தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பூமிக்குப் பெயரில்லை

நட்சத்ரன்
பூமிக்குப் பெயரில்லை
பூமி மட்டும் இங்கில்லை
வானுக்கும் பெயரில்லை
இது
மட்டும்
வான் இல்லை!
பெயர் என்பது எல்லை
எல்லை இல்லாததுக்கு
ஏது பெயர்?
போ!
நட!
ஓடு!
எல்லைவிட்டு
எல்லையுடைத்து
எல்லைதாண்டி
எல்லையே அற்றதோர்
எல்லையை எட்ட.

- நட்சத்ரன் ( நன்றி : நிலாச்சாரல் )

உலோக இதயங்கள்

எட்வின் பிரிட்டோ
 
குளித்து பொட்டிட்டு மலர்முகம் காட்டும்
எதிர் வீட்டுப் பெண்போல் சூரியன்!

கருங்கல் விதையிட்டு வளர்ந்த
கட்டிட மரங்களுக்கு மத்தியில்
பச்சை மனது காட்டி சிரிக்கும்
சென்னையின் தென்னை மரங்கள்!

என் வீட்டு ஜன்னல் கம்பியில்
உடற்பயிற்சி செய்யும் சிட்டுக்குருவிகள்!

அடடா நண்பனே அதோ பார்
அடிக்கடி பார்க்கும் அந்த அலுமினியப்
பறவைக் கூட அழகாய்த் தெரிகிறதென்றேன்.

இல்லையடா! அலுவலகத்திற்கு
நேரமாகி விட்டதென்று
தரை பார்த்தபடி
விரையும் நண்பன்.

என் செல்லமே

மன்னார் அமுதன்
உன்னைப் பிரிந்தே எந்தன்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே

செல்லம் நிறை சொற்களாலே
கொஞ்சும் ராசாத்தி - என்னைக்
கனவில் கூடச் சுத்தி வரும்
செல்வச் சீமாட்டி

நட்சத்திரக் கண்கள் எந்தன்
பகலை இரவாக்கும் ‍- அகல‌
நெற்றிநடுக் குங்குமச் சூரியன்
பகலில் நிலவாகும்

காதல் நிறை கண்களாலே
கதைகள் உரைப்பாயே - அதனைக்
கற்றுக் கொண்டு சீண்டயில்; அழகு
காட்டிப் பழிப்பாயே

நெடுநாள் பிரிவை உடனே போக்க‌
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்

புற்கள் நுனிப் பனித் துளி போல
நானும் வருவேனே - எந்தன்
பாசம் கொண்ட ரோசாவே நீ
வாடிப் போகாதே

வெள்ளைத் தாமரை

சி.சுப்ரமணிய பாரதியார்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.                                              

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.                                                     

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்                 

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.                                            

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,                                  

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.                                          

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!                                               

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்                

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!

களவு போன கன்னிக்கவிதை

சீமான் கனி
எனக்கே எனக்காய் எழுதிய கவிதை;
என் உயிர் தொட்ட அழகு கவிதை;
என்னை உயிர் தொட அனுமதித்த கவிதை;
ஏழு ஜென்மமும் இணைந்தே இருப்பேன் என்று,
எழுதி தந்த கவிதை.

காலம் காலமாய் என்
கனவுகள் சுமந்த கவிதை;
கனவில் புகுந்து,
காதல் சொன்ன கவிதை;
காதலின் கற்ப்பை கடைசிவரை,
காப்பாற்றிய கவிதை;
காதல் கலவர படும் பொது,
கரம் பற்றி காத்த கவிதை;
காற்றில் கலந்து,
சுவாச பையில் சுகந்தமாய்
சுற்றி திரிந்த கவிதை.

காணவில்லை...
காவு கொடுத்து விட்டோமோ என்ற கவலை...
கனவில் எழுதினால்
களைந்து விடும் என்றுதானே ஒவ்வொரு
அணுவிலும் எழுதி வைத்தேன்...
காமன் வந்து கடத்தி இருப்பானோ??இல்லை,
காதல் கதறினால் கவலை கொள்வானே அவன்.
கடவுள் கடத்தி இருப்பானோ??இல்லை,
கவிதை கண்டு கொடுத்தவனே அவன்தானே.
கலவர படுகிறதேன் காதல்...

கற்ப்பனை குதிரை ஏறி,
கடிவாளம் பிடித்து,
கனவுகளை கூட்டிக்கொண்டு,
காற்றில் விரைந்து போகிறேன்;
காணவில்லை.

கால்தடம் இல்லா
கடல் தீவெல்லாம்
கலைத்து தேடுகிறேன்
காணவில்லை...

பூமியில் புதையலாய்
புதைந்திருப்பாய் என்று;
பூமி பிழந்தும்- பிரபஞ்சம் அலைந்தும்
பார்கிறேன் காணவில்லை...

காதல் தேவனின்
காலை பிடித்து
கதறி கேட்டேன்;
கடைசியாய் கையில் வைத்திருந்த
காட்சி பேழையில் காட்டினான் காட்சிகள்...

கல்யாணம் என்ற
கள்வன் களவாடி
கணிசமான தொகைக்கு
கை மாற்றி விடுகிறான்.

கண்டதும் கலவரமாகி;
கள்வனை தேடி காணவில்லை;
கவிதை வங்கியவனை கண்டேன்-அவன்
கணவன் என்று சொந்தம் சொல்லி போனான்;
களவு போன கவிதை அவளை,
கண்டும் கரம் பற்ற முடியவில்லை.

காலம் பல கடந்தன...
காற்று வாங்குவது போல்
கவிதை அவளை கண்டுவர
கடந்து போனேன்...

நீ மலட்டு கவிதை -என
சில கிழட்டு கவிதைகள் கேலிபேச
கன்னி கவிதை நீ;
கண்ணிர் உடுத்தி
கரைந்திருந்தாய்

கடலும் கடவுளும்

கவிஞர் அஸ்மின்
 
நண்பர்கள் உணவுக்குள்
நஞ்சூற்றி தரும்போது...
அன்பென்று சொன்னவர்கள்
அழிப்பதற்கு வரும்போது...

பெற்றவனே பிள்ளையினை
போதையிலே தொடும்போது...
கற்றவனே மனசுக்குள்
கழிவுகளை நடும்போது...

உறவென்று வந்தவர்கள்
உதடுகளால் சுடும்போது...
வரவுக்காய் சேர்ந்தவர்கள்
வாய்க்கரிசி இடும்போது....

பொன்விளைந்த தேசத்தில்
பிணவாடை எழும்போது....
உணவின்றி ஒரு ஏழை
உலகத்தில்  அழும்போது....

கடலே நீ தந்த
காயமொன்றும் பெரிதில்லை....
கடவுளே நீ எம்மை
கொன்றாலும் தவறில்லை

எச்சம்

ரா. கணேஷ்
ஈமெயிலில் தொடங்கி
இன்டெர்னெட்டில் தொடர்ந்து
விவாகரத்தில் முடிந்தது
அவர்களின் திருமணம்

காதருந்த காலணிகளாய்
ரேகை தொலைத்த விரல்களாய்
காகம் இட்ட எச்சம் போல
இரண்டு குழந்தைகள் மட்டும்
மிச்சமாய்....

கனவாய் போன பந்தத்தின்
சாட்சியாய்

நிஜம்

சு.மு.அகமது
மரணத்தின் செந்நாவு
சுழன்று உறிஞ்சுகிறது
உயிரின் கடைத்துளியை

நினைவு செதுக்கின நறுமணத்தில்
பொதிந்து தவழ்கிறது உறவு

உச்ச பட்ச தேவைகளின் நிமித்தம்
அடிப்பணிகிறது மனசு
ஏற்றுக்கொள்ளவியலாத தருணமாய்

எதிர்படும் நிலைக்களனில்
பதிய முடியாத வேர்களுடன்
பரவிப்பாய எத்தனிக்கிறது விருட்சம்
நிலைக்கொள்ளா ஆட்டத்துடன்

இடறிடும் மூச்செரிவில்
இரணப்பட்டு போகும் உணர்வு
மணல்வெளியின் கரிசல் கோடாய்

பொழுதின் இரணமாறி விழிக்கையில்
நிஜம் சுமந்து நிற்கிறது
வாழ்க்கை

மே தினப் பாடல்

ஞானகுரு
உழைத்திடுவோம் உயர்ந்திடுவோம் உழைப்பினை போற்றுவோம்!
உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!


வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!

பாலை கூட பூக்கள் பூக்கும் சோலை ஆக ஆக்கு'மே'!
சேற்றில் கூட நாற்றை ஊன்றி சோற்றை ஈனு'மே'!

வேட்டை யாடும் காட்டு வாழ்வை மாற்றி வீட்டைக் காட்டு'மே'!
நீங்கள் காணும் யாவும் யாவும் எங்கள்  ஆக்க'மே'!


பார் அதோ! உழைப்பாளியால்...
விதை பூவாகி காயாகுதே!
திடல் ஜோரான வீடாகுதே!

பார் இதோ! உழைப்பாளியை...
தினம் சோறின்றி நோயாகிறான்!
ஒரு வீடின்றி தான் வாழ்கிறான்!

தேகம் தேயும் கைகள் ஓயும் ஓடும் கால்கள் ஓடு'மே'!
வேகம் கூட சோகம் ஓட காலம் கூடு'மே'!

ஆலை ஓட்டி ரேகை தேய்ந்த கையில்  ஆட்சி மாறு'மே'!
பாரம் ஏற்றி வாடும் தோளில் மாலை ஏறு'மே'!


விதைத்தோமே வளர்த்தோமே அடைந்தோமா? தோழா! தோழா!
உழைத்தோமே களைத்தோமே உயர்ந்தோமா? தோழா! தோழா!

நீ யாரோ நான் யாரோ பாட்டாளி ஆனோம் தோழா!
நீ வேறோ நான் வேறோ கூட்டாளி ஆவோம் தோழா!

உழுதோம் அதனைப் புசித்தோமா?
தறிதான் அடித்தோம் உடுத்தோமா?

விதைத்தோம் வளர்த்தோம் அடைந்தோமா?
உழைத்தோம் களைத்தோம் உயர்ந்தோமா?

பேதம் பேதம் பேதம் ஏழு நூறு கோடி பேத'மே'!
போதும் போதும் தோழன் தானே நீயும் நானு'மே'!

பூதம் பூதம் பூதம் நாங்கள் கோடி கால்கள் பூத'மே'!
கோடி கைகள் கூடி நாளை வையம் ஆளு'மே'!


யாரிங்கு உயர்ந்திட நாமிங்கு உழைத்தோம்!
யாரிங்கு கொழுத்திட நாமிங்கு இளைத்தோம்!

யாரிங்கு அணிந்திட நாமிங்கு தொடுத்தோம்!
யாரிங்கு துணிந்திட நாமிங்கு பணிந்தோம்!

யாராரோ உயர்ந்தார்!
யாராரோ கொழுத்தார்!

யாராரோ அணிந்தார்!
யாராரோ துணிந்தார்!

படைப்போம் புதிதாய் சரிதமே...
இணைவோம் எழுவோம் படையாக!

எதுவும் இல்லையே இழக்கவே...
அடைவோம் அடைவோம் உலகையே!

தூக்கம் ஓய்வு வேலை ஆக நாளில் மூன்றும் வேண்டு'மே'!
தேசம் ஊடே கோடு யாவும் போக வேண்டு'மே'!

காவல் நீதி ஏவல் நாயை தூர ஓட்ட வேண்டு'மே'!
யாதும் ஊரு யாரும் கேளிர் ஆக வேண்டு'மே'!

தினம்தினமே தினம்தினமே உழைப்பினை போற்றுவோம்!

உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!

வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!
 

மெல்லினம்

புதுவை பாமல்லன்
மெல்லிய மரணம் அரங்கேறும்
மெளன இலக்கிய மன்றம் - காதல்
சத்தமின்றி நிகழுமோர் யுத்தகாண்டம்
சத்தியத்தில் சங்கமிக்கும் உறவுகோலம் - அது
நித்தியத்தில் உறுவாகும் சாமவேதம்
முக்தியினை முன்காட்டும் முழுமைகீதம்

விழிவழி வருதா காதல்
மொழி வழி தருவதா
விழைவு தனில் நுழைவதா
விந்தை நகையினில் மலர்வதா
விழும் சிந்தையில் சிறப்பதா
விளங்காப் பொருளில் புலர்வதா
விளையும் பொழுதே உனையறி
வீழாதென்றும் உண்மைக் காதல்