தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஒரு துப்புரவு தொழிலாளி மகளின் மனசாட்சி

மு. மணிமேகலை
நான் காலையில் கண் விழித்தால்
அருகில் நீ இருக்கவேண்டுமென்று
ஏங்கி இருக்கிறேன்
நீ எனக்காக உழைக்கப்போகிறாய் என்பதை மற்ந்து

நீ சாலையை துர்ய்மைபடுத்தும் போது
உன்னுடன் பேசினால் அவமானம்
என்று விலகி இருக்கிறேன்
நீ என் அம்மா என்பதையும் மற்ந்து

உன் மீது வீசும் நாற்றத்தை கண்டு
முகம் சுளித்து இருக்கிறேன் என் மீது வீசும்
நறுமணத்திற்கான விலை அதுதான்
என்பதையும் மற்ந்து
நீ அழுக்கு உடையுடன் வலம் போது
நான் உன்னை வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன்
நான் உடுத்தும் ஆடைகளுக்கான மாதிரியே
அதுதான் என்பதையும் மற்ந்து

நீ செய்யும் தொழிலையும், நான் பிறந்த
ச்மூகத்தையும் கேவலம் என்று எண்ணி இருக்கிறேன்
நம் சமூகத்திற்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற
எண்ணத்தையும் மற்ந்து
இனியும் மறந்து இருந்தால்
இறந்த உடலுக்கு சம்மாவேன்

நீ கல்பனா சாவ்லாவுக்கு சம்மானவள்
அவள் விண்ணை தொட்டு ஒரு முறை இறந்து விட்டாள்
நீ தினம் தினம் இந்த மண்ணை சுத்தம்
செய்து இறந்து கொண்டிருக்கிறாய்

நீ அன்னை தெரசாவுக்கு சம்மானவள்
அவள் அடுத்தவன் துப்பிய எச்சிலையைதான்
கையில் பெற்றுக் கொண்டாள்
நீ அடுத்தவன் பயன்படுத்திய கழிவறையை
அல்லவா சுத்தம் செய்கிறாய்

இப்படியாக,
உன்னை நினைத்து பெருமைப்பட
பல இருந்தும் மறந்து மரக்கட்டையாக
வாழ்ந்து இருக்கிறேன்

இனி பெருமையோடு உன் மகள் என்று
உரக்க சொல்வேன்
இந்த தரணியிலே

மலரட்டும் புத்தாண்டு

எழிலி
வருடமெல்லாம் வசந்தம் மலரும்!
வறுமை தொல்லை யாவும் தீரும்!
மழலைகள் சிரிப்பு  போலே
கவலை மறந்த வாழ்வு காலமெல்லாம்
நம்மைத் தொடரும்!

சிறகு விரிந்த பறவையாகி
சிந்தனை கடந்த உலகில் பறப்போம்!

பரந்த   பூவுலகில் பரம் பொருளை
சிரம் தாழ்த்தித்தொழுது மகிழ்வோம்!

ஒளிவுண்டு,மழையுண்டு!
உயிர்களெல்லாம் நட்புண்டு!
ஒவ்வொன்றும் நமக்கென்று
படைப்பாக அமைந்ததுண்டு!

உயர்வு தாழ்வென்ற ஒப்புமை
கண்டு கண்டு இருக்கும் நலத்தைக்
கெடுத்தல்  எதற்கு!  பிறந்தோமே
நல் நிலையில் --, நிகழ்விலும்
எதிர்விலும் நன்மையே கொண்டு
நிஜத்தை  மட்டும் சுவைப்போம்
இது  முதற் கொண்டு

புத்தாண்டே வருக

ரிஷபன்
வா.. ஒரு கை கொடு.
சூரியனை திசை மாற்றலாம்!
பிரதேசங்கள் எல்லாம்
இருட்டில்லாமல் செய்வோம்.

புதிய பூச்செடிகள்
உண்டாக்குவோம்.
குழந்தைகளின் குறுக்கே
நடக்காமல் இருப்போம்.

அறியாமை என்பது
குணப்படுத்த முடியாத
நோயல்ல..
கூடங்களை விட்டு கல்வியை
வெளிக் கொணர்ந்து நம்
கையகப்படுத்துவோம்.

நேசிப்பது சொல்லிப் பெறுவதல்லதான்.
பரவாயில்லை..
மறதி இயல்பான மாந்தருக்கு
வகுப்பெடுப்பொம்.

எதிர்கால இனிமை
கனவு கண்டால் சாத்தியம் என்று
எத்தனை நாளைக்குக்
கண் மூடி எதிர்பார்ப்பது?
கனவு காணவே அவசியமற்ற
நிகழ்காலப் புதுமைகளைப்
பொதுவுடமையாக்குவோம்.

இனி வருங்காலம்
அழகியலுக்கான கவிதைகளுக்காகவே!
புது விடியலுக்காக அல்ல.. என்பதை
இந்தப் புத்தாண்டின் இறுதிக்குள்ளாவது
நிறைவேற்றி விடுவோம்!
அடுத்த வருடம் பிறக்கும் தலைமுறை
"Archives" ல்தான்
பார்க்கவேண்டும்..
நாம் இதுவரை சேர்த்து வைத்த
தனி மனித அநாகரிகங்களை

காற்றின் விரல்கள்

கோகுலகண்ணன்
முடிவற்ற பிரயத்தனமாய்
எல்லையில்லா ஓவியத்தை
அழித்தழித்தழித்தழித்தெழுதும்
பாலை மணற்படுகையில்

ஆசுவாச மீன்கள்
திடுக்கிட்டு திசைதொலைய
அலையும் வளையங்களால்
அசைக்கும் விளையாட்டில்

ரகசிய மெளனம் சேகரித்து
நிழலிருட்டில் ஒடுங்கும் மரங்கள்
தோல்வியுற்று கலைகயில்

கோளத்தின் நீளம் மீறும்
காற்றின் ஓயாத விரல்கள்
காண நேர்ந்தது
ஒரு பொழுதில்.
புல்லரித்துபோனேன்

கரம்பற்றி என்னை
அழைத்து சென்றது யார்
என்று அப்புறம் யோசித்தேன்

உரிமை மனு

ஜாவிட் ரயிஸ்
தவண்டு தவண்டு முடியாமல் -
மீண்டும்
தொட்டில் தேடும்
மழலையின் அவஸ்த்தை
அடைந்து கொள்ள முடியாமல்
அடங்கிப் போகும்
என் கனவுகளுக்குள்


குயில் கூடு கட்டுமென்று
காத்திருப்பார் எவரும்
கூடு கட்டும் காகத்தை
கண்டுகொள்ள விரும்பவில்லை


தாகமுள்ள ஜீவனுக்கு
தண்ணீர் தர நாட்டமில்லை
தாகமூட்டி சிலருக்கு ஏனோ
பன்னீர் பிச்சை போடுகிறார்?


போட்டிகள் இல்லாமலே
தோற்றுப் போகிறேன்
போர்வைகள் இல்லாமலே
போர்த்தப் படுகிறேன்


உரிமை கேட்டு என் நாவும்
உதட்டோரம் எட்டிப் பார்க்கும்...

'வாடகை வெளிச்சத்தில்
வெள்ளி நிலா கைக்கொட்டும்..
நகைத்துத் தூற்றும்
மெய்யழகன் கதிரவனை...

கதிரவனும் காத்திருப்பன்
என்றும் போல
விடியலோடு விடிவு வரும்
நம்பிக்கையில் '

அஃறிணை  உதாரணங்களோடு
அன்பான அடக்கு முறைகள் -
உதட்டோடு என் நாவை
கட்டிப் போடும்

கலைஞனும் கடவுளே

உமா
கலைஞன் ஒரு படைப்பாளி!
அவன் படைக்கும் படைப்புகளுக்கு
அவனே ஆதி மூலம்!

சொல் புத்தி கேட்டு ,
சுய புத்தி கொண்டு ,
வறுமை நோக்காது ,
வருமுன் காக்காது ,
கற்பனை திறனும் ,
கற்று அறிந்த அறிவும் வைத்து ,
தொலை தூர நோக்குடன்
தொடுக்க படும் மாலை
இவன் படைப்புகள்

உருவாக்கம் மட்டுமே
இங்கு உன்னத நோக்கம்!

கலைஞனோ ,
தன் படைப்புக்கள்
பக்குவமடையும் வரையில்
பக்தனாய் இருக்கிறான்

பல வித பரிகாசங்களை
தாண்டி பிரகாசிக்கையில்
பரமாத்மா ஆகிறான்

மொத்தத்தில்
மோசமான விமர்சகனும் அவனே.
முதல் ரசிகனும் அவனே .

படைக்கப் படும் படைப்போ ,
படைப்பு வகுக்கும் துறையோ ,
எது எங்ஙனம் ஆயினும்
கலை வழி தன்னை செதுக்கி
தன்னை கொண்டு
கலையை வளர்க்கும்
ஒவ்வொரு கலைஞனும் கடவுளே

நாளைய இளைஞன்

வாணிகல்கி வனிதா
இளைஞனே...
இவ்வுலகத்தில்
இயல் ,இசை , நாடகம்,
என்னும் முத்தமிழை
பயிலாவிடினும்
தமிழன் என்ற
உணர்வை
தெவிட்டத் தெவிட்டப்
பருகிவிடு.

இடையறாத இவ்வுலகில்
உன் இமைகளை
இமைக்காமல் வைக்க
மறக்காதே.

உனக்குள் பொதிந்திருக்கும்
பல கேள்விகள்
உன்னால் விடை காண
காத்திருக்கின்றன.

உன்னுடைய பிறப்பும்,
இறப்பும் கூட
இருட்டில் தான்.
ஆம்!
உன் கருவறையும்
கல்லறையும் இருட்டு தானே?

உனக்கு இடையில்
இருக்கும் இயங்கா
உலகத்தை இயக்கக்
கற்றுக்கொள்.

உன் கண்களை
திறந்து திரியும்
சூரியனுக்கு
மெருகூட்டு.

கண்முன்னே கொலை
நடந்தாலும்
தலைக்கணம்
கொண்ட உலகம்
ஊமை வேடம் போடும்.

காதல்,
காமம்,
கோபம், இவை
உன் வெற்றியைக்
குலைக்க இவ்வுலகம்
போட்ட வேகத்தடைகள்.

சூழ்ச்சிக்கடலில்
அலைகளாய் நகைக்கும்
மங்கையின் அகத்தில்
வீழ்ந்து விடாதே.
அலைகள் உன்னை
அடித்துச் சென்று விடும்.

புதிதாய்ப் புறப்பட்டு
வந்த தென்றல் பூவை
சாய்த்து விட்டுச்செல்லும்
வாலிபனே!
உன் வீழ்த்தலால்
இவ்வுலகம் வீழக்
காத்திருக்கின்றது.

கைகூப்பி கடவுளை
வேண்டு.
காதலர்கள் அற்ற
கடற்கரையை.
நண்பர்கள் உற்ற
உலகத்தை.
சாதிகள் சரிந்த
சமுதாயத்தை.
ம்ம்ம்ம்!

நாளை விடியல்
சூரியனுக்கு
மட்டுமல்ல.
வீரியனே
உனக்கும் தான்

உன்னையே நினைப்பதனால்

நித்தியசார்லஸ்
நேரத்தைதிருடும்
நினைவுகளை
தண்டிக்கமுடிவதில்லை.
எல்லாநாளும்
ஒருநாள்போல
இருக்காதென்கிறார்கள்
உன்னையே நினைப்பதனால்
எனக்குமட்டும்
எல்லாநாளும்
ஒருநாள்போலவே இருக்கின்றன
நீ பிரிந்து
போனதாலே
நான்மட்டும்
சிக்கிக்கொண்டேன்
உன்காதலிடம்.
இனி எந்தப்பெண்ணையும்
பார்க்கமுடியாதபடி

கனா கண்டேன்

மலர்
இரவின் இருளில்
இமைகளில் ஒளிர்ந்த
உன் நிழலின் பிம்பம்,
நிஜத்தில் என்னை தீண்டுவதாய்
நினைக்கிறேனடி.

உன் ஒரப் பார்வையில் - என்
உயிரோட்டத்தை நிறுத்தியவளே!

ஒளித்து வைத்த இரகசியங்களை
அம்பலபடுத்த செய்கிறாயடி.

உன் அழகின் ஆணவம்
என் ஆண்மைக்கு சவால் விடுகிறது.

பூவிதழின் மென்மையான புன்னகை
புவியின் சுழலை நிறுத்துகிறது.

தென்றலினும் மெல்லியதான் உன் சுவரிசம் - என்
சுவாசத்தை மூர்ச்சையடைய செய்கிறது.

"செல்"லரித்த பேச்சுகள் -
நீ பேசும் பொழுது மட்டும்
சிலிர்த்தே கேட்கிறேன்!

மழைத்துளிச் சாரல்
என் மீது படர்வதாய் உணர...

சாத்தானின் சத்தம் - காதோரத்தில்
"சனியனே! இன்னும் என்ன தூக்கம்..??"
தந்தையின் அறைகூவல்...
விடியலை உணர்கிறேன்!
கனா கண்டேனடி தோழி

நீ

தமிழ்மணி
தனிமையை உணர்கிறேன்
என்னை சுற்றி எல்லோரும்
இருந்தும்
நீ இல்லையே

ஒவ்வோரு அரிசியிலும் கூட
உரியவர் பெயராம்
அப்படி எனில் உன் உதட்டில்
என் பெயரா?

என் நினைவு தேக்கத்தை - நீ
நிறைத்துவிட்டாய்போல
புதிய நிகழ்வுகள் எதுவும்
நினைவில் நிலைப்பதில்லையே

நான் இழந்ததற்க்கும்
இழப்பதற்க்கும் ஈடு செய்பவள் நீ தானே
என் உயிரின் உதிரமும் நீ
உதிரத்தின் உயிரும் நீ

கடந்துவந்த பாதைகளில்
மைல்கற்கல் அனைத்திலும் நீ
உன்னை நெருங்கியபோதும்
உன்னை விட்டு விலகியபோதும்

எனக்கான நிமிடங்களின்
எண்ணிக்கை குறைத்து
அதை
உனக்கான நிமிடமாக உயிர் கொடுத்தேன்
உயிர் வாழ உன் நினைவு போதும் என்றால்
மரணம் என்னிடத்தில்
மரணிக்கும்

எத்தனை முறை சொன்னார்கள்
காதல்
பசி அடக்கும்
ருசி அடக்கும்
கவிதைகள் வடிக்கும்
கனவுகள் படைக்கும்
உயிரை கறைக்கும்

உண்மை என்றேன்,
உன்னை கண்டபின்