தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சில்லென்று சில நிமிடம்

எழிலி
கோடை காலத் தொடக்கம்!
உலை நீரின் உஷ்ணமாய்
உக்கிர வெயில்!
அலுவலகம் நோக்கி
வழக்கம் போல்
அவசரப் பயணம்!
நூறடி சாலை தொடங்கி
புறவழிச்
சாலையின் போக்கில்.....

திடீரென  குளிர்ந்த காற்று
திசை தெரியாத இருட்டு
சூரியனைச் சூரையாடிய
மேகக் கூட்டம்! நிமிடத்தில்
சொட்டு சொட்டாய்த்தூறல்!
தூறல் -
ஆலங்கட்டி மழையின்
அளவிற்கும் சற்று சிறிதாய்
பெருகிப் பெருகி .........................
நிமிடமாய்  வலுத்தது!
தேகம் குளிர்ந்து மணத்தை
எங்கும்தெளித்தது பூமியின்
புழுதிப் படலம்!

சின்னக் குழந்தைகள்;
குழந்தைகளாகப் பெரியவர்கள்;
பாதசாரிகள்;ஆண்கள், பெண்கள் ;
அழகாய் இளைஞர்கள்;
இன்னும் அழகாய்
யுவதிகள்!

மழை முத்து முத்தாய்த்
தெறித்து  முத்தமிட்டது!
பூமியை!  மரங்களை!
மரங்களின்  குழந்தைகளை!
அவைகளில் பதறிப் போய்
அமர்ந்த பறவைகளின்
பருத்த சிறகுகளை! தூசிப்
படிந்த அடுக்கு மாடிகளை !

போக்குவரத்து வாகனங்களை!
புகை கக்கும் ஊர்திகளை!
சுடிதார் பூக்களை!    
சேலை சிற்பங்களை!
மேல் சட்டை கால்
சட்டை மனிதர்களை!

யாரிடமும் எதிர்ப்பில்லை!
எவரிடமும் முகச் சுளிப்பில்லை!
முழங்காலளவுத்தண்ணீர்...
முட்டி மோதிக் கொண்டு
பழுதடைந்த சாலைகளின்
பள்ளங்களில்...
குட்டிக் குட்டிக் குளங்களாகி!
எல்லோரும் மகிழ்ந்தனர்!
நனைந்து நனைந்து
அவர்களின்
ஆசுவாசப் பெருமூச்சு
உஷ்ணத்தில் -   நிமிடமாய்
வெளிப்பட்டது வானத்தில் -
முகமூடி மாட்டிக் கொண்ட
முரட்டு சூரியன்!

கோடை  மழை
கொதித்த வெயிலுக்கு
இயற்கையின்
குளிர்ச்சிக் குடை!

வெப்பமயமாதலைத்
தடுக்க
வேண்டிய பொழுதெல்லாம்
வந்து போ மழையே!

நன்றியோடு வணங்கியவர்
வரிசையில்
நானும் ஓர் ஆளாய்

இப்படியும் ஒரு சமாளிப்பு

எழிலி
எனக்கு  இப்பொழுது
மூன்று  வயதாயிருக்கலாம்!               

அப்பா எங்கே  என்று                            
அம்மாவைக் கேட்டால்,

தப்பாமல்  இந்தப்
பொம்மையைக்
காண்பிப்பாள்!

அவர்  நினைவாய்
எனக்கு
இதுவென்றால்,   
என் நினைவை
எதைக் கொண்டு
அவரிடம் உறுதி
செய்வாள்?

கண்ணீர்  தோய்ந்த
தன் புடவைத் தலைப்பால்
என் முகந்துடைப்பாள்!

எங்கோ இருப்பதாய்
ஒப்புக்குச் சொல்லி வைப்பாள்!

எப்போ வரும் எனக்
கேட்டால் -
என் உச்சி முகர்ந்து
தலையைத் தடவுவாள்!

சாமிக்குத்தான் தெரியும்
அம்மாவின் சங்கடமும்
சமாளிப்பும்!

எப்படியும்  ஒருநாள்
அப்பா வரும்

டிசம்பர் நினைவு

எழிலி
டிசம்பர் 26 - 2004
அதிகாலை வேளை
ஆபத்தாய் முடிந்தது!
உறக்கம் கலையுமுன்னே
இறப்பு நிகழ்ந்தது!
விடியவில்லை -
வேறுகால  மாற்றமேதும்
தெரியவில்லை!
விரல் நீட்டும் தூரத்தில்
விதியின் விளையாட்டு முடிந்தது!
சூரியனுக்கு மட்டும்
சூன்யம் முன்பே தெரிந்தது
பாவத்திற்கு ஆளாகாமல்
மேகத்துக்குள் ஒழிந்தது!
நினைத்துப் பார்க்க
முடிய வில்லை
நெஞ்சம் படபடத்து
நின்றது!அந்த மணித்துளிகள்
பயத்தால் இன்றும் நிறைகிறது!
மதியால் மறந்தறியா
பெருங்கேடு நிகழ்ந்தது!
மனங்கள் பதைபதைக்க
மரணம் அரங்கேறியது!

ஆழ்கடலில் அலையை விட்டு
அள்ளிக் கொண்டு வந்தது
கடல் - நீரை மட்டும் கரையைத்
கடந்து  வாரி இறைத்து வென்றது!

மனிதரெல்லாம் ஒளிந்து கொள்ள
சந்தர்ப்பம் இல்லை!
மரஞ்செடி கொடிகள் நகர்ந்து
கொள்ள நேரமும் தரவில்லை!

தன் பெருமை நிலை நாட்ட
எல்லை  தாண்டி பாய்ந்தது
ஊர் முழுதும் ஈரமாக
தகதிமித் தாண்டவம்  ஓய்ந்தது!

இன்று .......

மிஞ்சியிருக்கும் உப்பங்
கழிகளெல்லாம்  கல்லறைகள்
விளைந்தது !
வேடிக்கைப் பார்க்கும்
கடல் அனல் மூச்சுக்
காற்றை வெறுமையாய்
வீசுகிறது!
இரவு பகல் ஓயாது
வருந்தி வருந்தி மாய்கிறது!
இப்பொழுதும் இரைச்சலுடன்
ஒப்பாரி வைக்கிறது - தவறான
தன் செயலுக்காய்  மண்டியிட்டு
அழுகிறது!

ஏதோ ஓர் புதுமை   இந்தத்
திசம்பரில் தொடங்கப் போகிறது!
தன் பாவத்திற்கு பரிஹாரம்
கடல் -
தேடிக் கொள்ள துடிக்கிறது!
சுனாமியாய்
உயிர் குடித்த கடல் ஒரு
ஒப்பந்தம் செய்கிறது
உவர் நீரைக் குடிநீராக்கி
உதவுவதாய்ச் சொல்கிறது !
ஒரு பொழுதும் மானுடத்தைத்
தீண்டுதலில்லை -எந்தச்
சூழலிலும்தன் எல்லை
தாண்டுவதில்லையென
சமுத்திரம் சபதம் செய்கிறது!
எல்லோருக்கும் நன்மை
நடக்குமென்ற நம்பிக்கையில்
இந்த டிசம்பரையும்
சேர்த்துக் கொள்வோம் -நம்
புது நாட்குறிப் பேட்டில்!

நான் தொடங்கிவைத்த வேள்விகள்

மு மேத்தா
 எனது வாழ்க்கை நாடகத்தில்
எத்தனையோ காட்சிகள்
எத்தனையோ காட்சிகள்
எழ முடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான்
மாபெரிய காவியம்
மாபெரிய காவியத்தின்
மனம் சிதைந்த ஒவியம்!

ஆடுகின்ற பேய் மனதில்
ஆயிரமாம் ஆசைகள்
ஆயிரமாய் ஆசைகட்கு
அனுதினமும் பூசைகள்!

சூடுகின்ற மாலைகளோ
தோள்வலிக்கும் தோல்விகள்
தோள்வலிக்கும் தோல்விகள் நான்
தொடங்கிவைத்த வேள்விகள்

தமிழ்க் குடும்பம்

வாலி
எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்

ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்

மாமியார்
கசடதபற

மாமனார்
ஙஞணநமன

மணவாழன்
யரலவழள

மருமகள்
நான் மட்டும்...

அவர்களுக்கு ஆகாத
அக்கனாவாக (ஃ)

அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தை சொன்னேன்
அவள் சொன்னாள்

அடியே அக்கனா
தானடி ஆயுத எழுத்து

அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்

இப்பொழுது...

மாமியார்
மாமனார்
மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள் ! -வாலி 

ரகசியம்

தேவி ராஜன்
மனதுக்குள் தொலைத்த
“வாழ்க்கையை”
மணிக்கணக்காய் வெளியில்
தேடிக் கொண்டிருக்கிறாய்!

பணமா, புகழா
பதவியா, அதிகாரமா
இன்னும் எதுவோ?
இவை தெரியாமலேயே
தேடித் தேடி வயது
தொலையும்.

தேடலில் சோர்ந்த
தேகம்…
இளைப்பாறும் போது…
இதயம் சொல்லும் இதமாக,

“உன் சந்ததிக்களுக்கேனும்
இன்றே சொல்லிவிடு
இந்த ரகசியத்தை!”

மாற்றுத் திறனாலிகள்

இதயவன்
வானில் பறக்கும்
பறவை போல்
இருந்து விட்டால்
பறந்து விடலாம்.

பூமியில் விழுயும்
மழையை போல்
இருந்து விட்டால்
எழுந்து விடலாம்.

கடலில் வாழும்
மீனை போல்
இருந்து விட்டால்
மிதந்து விடலாம்.

மண்ணில் மறையும்
விதையை போல்
இருந்து விட்டால்
புதைந்து விடலாம்.

காற்றில் கரையும்
பனியை போல்
இருந்து விட்டால்
உறைந்து விடலாம்.

இவர்களுக்கு இதில்
எதுவுமில்லை
மனிதனாய் பிறந்தும்
சிறகில்லை

ஆனால்,
இவர்களுக்குள் தான்
எத்தனை, எத்தனை
திறமைகள்!
அத்தனையும்
கடவுள் தந்த
கடமைகள்!

மாற்றி அழைக்கலாம்
இவர்களை இனி
"மாற்றுத் திறனாலிகள்"
என்று

கரைகளுக்கப்பால்

மன்னார் அமுதன்
நாளை, நாளையென
எத்தனை நாளைகள்
எத்தனை இரவுகள்

ஒவ்வொரு இரவிலும்
புது விடியலை
நோக்கியதொரு பயணம்
இரவில்தானே எழுதப்படுகின்றன

இலங்கையைத் தழுவும்
அகதிகளின் விடியல்கள்
அகதியிடம்
அகதியாய் வாழும்
அவதி வாழ்க்கை

புதிதாய் தெரிந்த இருள்
இப்போது பழகியதாய்
அந்நியமாய் முறைத்த முகங்கள்
தற்காலிக அந்நியோன்யமாய்

துக்கத்தோடு கூடிய
நலன் விசாரிப்புகள்
துயரத்திலும் சிறுமகிழ்வாய்
இரை மீட்டல்கள்

காத்திருக்கும் அகதிக்கு
ஒத்தடமாய் இதமளிக்க
இன்றாவது கரை தொடுமா
கட்டு மரங்கள்

இதே கடலின்
அடுத்த கரையினில்
அலைகளைத் தாண்டியும்
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
அகதியின் அலறல்கள்

கல்வியும், கலவியும்

கேயார்
கற்க கற்க
முதலுமில்லை, முடிவுமில்லைதான்!

புதிராயும், புதுமையாயும்
இருப்பது எப்போதும் இங்குதான்!

ஒவ்வொரு முறையும்
கற்பதும், கற்பிப்பதும் சுகம்தான்!

நடந்ததை நினைவில் வைத்து,
அசை போடுவதில் என்றும் ஆனந்தம்தான்!

ஒன்றைப் பொதுவில் வைத்து,
ஒன்றை மறைவில் வைத்து
வாழ்தல் முறையாகும்!

மாறாய்க்
கலவியைப் பொதுவிலிட்டு,
கல்வியைக் குடத்திலிட்டு
வாழ்தல் பிழையாகும்!

கன்னியே கவனம்

கலைமகள் ஹிதாயாரிஸ்வி இலங்கை
 
ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே
 
-கலைமகள் ஹிதாயாரிஸ்வி  இலங்கை