தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இறந்தவனின் ஆடைகள்

மனுஷ்ய புத்திரன்
இறந்தவனின் ஆடைகளை
எப்படி பராமரிப்பதென்றே
தெரியவில்லை

இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்து கொண்டுவிட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகிவிடும்

அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமில்லை

தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பார உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்

இறந்தவனின் ஆடைகளை
அழித்து விடலாம்தான்
இறந்தவனைத்
திரும்ப திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன

இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது

ஆழம்

ருத்ரா
 

 
அவள் நகம் கடித்தால்
அவள் நகம் ஆகுவான்.


அவள் இமை கவிழ்த்தால்
அவள் விழி ஆகுவான்.


அவள் புன்னகைத்தால்
அவள் இதழ் ஆகுவான்.


அவள் பேசினால்
அவள் நா ஆகுவான்.


அவ‌ள் வேர்த்து நின்றால்
அவ‌ள் உட‌ல் ஆகுவான்.


அவ‌ள் பார்த்து நின்றால்
அவ‌ள் ஒளி ஆகுவான்.


அவ‌ள் பேசி நின்றால்
அவ‌ள் தமிழ்  ஆகுவான்.


அவ‌ள் உண்ண‌ச் சென்றால்
அவ‌ள் உண‌வு ஆகுவான்.


அவ‌ள் மூச்சிழுத்தால்
அவ‌ள் உள் செல்லுவான்.


அவ‌ள் மூச்சு விட்டால்
அவ‌ள் மூச்சு ஆகுவான்


அவள் தூங்கச்சென்றால்
அவள் மெத்தை ஆகுவான்.


அவ‌ள் முணு முணுத்தால்
அவ‌ள் வீணை ஆகுவான்.


அவ‌ள் உள்ள‌ம் என்றால்
அவ‌ள் ஆழ‌ம் க‌ண்டானா?


இல்லை...இல்லை.
இல்ல‌வே இல்லை.


அவ‌ன் காத‌லித்தான்.
அவ‌ள் வெளியே நின்றாள்.
 

வாழ்க்கை

க.காந்திமதி
என்னை மறந்த நிலையில்
எச்சில் வடித்துத் தூங்கிய
ஓர் இரவில்
எனக்குள் இருந்த
‘நீ’யும் நானும்
பேசிக் கொண்டோம்

‘நலமா?’ என்றாய்

‘இருக்கிறேன்’ என்றேன்

‘இருப்பது எதற்கு?’ என்றாய்

‘இனியொரு நாள் காண’ என்றேன்

‘காண்பது எதற்கு?’ என்றாய்

‘இன்று போல் வாழ , நாளையையும்’ என்றேன்

‘இன்றென்ன வாழ்ந்தாய்?’ என்றாய்

“முழுதாய் விடியும் முன் எழுந்தேன்,
மூச்சுவாங்க தண்ணீர் இறைத்தேன்,
முற்றம் தெளித்துக் கோலமிட்டேன்,
வீடு துடைத்தேன்
துணிதுவைத்து உலர்த்தி
உலர்ந்ததை மடித்தேன்
மூன்று வேளை சமைத்தேன்
பாத்திரம் துலக்கி அடுப்படி மெழுகினேன்
பரிமாறி பசியாறினேன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சொல்ல மறந்த வேலைகளும் செய்தேன்” என்றேன்

‘வாழ்ந்ததைக் கேட்டேன் –
செய்த வேலைகளைச் சொல்கிறாய்
இது தான் உன் வாழ்க்கையா?’ என்றாய்

‘சுருக்’கென்றிருந்தது எனக்கு
‘நீ யார்?’ என்றேன்

‘இதுவரை நீ வாழாத வாழ்க்கை’ என்றாய்
மறைந்தாய்

விடிந்தது – எழுந்தேன்
தண்ணீர்க் குடம் தூக்கி
கிணற்றடி நடந்தேன்

”வாழ்வது எப்படி?”
என்று சிந்தித்துக் கொண்டே

பரம்பொருளே

தோ.அறிவழகன்
தூசுகள்
நெஞ்சத்தில்
எந்தப் பொருளாலும்
துடைத்து விட முடியாதபடி

அழுக்குகள்
மனத்தில்
எந்த சொஅப்பாலும்
கழுவி விட முடியாதபடி

காயங்கள் இதயத்தில்
எந்த மருந்தினாலும்
மறைத்து  விட  முடியாதபடி

கோபங்கள்
நினைவெங்கும்
எந்த கங்கையாலும்
கரைத்து விட முடியாதபடி

குரூரங்கள்
உடலெங்கும்
எந்த மனத்தாலும்
மாற்றி விட முடியாதபடி

இவை யாவும்
ஒன்றாக்கி
ஓருயிராய்  உலவ வைத்த
பரம் பொருளே

என்னிடம் இருந்து
அகந்தையை மட்டுமாவது
பறித்துக்கொள்  பரம் பொருளே

தத்தளிக்கும் ஓடங்கள்

கவிஞர் வல்லம் தாஜுபால் (தஞ்சை தாமு)
இளமை கரையுது வீணில்! - இனி
என்று வரும்இள வேனில்?
ஜன்னல் கம்பியில் சாய்ந்தபடி
ஜரிகைக் கனவுகள் மேய்ந்தபடி
இன்னும் சிந்தக் கண்ணீரின்றி
ஏங்கி இளைக்குது பருவக்கொடி!
திருமணம் என்பது வியாபாரமா? - வரும்
உறவுகள் எல்லாம் வெளிவேஷமா?
கூவத்தில் கூலி கொடுத்துக் குளிப்போர்க்குக்
கங்கையில் குளிக்கப் பணம்வேண்டுமா?
முகூர்த்த தேதிகள் கிழிகிறதே! - மூன்று
முடிச்சுக்கு வழியின்றிக் கழிகிறதே!
கன்னியர் விடுகிற பெருமூச்சுக் காற்றில்
கப்பல்கள்கூடக் கவிழ்கிறதே!
கல்யாண நிச்சயம் சொர்க்கத்திலே! - அதன்
கதவுகள் திறப்பது ரொக்கத்திலே!
வாலிப ரோஜா வாடிடும் முன்னே
வருமோ வண்டு பக்கத்திலே?
இதயம் மணக்கப் பூத்திருந்தாள்! ஓர்
இளைஞன் மணக்கக் காத்திருந்தாள்!
இரவும் பகலும் இமைகள் நனைய
எத்தனை ஊர்வலம் பார்த்திருந்தாள்!
கால காலமாய்க் காயங்கள்! பெண்
கதைகள் முழுவதும் சோகங்கள்!
கரைசே ராமல் மழையிலும் புயலிலும்
தத்த ளிக்குதே ஓடங்கள்!
ஜாதகம் சரியாய் இருக்கிறது!
ராசிகள் பொருந்திச் சிரிக்கிறது!
மோதிரம் வளையல் சங்கிலி தோடென
முப்பது பவுன்தான் தடுக்கிறது!
பெண்ணைச் சரக்காய் நினைக்காதே!
பேரம் பேசி மணக்காதே!
கண்ணிய மில்லா வருமா னத்தால்
புண்ணிய மில்லை மறக்காதே!
 

தமிழனின் சரித்திரம்

காயத்ரி பாலாஜி
 
இறைவன் படைப்பினில்....
இவர்கள் ஒரு சரித்திரம்...
பிறக்கும் போதே...இவர்கள்...
இறப்புச் சான்றிதழுடன் பிறக்கிறார்கள்...
இன்றும் அகதிகளாய் தொடரும்...
இவர்கள் வாழ்க்கை....

இங்கே இவர்கள் அண்ணாந்து வானம் பார்ப்பது....
பருவ மழைக்காக அல்ல.....
பட்டாளத்தார்கள் போடும் ....
பயங்கர குண்டுகளுக்காக ..
இங்கே பூமியைத் தோண்டினால்...
நீர் ஊற்றெடுப்பதில்லை...
உதிரம் தான் ஊற்றெடுக்கும்...

இதயமில்லாதவர்களால் ...இவர்கள்..
உடலிலும்..உள்ளத்திலும் காயம் பட்டவர்கள்....
இனப் போராளிகளென இகழப்பட்டவர்கள்...
கடைசி தமிழனும் இங்கே...
புதைக்கப்பட்டாலும்....
இவர்கள் சிந்திய உதிரம்...
இன்னும் உங்கள் மண்ணிலே...
ஜீவித்திருக்கும்...!
 

இப்படிக்கு அன்புடன்

ருத்ரா
 
என்ன எழுதுவது
என்று தெரியவில்லை
முதல் கடிதம்
ஆரம்பிக்கும் போது
என் காலடியில்
எண்ணற்ற காகித கசக்கல்கள்.
கடைசிக் கடிதம் இது
இப்போது முடிக்கும்போதும்
காலடியில்
கிடப்பது கசக்கல்கள் தான்.
இவை நம்
இதயங்களின் கசக்கல்கள்.
........
மறந்து விடு..
கீழே
சுக்குநூறாய் கிழிந்து கிடக்கும்
இதயங்கள்
சொல்லவில்லை இதை.
உதட்டுச்சவங்கள்
உதிர்க்கும் வார்த்தைகள் இவை.
.......
மறந்து விடு.
இனி நான் எழுத்துக்கள் இல்லை
வெறும் புள்ளிக‌ள் தான்.
இப்ப‌டிக்கு
அன்புட‌ன்

வரலாறு காற்றில் சேமிக்கப்படுகிறது

வேலணையூர் -தாஸ்
 
இசைப்பொழிவொன்றில் இதயம் கரைகிறது
காற்றின் வழியே காதில் மெல்லிசையாய்
இறங்கும் உன் குரல்
ஏழுஸ்வரங்களின் எத்தகய இணைப்பால் 
இதயத்தை ஒத்தடமிடும் 
இவ் ஓசை பிறக்கிறது.
எண்ணிறந்த ஓசை விரியும் பிரபஞ்சத்தில்
உன் குரலை மட்டும் காற்று எப்படி பிரிக்கிறது
காற்றில் கலந்த அந்த ஒலித்துகளில்
எம் மரபணுவின் கூறுகள் இருக்குமோ
தந்தையிடம் நாம் பெற்ற சுருதியின் 
சிறு சாகித்யம் இதில் இருப்பது சாத்தியமோ
மனமெங்கும் பரவுகிறது மகிழ்ச்சி
சிகப்பணுக்களில் ஈமோகுளோபின் அதிகரிக்கிறது
வானலையில் உன் குரல் கலந்து கொண்டிருக்கிறது
எம் வரலாறு காற்றில் சேமிக்கப்படுகிறது
வளரும் விஞ்ஞானம் 
ஒலித்துகளை பிரித்து வேறாக்கும் போது
ஓர் இசைப்பதிவு எமக்குரியதாக சொல்லப்படும்.
 

வாராமைக்கு அழிதல்

கி.கண்ணன்
மானசிகனே
எங்கு போனாய்!

உடம்பிலிருக்கும்
உயி​ர் காணோம்

இமை சேர்க்கும்
துயில் காணோம்

மூவேளை பசிக்குமேயந்த
குடல் காணோம்

நீதந்த நாணம்
முகத்தில் காணோம்

பருக்கள் இரண்டில்
இருக்க காணோம்

நெய்யற்ற விளக்கு
ஒளியிடுவதில்லை

பெண்ணரசி மேனியில்
சுயநினைவில்லை

சுயம் புடைபெயர்ந்து
மாயமாய் போனது

போனதால்…

பொன்னிறம் பசலை
உடுத்திக் கொண்டது

வந்தால்…

ஓர்கட்டை ஆவேன்
வரமாட்டானாயின்-
உடன்கட்டை ஏறுவேன்

அவர்-
கைபடா பூச்சர​ம்

மண் தின்னட்டும்
தீ தின்னட்டும்

வலக்கண் துடிக்கிறது
வருவானா?

இடக்கண் வழியே
வெளியேறி போவானா?

எங்கு போனாய்…

“திரும்புவேன் என்றீர்

ஆண்கள் சொன்னால்

அதற்கு-
வாராது போவேனென்று
பொருளா”?

நம்ப வைத்தீர்

கன்னி விழியிற்
அம்பு வைத்தீர்

தீ சாட்சியோடு
அம்மி மிதித்து
திருமணம் முடிப்பாய்
என்றிருந்தேன்
உன்மனமே-
அம்மியாய் இருப்பதை
இக்கணம் கண்டுணர்ந்தேன்.

ஆடவன் காதல்
உடலோடென்பது மெய்தான்

உடலே மெழுகாய்
உச்சியே திரியாய்

காதல் தீயினில்
கடைசிவரை-
உருவழிப்பது பெண்தானே

சிட்டுக் குருவி

டி.வி. சுவாமிநாதன்
கூர்க்காக் காவல் காரனைப்போல்
கூட்டுக்கு வெளியே ஒரு குருவி
பார்த்துக் கொண்டே இருக்கிறது
பகைவர் வந்தால் அறிவிக்க

வேலைகள் தீர்ந்து முற்றத்தில்
வெற்றிலை போடும் தலைவியர் போல்
நீல மணிக்கண் சிறுகுருவி
நிற்கிறதோ? இது கற்பனையோ!

தனிமையில் அஞ்சிய குஞ்சுகள் தம்
தாயை வேண்டி அழைக்கின்ற
இனிய கீச்சுக் கீச்சுகள் தாம்
எத்தனை அமுத சங்கீதம்!

அட்சதை பொறுக்கி வைத்திருந்தேன்
அர்ச்சனை செய்ய; குருக்களுக்கு
தட்சணைச் செலவு இல்லாமல்
தானே பூசனைஏற்றதுபோல்
கொத்திச் சென்று தாய்க்குருவி
குஞ்சுகள் சிவந்த அலகுக்குள்
வைத்துணவூட்டிய காட்சியிலே
வையத்தில் இறை வந்துவிட்டான்