தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்

மன்னார் அமுதன்
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை
காற்றுப் புக மூக்கினிற்குக் கருணை காட்டுங்கள் - என்று
கையைக்கட்டி வாழுமினம் நாங்களுமில்லை

சமர்ப்பணங்கள் எமக்களித்த பண்டிதர் பலர்
சன்மானம் கிடைத்தவுடன் ஓடி விட்டனர்
அமர்க்களமாய் வாழ்ந்த வாழ்வை புறக்கணித்தவர்
சமர்க்களத்தில் மாண்ட நாளை மறந்துவிடவோ

பூக்கொடுத்துக் கைகுலுக்க எமக்கும் சம்மதம்
புறமுதுகில் குத்திவிட்டால் யார்க்குப் பாதகம்
ஆண்டுகளாய் ஆண்ட இனம் அழிந்து போகையில்
ஆடு கண்டு கவலைப்படும் நரியை நம்பவோ

சொத்து சுகம் தேடி இங்கு வந்த மாக்களே
பத்து ரூபாய் பெற்றுக்கொண்டு காட்டிக் கொடுத்தனர்
வெற்றிடங்கள் விளைநிலங்கள் கூறு போட்டனர்
வீண்நிலங்கள் என்று கூறி விற்றுத் தின்றனர்

ஆலும் வேலும் நிறைந்த மண்ணில் போதி நட்டனர்
போதி நன்றாய் தழைப்பதற்கெம் இரத்தம் விட்டனர்
தழைத்த போதி வேரைத் தேடிக் கல்லை வைத்தனர்
இளைத்த இன‌த்தின் மீது ஏறிக் குலவை இட்டனர்

உலகிலொரு மூலையிலே எனக்கும் நிலமுண்டு
உரிமை முழங்கும் கவிகளுக்கு என்றும் உயிருண்டு
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை

கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்

ருத்ரா
மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?

என்று
குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு
கொடுத்த புனிதனே!

ஜனாதிபதி
உன் கவிதைக்குழந்தைக்கு
விருது என்று கொடுத்தார்
ஒரு கிலு கிலுப்பையை!
அத்தனயும்
எத்தனை வரிகள் உன் வரிகள்.
அத்தனையும்
உன் எழுத்துக்குள் இனித்த வலிகள்.

கவிதை எனும் உலகக்கோளத்தின்
பூமத்திய ரேகை
சிறுகூடல் பட்டியின் வழியாக‌
அல்லவா ஓடுகிறது.

"உலகம் பிறந்தது எனக்காக"
என்றாயே
நீ எதைச்சொன்னாய்?
தமிழ் எனும் சொல்லின்
ஈற்றெழுத்தின் தலையில்
ஒரு புள்ளி வைத்தாயே
அதைத்தானே சொன்னாய்?

"இரவின் கண்ணீர் பனித்துளி" என்றாயே
அந்த வைரத்துளியே உனக்கு "பொற்கிழி".

"சிலர் அழுதுகொண்டே சிரிப்பார்.
சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்"
என்று நீ எழுதுவதற்கு
அந்த "நடிப்பு இமயத்தின்"
முகத்தையல்லவா காகிதம் ஆக்கிக்கொண்டாய்.

"சட்டி சுட்ட தடா"என்றாய்.
அதில் "ஜென்"ஆழ்ந்து அமர்ந்து
ஒளி வீசியதை
ஒளித்து வைத்து விளையாடினாய்.

"எறும்புத்தொலை உரித்துப்பார்க்க‌
யானை வந்ததடா..என்
இதயத்தோலை உரித்துப்பார்க்க‌
ஞானம் வந்ததடா.."
வந்தது யானையா? "ஜென்னா?"

"வீடு வரை உறவு.."
சித்தர்களின் எழுதுகோலை நீ
இர‌வ‌ல் வாங்கியிருக்க‌லாம்.
ஆனாலும் உன்
உயிரைத்தான் அதில்
உமிழ்ந்திருக்கிறாய்.

"சென்ற‌வ‌னைக்கேட்டால்
வ‌ந்து விடு என்பான்.
வ‌ந்த‌வ‌னைக்கேட்டால்
சென்றுவிடு என்பான்."
ம‌னப்புண்ணில் ஒரு காக்கையை
உட்கார்த்தினாய்
கொத்தி கொத்தி அது
உன் எழுத்தைக்கீறிய‌தா?
அத‌ன் உள் குருதியை
கொப்ப‌ளிக்க‌ வைத்த‌தா?

மெல்லிசை ம‌ன்ன‌ர்க‌ள்
உன் வ‌ரிக‌ளைக்கொண்டு
உணர்ச்சியின்
க‌வ‌ரி வீசினார்க‌ள்.

"கூந்த‌ல் க‌றுப்பு குங்கும‌ம் சிவ‌ப்பு"
அப்புற‌ம் ஓட‌த்தான் போகிறேன்
இப்போது கோடு காட்டுகிறேன் என்றாய்.
ஏனெனில்
க‌விதை ப‌டைப்ப‌த‌னாலேயே
நீ ஒரு க‌ட‌வுள் என்று
பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்திக்கொண்டாயே.

உன் எழுத்துக்குள்
முட்டி நிற்கும் எரிம‌லை லாவா அது?
எந்த‌ "த‌ல‌ப்பா"வுக்கும்
த‌லை வ‌ண‌ங்கா த‌மிழ்ப்பா அது.

கோப்பையில் குடியிருப்ப‌தை
ஆடிப்பாடி பெருமித‌த்தோடு சொன்னாய்.
குடித்த‌து நீயாய் இருக்க‌லாம்
அப்போது உன் த‌மிழையும்
ருசித்த‌து அந்த‌ "உம‌ர்க‌யாம் கோப்பை".

உனக்கு ஒரு இர‌ங்க‌ற்பா பாட‌
என்னை யாரும் அழைக்க‌வில்லை.
இருந்தாலும்
"தெனாவெட்டாக‌" கூறிக்கொண்டேன்.
நீ இற‌ந்தால் அல்ல‌வா
இர‌ங்க‌ற்பா பாட‌ வேண்டும்.

உன‌க்கு இர‌ங்க‌ற்பா பாடிய‌வ‌ர்க‌ள்
எத்த‌னையோ பேர்!
அப்போது உன் பூத‌ உட‌ல்
திடீரென்று காணாம‌ல் போய் விட்ட‌து
என்று எல்லோரும் ப‌த‌றிப்போனார்க‌ள்.

என்ன‌ ஆயிற்று.
ஒன்றுமில்லை
அங்கு இர‌ங்க‌ற்பா பாடிய‌வ‌ர்க‌ள்
யாருமில்லை.
நீயே தான்.

உன் உயிரின் "அக‌ர‌ முத‌ல‌" வை
அந்த‌ அக்கினியில் நீயே ஆகுதி ஆக்க‌
விரும்பிய‌ உன் இறுதி ஆசை அது.

அர்த்த‌முள்ள‌ இந்தும‌த‌ம் என்று
எத்த‌னை வால்யூம்க‌ளை எழுதி
உன‌க்கு சிதையாக்கிக்கொண்டாய்.

அப்போதும் அந்த‌ தீயில்
நீ ஒலிக்கிறாய்.

"நான் நாத்திக‌னானேன் அவ‌ன் ப‌ய‌ப்ப‌ட‌வில்லை"
நான் ஆத்திக‌னானேன் அவ‌ன் அக‌ப்ப‌ட‌வில்லை"

நீ ஒரு அப்ப‌ழுக்க‌ற்ற‌ க‌விஞ‌ன்.
க‌விதை உன்னில் புட‌ம் போட்டுக்கொண்ட‌து.
நீ க‌விதையில் புட‌ம் போட்டுக்கொண்டாய்.
க‌விஞ‌ர்க‌ள் பேனாவை எடுக்கும்போதெல்லாம்
க‌ர்ப்ப‌ம் த‌ரிக்கிறாய்.
நீ இல்லை என்ற‌ சொல்லே
இங்கு இல்லை.
நீ காலம் தீண்டாத கவிஞன்

கிணற்று நிலா

குமரி எஸ். நீலகண்டன்
கிணற்றுக்குள் விழுந்து
விட்டது நிலா.
வாளியை இறக்கி
நிலாவைத்
தூக்க முயல்கையில்
வாளித் தண்ணீரில்
வரும் நிலா
மீண்டும் கிணற்றுக்குள்ளேயே
விழுந்தது.

அசையும் கயிறுக்கு அஞ்சி
ஆழ் கிணற்றினுள்ளேயே
துள்ளி விழுகிறது
என்றான் நண்பன்.

இல்லை..
வாளி சிறிய
குளமென்று
வர மறுத்து
பிடிவாதமாய்
அதைவிடப்
பெரிய குளமென
மீண்டும் கிணற்றிலேயே
விழுந்து விடுகிறது
என்றேன் நான்

சற்றே திரும்பிப் பார்க்கையில்

ரிஷபன்
குழந்தைகள் அவ்வப்போது
விளையாடுகின்றன
அப்பா.. அம்மா விளையாட்டு.
பெரியவர்கள்
மறந்தே போய் விட்டார்கள்
'குழந்தை' விளையாட்டு!
ஒரு குழந்தையாய் மாறி
கொஞ்சி
விளையாடிப் பாருங்கள்..
இது நாள் வரை
தொலைத்தவைகளின்
பட்டியல் புலப்படும்
உங்களுக்கும்

வரம் தா தேவி

மன்னார் அமுதன்
ஆழி தமிழ்மொழி - அதன்
அடி நுதல் அறியேன்
பாடிப் பரவசம் கண்டதால் நானும்
பாவினைத் தொழிலாய் ஆக்கினேன் தேவி

பாடுதல், ஆடுதல், கூத்தினைப் பயின்றே
பாக்களை ஆக்கினேன் பயனென் மாதா
மாடுகள் கூட மந்தையாய் வாழ - என்
மக்கள் மட்டுமேன் மறந்தனர் கூடல்

வாழிய நின் புகழ் தமிழ்த் தாயேயுன்
கூரிய மொழியின் கொற்றம் வாழ்க
பாவலன் எழுத்தினால் பார் மாறாது  
பாடற் கரசி நீ  வரமருள்வாயோ

வரங்கள்:

சாதனைகள்  ஆயிரம் நாம் படைக்க வேண்டும் - மக்கள்
வேதனைகள் பொடிப்பொடியாய் உடைக்க வேண்டும்
பாதகர்கள் செயல்களையே படிக்க வேண்டும் - பாட்டால்
பயத்தினிலே அவர் இதயம் துடிக்க வேண்டும்

இல்லற இன்பங்கள் நிறைய வேண்டும் - நாட்டில்
இனிய தமிழ்க் குழந்தைகள் பெருக வேண்டும்
நல்லறத்தை நம்மவர்கள் அறிய வேண்டும் - எவர்க்கும்
நலம்தரும் செயல்களையே புரிய வேண்டும்

சோதனைகள் எம்மைச் சீர்தூக்க வேண்டும் - வாழ்வில்
சோர்வென்ற சொல்லை நாம் நீக்க வேண்டும்
பார் போற்றும் பண்புடனே வாழ வேண்டும் - அயலில்
பசித்தோரைக் கண்டு உளம் நோக வேண்டும்

புசிக்கையிலே பசித்தவர்க்கும் ஈய வேண்டும் - ஊர்வாய்ப்
புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தாங்க வேண்டும்
சில நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் - கவிதையால்
பல கோடி நல்லிதயம் ஆள வேண்டும்

உதிரி பூக்கள்

பாரதிபிரியா
 
நின் நினைவுகலில்லாமல் என்
ஒரு பொழுதும் கரைந்ததில்லை.....
அனைத்துமாயிருப்பேனென்றாய்..
ஆற்றில் விட்டு சென்றுவிட்டாய்!

கல்லெறிபட்டு சிலையாகலாம்..
சொல்லெறிபட்டு மெளுகானேன்!
வார்த்தைகளின் வலிமையால்
வாழ்க்கை வினாவாகிப்போனது! ஆனாலும்

காற்றுவெளியில் உன் அன்பை
சுவாசித்து... சின்ன உயிரை
இன்னும் சுமக்கிறேன்...
நிச்சயமாக நீ வருவாயென்று!

நீ பேசிய வார்த்தைகள்....
நீ செய்த சத்தியங்கள்.....
நீ தந்த வாக்குறுதிகள்....
எல்லமே என்னோடு மண்ணாகிடலாம்..! ஆனாலும்

நான் கொன்ட பாசம்
நான் உள்ளவரை உன்னோடுதான்!
நீ நிலை மாறினாலும்... நான்
நானாகவே ... உன் நினைவோடும்!

காத்திருந்த பொழுதுகளெல்லாம்....
ஏளனமாய் நகைக்கிறது!
கடந்து வந்த பாதையெல்லாம்
தீயாய் சுடுகிறது....!

பூக்காட்டில்  நானிருந்தும்
கூந்தலில் பூக்களில்லை....!
சுடுகாடு சேரும் நாளிலேனும்....
மலர் மாலையோடு வந்துவிடு..!
 

சாதிக்க முடியும்

இதயவன்
இளைஞனே...
நம்மால் இந்த உலகில்
சாதிக்க முடியும்
என்று நம்பிக்கை கொல்
உள் மனதில்!

இளைஞனே...
உலக உருண்டையை
நம் கையால்
சுழற்ற முடியும்
என்று தன்னம்பிக்கை கொல்
உன் உணர்வில்!

இளைஞனே...
இவை இரண்டும்
உனக்குள் எழுந்து விட்டால்
உன் இதய துடிப்பின்
ஓசையை கேட்டுப்பார்
அது சொல்லும் பல
வழிகள் சாதிக்க!

இல்லை என்றால்?

உன் உயிர் மூச்சின்
பாஷையை கேட்டுப்பார்
அது சொல்லும் சில
வழிகள் சாதிக்க!

செல் இளைஞனே
செல் சாதிக்க

கோடுகளால் ஆனது உலகு

சு.மு.அகமது
நாளை மறுபடியும் நான்
காட்சிப் பொருளாகலாம்

கண்ணிமைக்கும் இடைவெளியில்
பெருவெளிகளை கடக்கலாம்

பின் தொடரும் வாசத்தால்
கலவரப்பட்டுப் போகலாம் எம் மனது

ஒரு வாகனத்தின் வருகையால்
நிறுவப்படும் பயண எத்தனிப்பு போலும்
நிகழ்வுகளின் கோடு பிடித்து
நிலை நாட்டப்படலாம் உறவு

உலகியற் சார பிழிதலில்
வழிந்தோடலாம் எமது ’கையாலாகா’த்தனம்

எம்மவர்க்கே நாம் எதிர்வினையாற்றலாம்
நிலையற்ற கயமை நெஞ்சோடு

நெளியும் பாம்பனைய
மண்புற்றின் சகதிக்குள் அய்க்கியமாகலாம்
உலகுசார் எமது பரந்த எண்ணங்கள்

கோடுகள்...
ஒரு புள்ளி தொட்டு மறுபுள்ளி வரை பயணிப்பவை
இலக்கு...
புள்ளிகள் தொடுதல் தானா?

கணினி வேலை

சேவியர்
எழுத்துக்கள் மீது
நடராஜ விரல்கள்
நாட்டியமாடுவதும்,

கையடக்க மெளஸை
கை விரல்களால்
சீண்டிச் சிரிப்பதும்,

மாயப் படங்களில்
மயங்கிக் கிடக்க
இணையப் படிகளில்
தவமிருப்பதும்,

என
கணினி வேலை
எளிதென்பது
பலருடைய கணிப்பு.

உண்மையைச் சொல்வதெனில்
வயல் தேர்வு துவங்கி
அறுவடை வரை,
விவசாயமும்
மென்பொருள் தயாரிப்பும்
ஒன்று தான்.

ஒன்று
உழுது செய்வது
இன்னொன்று
எழுதி செய்வது.

ஒன்று தமிழ் பெயர்களால்
தாலாட்டப் படுவது
ஒன்று
ஆங்கிலப் பெயர்களால்
அறியப் படுவது.

வீடு சென்று சேரும்
இரவு பதினோரு மணி சொல்லும்.
கணினி வேலை என்பது
எளிதானதே அல்ல.

கவலையாய்க் கேட்பார்
காத்திருக்கும் அப்பா.
வேலை ரொம்ப கஷ்டமா ?

சிரித்துக் கொண்டே சொல்வேன்
கம்யூட்டர் வேலைல
கஷ்டம் என்னப்பா கஷ்டம்

பாப்பாப் பாட்டு

சி. சுப்ரமணிய பாரதியார்
 


ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா!.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!

வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!