிராய்
அவ்வப்போது விலக
மின்னி மறையும்
விரியும் நீள் பெருவழி
பாதுகாப்பு
தளை
சங்கிலியில்
கட்புலனாகும் இரு
பரிணாமங்கள்
வெவ்வேறு இரவுகளை
வெட்டித் துண்டுகளைக்
கண்ணிகளாய்
வார்த்துப்
பிணைக்கும் மாயை என்னும்
மூன்றாம் பரிணாமம்

சத்யானந்தன்