தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நட்பு

மலர்
 
மலரின் நட்பை
கொய்ய நினைத்தேன்...
முள்ளில் தைத்து கசிந்தது
நட்பின் ஈரம்...
சிவந்த கண்ணீராய்

குழந்தை கவிதை

அருட்பெருங்கோ
ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!

அன்புடன் உணவூட்டி
அழகாய் உடையுடுத்தி
செல்லமாய் அதட்டி
பக்கத்தில் படுக்கவைத்து
குழந்தை காட்டுகிற அன்பில்
உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
பொம்மை.

முதன்முறை திரையரங்கிற்கு வந்திருந்த குழந்தை
ஒலியளவு அதிகமாயிருந்ததால்
தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
‘ரிமோட்’ கொண்டுவராததற்கு

பரிசுத்தத்தின் பயன்பாடு

மனுஷ்யபுத்திரன்
அவளைப்போல் யாரும்
எல்லாவற்றையும்
அவ்வளவு
சுத்தமாக வைத்திருக்க முடியாது

அவ்வளவு நேர்த்தி
அவ்வளவு ஒழுங்கு
அவ்வளவு கவனம்
அவ்வளவு அழகுணர்ச்சி
அவ்வளவு திட்டமிடல்
அவ்வளவு பரிசுத்தம்

நாம் யாருக்கும்
ஒருபோதும்
ஒன்றையும் பயன்படுத்தவே
தோன்றாது

ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவோ
ஒரு சோபா நுனியில் அமரவோ
ஒரு முத்தமிடவோ

புதிய ஆண்டு

ஈஸ்வரி
இமை மூடாது
பார்த்திருந்தாலும்
இனி திரும்பாது
சிதறிய காலங்கள்!

இதழ் மூடாது
பேசினாலும்
இனி திரும்பாது
இழந்த வருடங்கள்!

இடை விடாது
சிந்தித்தாலும்
இனி வராது
சென்ற பருவங்கள்!

இழந்தவற்றை
மறந்திருப்போம்

இனி வரும் நாட்களை
வரவேற்போம்

காதல் என்றால் என்ன?

கல்முனையான்
 
காதல் என்றால் என்ன?
நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....

நான் சொன்ன பதில்

வெறுமையாய்க்கிடக்கும் இதய அறைகளில்
வாடகைக்காய் வந்திருக்கும் ஒரு குடும்பம்
மாதாந்த வாடகையாக ஓரத்தில் ஒரு சிணுங்கல்
அச்சிணுங்கலின் ஈரலிப்பில் உப்பிப்போன இதயம்.

சில வேளைகளில் சிறு சிறு சிராய்ப்புகள்
அச்சிராய்ப்பினுள் கொதிக்கின்ற எண்ணெய்க் குதமாய்
வெற்றுப் பையுடன் ஏங்கும்
ஏழைகளின் அங்கலாய்ப்பு.

காதலின் பின் உன் மூளைக்கும்
உன் வீட்டு  மூலைக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா
இரண்டிலுமே கவலைப் புழுதியால்
படிந்த ஒட்டடைகளின் சாம்ராஜ்யம்.

அடிக்கடி சிரித்துக்கொள்வாய்
நீ காலைக் கடன் முடிக்கும் வேளை கூட
ஏன் தெரியுமா
உன்னால் இயன்ற கடன் ஒன்றை கழித்ததற்காக.

சில வேளைகளில் நீயும் ஞானியாவாய்
உன் தலைக்குப்பின்னால் ஞான ஒளி தோன்றும்
அதை சில பேர் தப்பாக நினைத்து
உன்னிடம் தீட்சை பெற வருவர்

அவர்களுக்கு தெரியாது போலும்
அந்த ஒளியின் அடிப்படை மூலம் எதுவென்று
அது தெரிந்தால்
அவர்களும் ...
வேண்டாம் எதற்கு இந்த வம்பு

அன்பும் அரவணைப்பும்

திவ்யாநாராயணன்
உனக்கு பிடித்தவர்களின்
பிடித்தவற்றை
உனக்கு பிடித்ததாக
மாற்றிக் கொல்-வதைவிட
அவற்றை ரசிக்கத்
தெரிந்தவனாக இரு
உன் அன்பார்ந்தவர்களின்
துன்பத்திலும்
உன் அன்பும் அரவணைப்பும்
அவர்களுக்கு துணைபோகும்.
உன் உயிர் பிரிந்தாலும்

ஆனந்த அருவி

பாவண்ணன்
அடர்ந்த மனஇருட்டில்
அடுக்கடுக்கான மலையிடுக்கில்
எங்கோ அடைபட்டுக் கிடக்கிறது
ஆனந்த அருவியின் ஊற்று
பாயும் இடமெங்கும் குளுமை
பனிச்சாரல் ததும்பும் புகைமுட்டம்
தாவி இறங்கும் வழிநெடுகத்
தழுவிப் புரளும் குளிர்த்தென்றல்
பாறையோ மரமோ செடியோ
எதிர்ப்பட்டதை இழுத்தோடும்
ஊற்றுக் கண்ணில் துருவேற
ஊருராய் அலைகின்றேன்
சுமைகூடி வலிகூடி
இமைமுடாது திரிகின்றேன்
உச்சிமலை அருவியின்கீழே
உடல்நனைய மனம்நனைய
ஒற்றைக் கணப்பொழுதில்
துருவுதிர தடையுடைய
பொங்கி வழிகிறது ஆனந்த அருவி
தோள்தழுவி முகம்தழுவி
இரண்டு அருவிகளும் இணைந்து வழிகின்றன
இன்பச் சிலிர்ப்பை
எடுத்துரைக்க மொழியில்லை
ஆதிப் பாறையென
அங்கேயே நிற்கின்றேன்
அனைவரையும் தாண்டி
வழிந்தோடுகிறது அருவி- 

அடுப்பங்கரை

கீதா
சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..
ரே-ஷன் கடை வாசல் போயி
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…
கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..

- கீதா (geeths.info)

துரோகப் பாம்பு

ஆண்டனி
ஆதாம் ஏவாளுக்கு
ஆப்பிள் கொடுத்து
ஆண்டவரிடமிருந்து பிரித்த
அந்தப் பாம்பு..!

சீசர் கொன்று ஆண்டனி கொன்று
கிளியோபாட்ரா மார்தவழ்ந்து
கிளியொத்த பேரழகி கொன்ற
அந்தப் பாம்பு..!

கர்ண்னைக் கொல்ல
காப்பியத்தில் கண்ணன் பிடித்த
அந்தப் பாம்பு..!

எட்டப்பனை வைத்து
கட்டபொம்மன் கதை முடிக்க
வெள்ளையர் பிடித்த
அந்தப் பாம்பு..!

அன்பை அழிக்கும்
நட்பை நசுக்கும்
அந்த நச்சுப் பாம்பு..!

அரசியெலாம் ஆழ்கடலில்
அதிகமாய் ஊரும்
ஆசை காட்டி அழிவு தரும்
அந்தப் பாம்பு..!

எவரும் எட்டிப் பார்க்கமுடியா
மனிதனின் மனமெனும்
அடர்ந்த பெருங்காட்டுக்குள்
ஏதோவொரு மரத்தின் நெடுங்கிளையில்
அழிவில்லாத ஆகாயமாயின்னும்
நெளிந்து கொண்டுதானிருக்கிறது
துரோகமெனும் பெயர் சுமக்கும்
அந்தப் பாம்பு...!
 

வீடு

கோகுல கண்ணன்
என் சரணாலயத்தில்
அவ்வப்போது பறவைகள்
குடிகொள்கின்றன

பறவைக்கூடுகளால்
ஆக்கப்பட்ட கூடென
எத்தனை பெருமையெனக்கு

அதிரும் வீடு
இடையற்ற படபட
சிறகடிப்பில்
மொழிமீறிய
தீராத உரையாடலில்

பறவைகளின் அன்பளிப்பென
சேமித்து வைக்கிறேன்
கழன்றுவிழும் சிறகுகளை

சிறகு முளைத்த நந்தவனமாய்
பூத்துக்குலுங்கும் வீடு
ஒரு நாள்
பூமியின் ஈர்ப்பை
இலகுவாய் உதறி
காற்றின் கரம்பற்றி
அந்தரவெளியில் தாவியேறும்

நான் காத்திருக்கிறேன்

பறவைகளின் முடிவற்ற கருணையில் உதிரும்
அந்த ஒற்றைச் சிறகுக்காக