இருளின் ஒரு பதத்தையாவது
வெளிச்சத்தில் படித்திடல் வேண்டும்
வசீகரிக்கும் அதன் குரூர அழகில்
வயப்படாமல் இருக்க
கற்றுக்கொள்ளல் வேண்டும்
கருமை தான் இருளென்றால்
வாழ்வின் வெறுமையும் கருமைதான்
என்னை அறிமுகப்படுத்திய
இருளின் முகவரி தொலைத்து
வெளிச்சப்புழுதியில் உழன்று இருள்கிறேன்
இருள் கதவின் இடுக்கு வழி
கசியும் இருளில்
என் தேகம் மிளிரக் காண்கிறேன்
பூரணமாய் நான் இருளும் போது
வேர் படர்த்தி மண் கவிந்து
நான் அமிழ்கிறேன்
இருள் இருளாயும்
நான் இருளாயும்
இருளாகி இருள் நோக்கி உதிக்கிறேன்

சு.மு.அகமது