தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

குழந்தைகளைக் குளிப்பாட்டும் விரல்கள்

கே.ஸ்டாலின்
குழந்தைகளைக்
குளிப்பாட்டும் விரல்கள்
எப்போதும்
சொர்க்கத்தின் சாவிகளை
சுழற்றியபடியிருக்கின்றன

பூத்தொடுப்பதும்
குழந்தைகளைக்
குளிப்பாட்டுவதும் ஒன்றுதான்
இரண்டிற்குப் பின்னரும்
விரல்கள் வாசம் பெறுகின்றன

வன்முறைக்குப் பழகிய
விரல்களை
குழந்தைகளின் மென்தேகம்
மெல்ல மெல்ல
மிருதுவாக்கி விடுகிறது

கூச்சத்தின்
முதல் கீற்று விழும் வேளை
மறுதலிக்கும் குழந்தைகளுக்கு
உங்கள் விரல்கள்
உடைந்த
விளையாட்டு பொம்மைகளாகின்றன

ஆற்றில்
தானே குளீக்கும் குழந்தைகள்
எந்த விரல்களையும் யாசிப்பதில்லை
அவர்களைத் தழுவிச் செல்லும் தண்ணீர்
தூரத்தில் துணீ துவைத்துக்கொண்டிருக்கும்
மலடி ஒருத்தியின் விரல்களை
குளிப்பாட்டிச் செல்கிறது

வரட்டு நிவாரணி

சு.மு.அகமது
முகவரி தொலைத்த
வெறுக்குட வாழ்க்கை
பதித்த தடத்தில்
படியாத மிச்சம்
கழனியின் எச்சமாய்

ஊற்றென பீறிட்டெழும்
வலியில் வழிந்தோடும்
உயிர்த்துளியென நம்பிக்கை

வியர்வை வற்றிப்போன
துர்வாசக் கமறலில் தொற்றிக்கொள்ளும்
வெறுப்பின் மிச்சம்

நாம் தொலைத்த
சுருங்கிப் போன இரைப்பைகள்...

நிரப்பக் காத்திருக்கும்
ஏகாதிபத்தியத்தின் ஏடுகளில்
நமக்கான பருக்கைகள்
நிர்பந்த நிவாரணியாய்

வானம்

ப. மதியழகன்
வானமே
இரவுக்கு விடை கொடுத்து
பகலுக்கு குடை பிடிக்கும்
மேகமே
இரவின் எச்சிலாக
மரங்களில் படிந்திருக்கும்
பனித்துளியே
ஆகாயக் கோட்டையில்
அழகு நிலா காய்கிறது
குழந்தைகளுக்கு ஊட்டும் உணவை
தின்று தானோ
தினம் தினம் வளருகிறது
பூமியில் உள்ள உயிர்களெல்லாம்
உன்னை நோக்கி வளருகிறது
தாகம் தீர்க்கும் மழை மட்டும்
கீழ்நோக்கிப் பெய்கிறது
சிதறிக் கிடக்கும் வைரங்களைப் போல்
நட்சத்திரங்கள் ஜொலிக்கிறது
இரவு என்ன நாத்திகனா
ஏன் கறுப்பு ஆடை தரிக்கிறது
தூரத்து இடிமுழக்கம்
மழையின் வரவை உணர்த்துகிறது
யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்களைப் போல்
மரங்கள் தவம் கிடக்கிறது
இரவுக்கு விடைகொடுக்க
தயக்கமாக இருக்கிறது
பகலில் தானே பிரச்சனைகள்
விஸ்வரூபம் எடுக்கிறது
பகலை துரத்தும் இரவும்
இரவை விரட்டும் பகலுமாக
இருளுக்கும் ஒளிக்கும் இடையேயான
போட்டியினால் தான்
பூமி இன்னும் பிழைத்திருக்கிறது

என்காதல் என்னவென்று

விவிக்தா
காதலெனும் தூரிகை எடுத்து
உன் மல்லிகைப் பூ மனதைத் தொட்டு
வர்ணக் குழம்புகளாய்
வரைந்து வைத்ததெல்லாம்
காகிதப்பரப்பில்
வெறும் நிழற்படங்கள் அல்ல - என்
இதயப்பரப்பில்
உன் பாதத் தடங்கள்.

காதலெனும் களிமண் குழைத்து
கண்ணீர் துளிகளை முத்தாய் இழைத்து
கட்டியெழுப்பிய
காதல் மாளிகை
உளிகொண்டு செதுக்கிய
சிற்பங்களாய் அல்ல - தமிழ்
மொழி கொண்டு செதுக்கிய
கவிதைகளாய்!

காதலெனும் வானவில் வளைத்து
வானத்து மீன்களையும் வரவழைத்து
உன் நாணத்தில் தோய்த்து
கயிறாகத் திரித்ததெல்லாம்
நீட்டிய கழுத்தில்
மாலைகளாய் அல்ல - வீணையில்
மீட்டிய ராகங்களின்
சோலைகளாய்

யாரோ சிந்திய புன்னகை

சாகாம்பரி
வசீகரமானதாயுள்ளது
யாரோ சிந்திய அப்புன்னகை
முகத்தின் குறைகளனைத்தையும்
கொன்று தின்று விட்டு
எவ்வித சலனமுமின்றி
மெல்ல எழும்புகிறது
என் கவனத்தையும் வார்த்தைகளையும்
பறித்த வண்ணம்
அதன் கோரைப்பற்களை
காண்பிக்கத் துவங்குகிறது
அக்கினியை உமிழ ஆயத்தமாகிறது
என்னிடமிருந்த எல்லாமும்
பொசுங்கத் துவங்குகையில்
நினைவு கூர்கிறேன்
புன்னகைக்க மறந்த
தருணங்களை

உன் கவிதையை நீ எழுது

பசுவைய்யா
உன் கவிதையை நீ எழுது
எழுது
உன் காதல்கள் பற்றி
கோபங்கள் பற்றி
எழுது

உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள
விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப்
புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி
நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை
வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட
விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட
முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை
என்றால்...

ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன்
எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு

திரும்பாத முத்தம்

மனுஷ்ய புத்திரன்
 இடப் படாத முத்தமொன்று
இரவின் முடிவற்ற கரிய தோள்களில்
வந்தமர்ந்தபோது
பனிக் காலத்தின் ஆயிரம்
உறைந்த கண்கள்
அதை உற்றுப் பார்த்தன  

இடப்படாத அந்த முத்தம்
தன் கூச்சத்தின்
இறகுகளைப் படபடவென
அடித்துக்கொண்டது  

திசை தப்பி வந்த
வேறொரு உலகத்தின் பறவையென
அன்பின் துயர வெளியின் மேல் அது
பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது  

அதற்கு தான்
அந்த கணம் வந்தமர்ந்த
இடம் குறித்து
எந்த யோசனையுமில்லை
ஒரு தந்திரமில்லை
ஒரு கனவு இல்லை  

நடுங்கும் கைகளால்
நான் அதைப் பற்றிக்கொள்ள
விரும்பினேன்  
இடப்படாத அந்த முத்தம்
சட்டென திடுக்கிட்டு
எந்தக் கணமும் பறந்துபோய்விடலாம்  

யாராலும் பெற்றுக்கொள்ள முடியாத
காதலின் ஒரு தானியத்தை
அதற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன்

இடப்படாத முத்தங்கள்
எதையுமே பெற்றுக்கொள்வதில்லை
எவ்வளவு தூரம் பறந்தாலும்
அவற்றிற்குப் பசி எடுப்பதில்லை  

அவை
பிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன
பனியைப்போல தனிமையில் நிகழ்கின்றன  

ஒரு வேளை
நீ அந்த முத்தத்தை
இட்டிருந்தால்
அது முத்தமாகவே இல்லாமல்
போயிருக்கலாம்

இசைப்புயலுக்கு வாழ்த்து

ரமேஷ் சிவஞானம்
நீ தான்
இசைப்புயல்
உனக்கு வாழ்த்து சொல்லுது
இந்தப்புயல்




நீ இளவயதிலே
இசையில் முற்றியவன்
நான் வயசு பத்திலே
உன்னைப்பற்றியவன்

சின்னச்சின்ன ஆசைகளில்
உன் இசை ரோஜாக்களை
நாம் பறித்தோம் முதலில்

மெல்லிசை ஞானியர்
கொடிகட்டிபறந்த
தமிழ் திரை இசையில்
நீ தானே
கொம்புயூட்டர்
இசைக்கொடி ஏற்றியவன்

இன்று உனக்கு 44 ஆ??
யார் சொன்னது?
ஒரு வீர தீரனின்
இளமையும் துடிப்பும்
உன்னிசைப்புயலில் இருக்க
உனக்கு வயது
கணிப்பில் இல்லை
இசையால்
உன்னை உலகுக்கு காட்டியது
தமிழ்சினிமா - அதுதான்
நான்கில் மூன்று முறை
தேசியவிருதுகள்
உன் தமிழுக்கு

இசை உனக்கு கிடைத்த
வரம்
நீ சினிமாவுக்கு கிடைத்த
இசைச்சொத்து

விருதுகள்
நீ வாங்கும் போது
உண்மையில்
விருதுகள் தான்
விருதுவாங்கிக் கொண்டன

ஒஸ்கார் விருது கூட
உனக்கு சாதாரணம்
அன்று
அந்தமேடையில்
உன்தாய்மொழியில்
வார்த்தை சிதறியதே இது
ஒஸ்காருக்குப் பெருமை
ஓ...
நீயும்
தமிழ்தாய் பிள்ளையல்லவா!

நீ தான் பல
புதிய புதிய
பாடகர்களை மேடையேற்றும்
அறிவிப்பாளன்

இசைகளையும் புதிய
இசைக் கலைஞர்களையும்
புதுப்பிக்கும் இசைப்
புத்தகம் நீதான்

இசையால் உலகை
இயக்கும் விற்பன்னன்
இப்போது நீதான்

உன் இசைப்பயணத்தில்
நான் பல தடவைகள்
பயணித்திருக்கிறேன்
வெறும் இசை ரசிகனாய்
ஆனால்
ஒருமுறை ஏறிய
இசை வண்டியில்
இன்னொருமுறை ஏறவில்லை
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பயணங்கள்

நீ யார் பக்கம் என்று
வாதிடும்
கோயில்களே
மசூதிகளே
கேளுங்கள்
இசையில் கடவுளைக்காண
கற்றுக்கொள்ளுங்கள்
கடவுளுக்காக பிளவுபட்டு
இசையைக் கலைக்காதீர்கள்

இசை மனதில் நின்று
உயிர் வளர்க்கும்
மறந்துவிடாதீர்கள்

நான் கண்மூடினாலும்
காதோரம் விழும்
உன் மெல்லிசையில் தான்
என் நித்திரை
ஒரு சொட்டுக்கண்ணீரும்
ஓரவிழியில் கசியும்
உன்னிசை மனதில்
குளிரும்போது....
இசைப்புயலே
வாழ்க
நீ

புது வாழ்வு

தர்ஷன்
சலனங்கள் ஏதுமின்றி எம்
சரித்திரத்தில் இடம் பிடித்து
மரணங்கள் பலவற்றை எம்
மனதுக்குள் விதைத்து விட்டு
விரதங்கள் பல இருந்து
விடிவுகள் பல பெற்று
சிகரங்கள் போல(ப்) பாரில்
சிறப் போடிருந்த வாழ்வை
கரகங்கள் பல ஆடி(க்)
கணப் பொழுதில் அழித்து
திரை போன்ற உன் அலையால் எமை(த்)
தீயிலிட்ட கடலலையே!
பாலகன் யேசு இப்
பாரினில் உதித்து
ஞாலங்கள் சிறக்க
நல் வழி காட்டிட;
ஏர்களைப் பூட்டி
எருமையை விரட்டி(த்)
தேரினை இழுத்து(த்)
தேகங் குளிர்ந்திட(த்)
தீமையை மறந்து
ஊரவர் கூடி எம்
உறவைப் பகிர்ந்ததும் மார்கழியில்!
இத்தனை சிறப்பும் மார்கழியே
இப் பூமி தனில் உனக்கிருக்க
பத்தியம் ஏது மின்றி இப்
பாரினில் உள்ள மக்களின்
சொத்துக்கள் தனை அழித்து(ச்)
சொப்பனம் காண வைத்து
நித்தமும் எம்மவரை
நிராதரவாய் விட்டு விட்டாயே!
'உத்தமர் வல்லவர் நிதம்
உதவிகள் பல புரிந்தும்
செத்துமே போய் சேர்ந்திட்ட உயிர்கள்
செம்மையாய் இங்கு வந்திடுமா???
'மாண்ட உயிர்கள் மேல்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்!
மீண்டும் எம் தேசமதை மிடுக்குடன் ஒளிர வைத்து(ப்)
புதுப் பானை எடுத்துப் பல பொங்கலிட்டு
பூமாலை பல கட்டிப் பூக்கோலம் பல போட்டு(ப்)
புது வாழ்வு வாழ்ந்து
புறங் கூறல் தனை மறந்து
இது போதும் என்று இனிதாக உனக்குணர்த்தி எம்
இதயத்தின் மிடுக்குடன்
இனிதாக உனக்கு எங்கள் உதயத்தை உணர வைப்போம்; இதை
உறுதியாய்(ச்) சொல்லி நிற்போம்!
பண்புடன் நிதம் வாழ்ந்து
பகைமைகள் பல மறந்து
விண்ணினைத் தொடுகின்ற பெரு
விருட்சமாய் வேரூன்றி
மண்ணிலே நல்லவராய் மகிழ்வுடன்
மகிழ்வுடன் நிதம் வாழ்ந்து
சதிரான உன் அலையை(ச்)
சற்றே சிந்திக்க வைத்து(ப்)
புது வாழ்வு வாழ்ந்து; பூமியில்
புத்துயிர் பெற்றெழுவோம்

விழுங்கித் தொலைத்த மானுடம்

வித்யாசாகர்
"எங்கோ எதற்கோ
விழுங்கித் தொலைத்த மானுடம்..
 
இரந்து இரந்து 
கொடுக்கத் திராணியின்றி 
வாங்கத் துணிந்த மானுடம்..
 
களவு செய்து 
கபடமாடி 
கற்பு பறித்து; தொலைத்து;
கயவரோடு கூடி 
காலம் போக்கும் மானுடம்..
 
எடுத்து வீசத் துணியாத 
விட்டு ஒழிக்க இயலாத 
உடலை -
பிடுங்கியும் புலம்பும் 
பிரிந்தும் பிறரை நோவும் 
சுயநல மானுடம்..
 
பகுத்துப் பாராத கேள்புத்தி -
அறுத்தெறிய முடியா ஆசைகள்
பிரித்துத் தர இயலாத மனசு 
எடுத்துக் கொடுக்க வக்கின்றியும் 
தனக்கு மட்டுமே ஓலமிடும் மானுடம்..
 
ஆறடி மிஞ்சாத மண் தின்று 
காலடி பதியாத வாழ்க்கைக்கு 
நோயிற்கும் பேயிற்கும் பயந்து 
யாருக்கும் பயனின்றி - போகும் மானுடமே..
 
காலம் மென்று மென்று விழுங்கி 
விதைத்த விதைப்பில் -
வாழ்ந்த அடையாளமின்றி மாளும் 
மானுடமே.. மானுடமே.. 
 
எல்லாம் ஒழிந்து
எல்லாம் அற்று
எஞ்சியிருக்கும் மனிதம் காக்கவேணும் 
சுயநலம் குறைத்து வாழ்"
என்று சொல்ல -
எனக்கென்ன உரிமையுண்டோ
உன்னிடத்தில் மானுடமே!