தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கழுதை

பாண்டூ
நான்கு வர்ணங்கள்
பிரிக்கப்பட்டு,
கலைத்துப் போடுவதில்
களைகட்டுகிறது ஆட்டம் !

ஒரே வர்ணங்கள்
ஒன்றாய்க்
கூடிக் கொள்ள

வெவ்வேறு வர்ணங்கள்
வெட்டிக்கொள்வதற்கே
களமிறக்கப்படுகிறது

வெட்டுவதும் வெட்டப்படுவதுமாய்த்
தொடருகிறது ஆட்டம்
இன்றுவரை.

எல்லா வர்ணங்களையும்
ஒன்றாய்க் கூட்டிப்
பிடிக்கத் துடிப்பவருக்கு
எப்போதும் கிடைக்கிறது
கழுதைப் பட்டம்

உன்னிடம் வாழ்கிறேன்

இதயவன்
நீ இமைக்கும் போது
உன்னிடம் கண்ணாய்
வாழ்கிறேன்.
எனக்கேன் இந்த கண்கள்?

நீ சுவாசிக்கும் போது
உன்னிடம் காற்றாய்
வாழ்கிறேன்.
எனக்கேன் இந்த சுவாசம்?

நீ பேசும் போது
உன்னிடம் வார்த்தையாய்
வாழ்கிறேன்.
எனக்கேன் இந்த வார்த்தை?

நீ ஊறங்கும் போது
உன்னிடம் கனவாய்
வாழ்கிறேன்.
எனக்கேன் இந்த கனவு?

நீ போகும் போது
உன்னிடம் நிழலாய்
வாழ்கிறேன்.
எனக்கேன் இந்த நிழல்?

நீ வாழும் போது
உன்னிடம் வாழ்க்கையாய்
வாழ்கிறேன்.
எனக்கேன் இந்த வாழ்க்கை?

அண்ணா நூற்றாண்டு நூலகம்

மு.வெங்கடேசன்
இது  கோட்டூர்புரத்தின்
நுழைவாயில் மட்டுமல்ல
கோடிக்கணக்கானோர்  
நுழைந்த கோவிலும் கூட

நூலகத்தின் முன்னே
அறிஞர்  அண்ணாவின்
உருவக் காட்சி
நுழைந்த பின்னே
பல அண்ணாக்கள்
உருவாகும்  காட்சி

நூலகத்தை சுற்றி
ஜாதி பூக்கள்
பூத்திருந்தாலும் இங்கு
சாதி பூக்கள்
பூக்க   இயலாது .

இங்கு
நாளன ஏடுகளும்  உண்டு
நாளேகளும் உண்டு

இங்கு தான்
தமிழ் நூல்கள்
தன்மானத்துடன்  இருக்கின்றன
ஏனெனில் இங்குதான்
ஆங்கிலம்  அல்லாத
தமிழ்நூல் பிரிவு

இது
கன்னிமார  நூலகத்தையும்
கவர்ந்து இழுக்கும்
ஏனெனில் இங்குதான்
வயதுக்கு வந்த
வரலாறு  நூல்கள் அதிகம்

சூரிய குடும்பத்தை காண
சுற்றி  சுற்றி பார்க்க
வேண்டாம்.
இதோ
ஒன்பது கோளும்
ஒரே புத்தகத்தில்

அதுமட்டும்மல்ல
பத்தாவது புத்தகத்தை
பற்றிய பக்கம்
பக்கமான புத்தகங்கள் .

இந்த நூலகத்தில்தான்
வினை கூறும்
வேதியல் நூல்கள்
வினைபடாமல் இருக்கும்

இந்த நூலகத்தில்தான்
இசை அறிவியல் கூறும்
இயற்பியல் நூல்கள்
இதய துடிப்புடன் இயங்கும்

இந்த நூலகத்தில்தான்
உயரியல் நூல்கள்
பெயருக்கேற்றார் போல்
உயிருடன் இயங்கும் .

இந்த நூலகத்தில்தான்
சூத்திரம் சொல்லும்
கணித நூல்கள்
ஆத்திரமின்றி அடுக்கி
வைக்கப் பட்டிருக்கும்

இந்த நூலகத்தில்தான்
காலத்திற்கேற்ற
கனினி நூல்கள்
கன்னி நூல்கள்
கவர்ந்து இழுக்கும்

இந்த நூலகமானது
போண்டா  விற்பவனையும்
போட்டி தேர்வு  எழுதவைக்கும்
ஏனெனில் இந்த நூலகம்
போட்டி தேர்வுக்கான
பொக்கிஷம் கிடைக்கும்
பத்மநாத  சுவாமி கோவில்

நூலகத்தை
மாற்ற நினைக்கும்  திறனாளிகள்
இங்கு படிக்க வரும்
மாற்று   திறனாளிகளையும் சற்று
நினைத்து பார்க்க  வேண்டும்

நீங்கள்
குழந்தை நல மருத்துவமனை
கட்டினால்  கூடவே
குழந்தை மனநல  மருத்துவமனையும்
கட்டி விடுங்கள்

ஏனெனில் இந்த
நூலகத்தில்தான்  ஒவ்வொரு
புத்தகமும் ஒரு  மருத்துவர் .

அரசே
மாணவர்களாகிய  நாங்கள்
மதிப்புமிக்க உங்களிடம்
எதிர்பார்ப்பது  இடமாற்றமல்
மனமாற்றமே

சுதந்திரம்

கலைமகன் பைரூஸ்
வானெங்கும்
தலைக்குமேலே
பறந்துதிரியும் பட்சிகளுக்கு
நாலா பக்கமும்
சுதந்திரம் உண்டு!

ஆயினும்
எனது சிரசுக்குமேலே
கூடுகட்டு முட்டையிட
இடம்கொடுக்க முடியாது
அவற்றுக்கு!

தலை
இன்னும்
எனக்குச்சொந்தம்
என்பதால்

வேண்டாமே நம்மில் தீண்டாமை

கிருஷ்ணக்குமார்
மனிதா! வேண்டாமே நம்மில் தீண்டாமை
இனிதானிவ் வாழ்வில் தீண்டாமை வேண்டாமே
மண்ணில் மாந்தருக்கு மனதில் தீண்டாமை
எண்ணிடா திடமான கனிவுளம் வேண்டும்

ஆண்டவனை தரிசிக்க ஜாதிபேசும் மனிதா!
மாண்டவுடன் செல்லுமிடம் யாதென்று தெரியாதா
ஆடி அடங்கும் வாழ்க்கையிலே உனக்கு
ஆறடி நிலமும் இல்லையென்பதே கணக்கு

அனலுலையில் தள்ளிவிட்டு செல்லுகின்ற கும்பல்
புனலலையில் கரைப்பதெல்லாம் பழுப்புநிற சாம்பல்
பார்ப்பனென்றும் பரையெனென்றும் பேதம் உலைக்கில்லை
பார்த்திருந்தும் படித்திருந்தும் உன்னறிவில் ஏறவில்லை

நீதிகொன்று பேதம்செய்து இழந்தது இன்னுயிரே
மீதியுனது வாழ்வையேனும் பயனுறவே கழிக்க
வீதியிலே போராடு தீண்டாமை ஒழிக்க- இல்லேல்
நாதியின்றி கிடப்பாய் நடுவீதியிலே நாளை

பாரதியும் பெரியாரும் பகிர்ந்திட்ட பகுத்தறிவு
யாரெதுதான் சொன்னாலும் ஏற்றிடாதோ உன்னறிவு
ஆண்டவனே நினைத்தாலும் ஒழிந்திடாத ஜாதித்
தீண்டாமை ஒழியும் நீ நினைத்தால் இன்று

நின் நினைவுகளில்

சீமான் கனி
நினைவுகளை  கைபிடித்து
நிலவொளிதனை  நனைத்து
நீண்ட தூரம்  போகிறேன்.
நீயும் வருவாயென - நின்
நினைவுகள் சொல்லிவிட
நீயும் வருவாயா?
நிழல் கூட்டி
நிலாவின் முகம் காட்டி.

நிறுத்தும் இடமெல்லாம்
நினைவோடு இன்புற்று
நீயே இருப்பதுவாய்
நிகழ்வுகள் இனிக்குதடி.

நித்திரை கனவழியில்
நினைவெனும் நீர் அலையில்
நீந்தி நீந்தி நீர்த்துபோய்
நின்னொரு நினைவு கூட
நீங்காது கண்மணியே.

நித்தம் நித்தம் நீ வேண்டும்
நிரம்ப நிரம்ப நினைவு வேண்டும்
நீயாக தரவேண்டாம்  
நினைத்து விடு பொன்மணியே.

நின்று கடுக்கையிலும்
நீள் தூரம் கடக்கையிலும்
நீட்டி நிமிர்ந்து கிடக்கையிலும்
நின் நினைவுகள் நெருடுதடி.

நீ சாலை கடந்து
நில்லாமல்  போனாலும்
நினைவு நின்று
நின் மாயை காட்டுதடி.

நிறுத்தங்களில் நிற்கையில்
நின் வருத்தங்கள் என்னவோ?
நீல விழி நின்று - என்மேல்
நிலைகொள்ள மறுக்குதடி.
நீண்ட - நின்
நிழல் கூட நெருங்கிவிட பார்க்குதடி
நீ மட்டும் தீ கொண்டு தீண்டுவது ஏனடி?

நிலவை நீ என்றேன்
நீலம் உன் விழி என்றேன்
நின் நிழல் நானென்றேன்
நிறமெல்லாம் உன் நிறமேன்றேன்
நீரை உன் மனமேன்றேன்
நின் குறையெல்லாம் நிறைஎன்றேன்.
நிதர்சனம் காட்டினாலும்-நின்
நிகர் நிற்க யாரென்றேன்.

நிழலாய் நீ வேண்டும்
நிகழாத வரம் வேண்டும்.
நீ மட்டும் உடன் வேண்டும்
நினைவுகள் கொஞ்சம் கடன் வேண்டும்.
நீதி கிடைக்க வேண்டும்.
நின் நினைவுக்குள் கிடக்க வேண்டும்.
நிஜமாய் நிச்சயமாய்
நினைவில் என்றும்
நீமட்டும் நெருக்கமாய் வேண்டும்

சின்னச் சின்னப் புத்தகம்

வாணிதாசன்
சின்னச் சின்னப் புத்தகம்
சிறுவர் படிக்கும் புத்தகம்
அன்னை போல எந்த நாளும்
அறிவை ஊட்டும் புத்தகம்!

படங்கள் நிறைந்த புத்தகம்
பாடல் நிறைந்த புத்தகம்
கடலைப் போல என்றும் வற்றாக்
கருத்தை ஊட்டும் புத்தகம்!

கதைகள் சொல்லும் புத்தகம்
கண்ணைத் திறக்கும் புத்தகம்
மண்ணை விண்ணை விளங்கி நல்ல
வாழ்வளிக்கும் புத்தகம்!

பாட்டி போலப் புத்தகம்,
பச்சைச் சிரிப்பைக் காட்டியே
ஏட்டு வாயால் நித்தம் நித்தம்
இனிக்க இனிக்கச் சொல்லுமே

கொடுக்கிறேன்

கவிக்கோ அப்துல் ரஹ்மான்
 

 
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும்
- கவிக்கோ அப்துல் ரஹ்மான்
 
 
 
 

கூடம் குளம்

மு.வெங்கடேசன்
கூடம் குளம்
பள்ளியில்
அனு(ணு)ஷ நட்சத்திரத்தில்
பிறந்த குழந்தைகளுக்கு
அட்மிஷன் கிடையாதாம்.

கூடங்குளத்தில்
கொண்டாட
கூடாத விழா
அனு(ணு)மன் ஜெயந்தியாம்

கூடங்குளத்தில்
பிறக்கும் குழந்தைகளுக்கு
அனு(ணு) என்ற
பெயர்சூட்ட தடையாம் .

கூடம் குளத்தில்
அனு(ணு)பவம்  
இல்லாதவர்களுக்கே
இனி வேலையாம்.

கூடம் குளத்தில்
வெளியூர் காரர்கள்
உள்ளே நுழைய
அனு(ணு)மதி இல்லையாம்

கூடம் குளத்தில்
அரிசி "உலை"
கொதித்தால் இனி
அபராதம்
விதிக்கப்படுமாம்

அவர்கள்

ப.மதியழகன்
அவர்கள் உங்களை
மிரட்டலாம்
ஏமாளிகள் எப்போதும்
எதிர்த்துப் பேச மாட்டார்கள்
அவர்கள் உங்களைத்
திட்டலாம்
திரும்பத் திட்டுவதற்கு
வார்த்தைகளின்றி தவிப்பீர்கள்
அவர்கள் நிரூபிக்க
முயலலாம்
உங்கள் தரப்பின் மீது
உங்களுக்கே சந்தேகம் தோன்றலாம்
அவர்கள் உங்கள் குடும்பத்தை
ஏசலாம்
முள்கிரீடம் தரித்த ஏசுவைப் போல்
தனக்குள்ளேயே முணுமுணுத்துக்
கொள்வீர்கள்
அவர்கள் மேற்கோள் காட்டலாம்
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை
நீங்கள் அறிய மாட்டீர்கள்
அவர்களுக்கு செல்வாக்கு
இருக்கலாம்
இழந்ததைவிடவும் பத்திரமாக இருப்பதே
மேல் என்று நினைப்பீர்கள்
அவர்கள் பிளாக்மெயில்
செய்யலாம்
இதற்கு மேலும் மோதுவதற்கு
அச்சப்பட்டு வீடு வந்து
சேர்வீர்கள்