தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

போய் வா

ரமேஷ் சிவஞானம்
சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்

உன்னுடன்
போன் பண்ணி
கதைக்கும் போது
உள்ளத்தின்
கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன்

உன்னைப் பிரியப்போகிறேன்
என்ற எண்ணத்தைக்கண்டு
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது

கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்லை
ஆறுதல் சொல்ல எனக்கு

எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை
சேர்த்துக்கொண்டு

சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே
புன்னகைத்துக்கொள்
சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம்
என்னிடம் இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்

உன் திருமுகம்
என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை
என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்

மனனம்

சு.மு.அகமது
 
எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில்
உள்ளுக்குள் கரைகிறது
இனம் புரியாதது
 
சொற்களால் கலையாத கரைகளின் மீதமர்ந்து
வருத்துகிறது நினைவு
 
படாத தழும்புகளில் வலி நிரப்பி
பாடாய் படுகிறது மனது
 
சொல்வதற்கு என்ன இருக்கிறது
கழுவ முடியாத கறைகள் பற்றி
 
எனக்கென்று வாய்கும் அது
நிச்சயமான ஒரு நிகழ்வு தான்
 
கனிந்து கீழ் வீழ்ந்தாலும்
முளைப்பதில்லை மனித விதை
 
அதனால்
திளைத்து மகிழ்வதில்லை
மனனித்த வாழ்க்கை.
 

குழந்தைகள் உலகம்

ப.மதியழகன்
குழந்தைகள் உலகம்
தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து
குதூகலத்துடன் என்னை வரவேற்றது
அங்கே
ஆனந்தமும், ஆச்சர்யங்களும்
ஒவ்வொரு மணற்துகள்களிலும்
பரவிக்கிடந்தன
காற்றலைகளில்
மழலைச் சிரிப்பொலி
தேவகானமாய் தவழ்ந்து
கொண்டிருந்தது
மோட்ச சாம்ராஜ்யம்,
தனக்குத் தேவதைகளாக
குட்டி குட்டி அரும்புகளை
தேர்ந்தெடுத்திருக்கின்றது
அங்கு ஆலயம் காணப்படவில்லை
அன்பு நிறைந்திருக்கின்றது
காலம் கூட கால்பதிக்கவில்லை
அவ்விடத்தில்
சுயம் இழந்து
நானும் ஒரு குழந்தையாகி
மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன்
அந்தக் கணத்தில்
மரக்கிளையொன்று முறிந்து விழுகையில்
அதைக் கொண்டு இன்னொரு
விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது
எங்கு நோக்கினும்
முடமாக்கப்பட்ட பொம்மைகள்
உடைந்த பந்துகள்
கிழிந்த காகிதக் குப்பைகள்
சேற்றுக் கறை படிந்த சுவர்கள்
களங்கமில்லா அரும்புகள் எனக்கு
கற்றுத் தந்தது இவைகள்
வீட்டிற்குத் திரும்பியதும்
ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த
அலமாரி பொருட்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன்,
தரையில் விசிறி எறிந்தேன்
ஏக்கத்தோடு
ஊஞசலின் மீது அமர்ந்தேன்
எனது வீட்டை அங்கீகரிக்குமா
குழந்தைகள் உலகம் - என்று
யோசனை செய்தபடி...
 

போராடு

தமிழ் தாசன்
 
நான் உயிரோடு இருக்கிறேன்..
உலகம் அழிந்தால்
எனகென்ன வந்தது..
இது சோம்பேறி சொன்னது..

உரசாதவரை நான் ஊமை
உரசிவிட்டால் நான் நெருப்பு
இது
சின்ன தீக்குச்சி
சொன்னது...

முன்னே நாம் எட்டுவைத்தால்
பின்வாங்கும்
யானை படையும்.

அட நண்பா! 
முள் கீறியா - நம்
முதுகெலும்பு உடையும்.

குனிந்தவனுக்கு மூட்டை சுமப்பதுக்கூட  
குறுக்கு வலி..
துணிந்தவனுக்கு சீன பெருஞ்சுவர் கூட
குறுக்கு வழி.

கதவுகள் திறக்கும் வரை தட்டு..
கை இல்லாதவனா.. தலையால் முட்டு...

வேர்க்க வேர்க்க உழைத்து வா..
தோற்க்க தோற்க்க எழுந்து வா..

நீ கும்பிடுவதால்தான்
சாமி பொழச்சிருக்கு.. 
உன்  காலுக்கு கீழதான்
பூமி மொளச்சிருக்கு...

மனிதன் என்ற பேரொடு  
மரணம் வரை போராடு...
 

கூடை

பட்டுக்கோட்டை தமிழ்மதி
ஏழெட்டு கூடைகளோடு
என் மகன் .

மண்ணள்ளி விளையாட
ஒன்று தம்பிக்கென்றான்.

அப்பாவிடம் ஒன்றை கொடுத்து
கவிதை எழுதும்  காகிதத்திற் கென்றான்.

இது பிளாஸ்டிக்பைக்கு பதில்
கடையில் பொருள் வாங்க வென்றான்

ஆத்தா வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள
ஒன்றை ஊருக்கு அனுப்பச் சொன்னான்

குடத்தடி கொடிமல்லி பூப்பறிக்க
இது அக்காவுக் கென்றான்

கூடைகளுக்கெல்லாம் கொண்டாட்டம்
குதித்து குதித்து குப்புற விழுந்து சிரித்தன.

ஊரில் பார்த்த ஓலை குட்டான்
கடவாய் பொட்டி

சாணி அள்ளும் தட்டுக்கூடை

ஈச்சமிளாறில் செய்த
நெல் தூற்றும் கூடை

அவித்த நெல்லை அள்ளும் கூடை

நெல்லரைக்க போய்
தவிடள்ளும் கூடை

பனையோலை கிழித்து
மூங்கில் சீவி
முடைந்த கூடை

ஞாபகம்.

அழகு கூடையொன்றில்
அள்ளி கொடுத்தான்
அம்மாவுக்கு தன்
முத்தங்களை.

வரைய சொன்ன ஆசிரியையிடம்
கூடை ஒன்றை கொடுத்து
அதில்
நட்சத்திரங்களை போட சொல்லி
நின்றான்


வெறுங் கூடை
நிறைய நிறைய
கனவுகள்.

- பட்டுக்கோட்டை தமிழ்மதி

 

மனம் இல்லாமல்

உமா
உன்னை விட்டு கொடுக்க
மனம் இல்லாமல்
விட்டு கொடுக்கிறேன்
என் மன விருப்பங்களை

அந்நியர்கள் உள்ளே வரலாம்

யுகபாரதி
என்னென்ன பேசுவதென்று
இருவருமே ஒத்திகை
நடத்திக் கொண்டே
என் வீட்டுக்குப் போகிறோம்...

அதிர்ச்சி தொனிக்காத
முகத்தோடு கதவு திறக்கிறாள்
அம்மா...

வார்த்தையைத் தொலைத்த
வைராக்கியத்தில்
அதிர்ந்து பேசும் அப்பாவோடு
அத்தனை கண்களும்
மௌனங்களால்பேசிக் கொண்டன.

ஒரு மிகப் பெரிய
புயலுக்கு பின்னான
அமைதியோடு
நீ பேசத் தொடங்குகிறாய்...

ஒவ்வொரு சொற்களிலும்
உன்னை நிரூபிக்க
நீ படும் பாட்டை
லேசான கர்வத்துடன்
ரசிக்கிறேன்.

சட்டென்று விடை பெறும்
தருணத்தில்
"வழி அனுப்பி விட்டு வா" என்ற
அம்மாவின் நாகரீகமும்

யாருக்கும் தெரியாமல்
"அண்ணி" என்றழைக்க
மறக்காத தம்பியின் சமயோசிதமும்
அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

நீ கொடுத்து வைத்தவள் தான்
என்னிடம் மட்டுமல்ல
எல்லோரிடமும்தான்

நான் = நீ

மீனாள்செல்வன்
என்னுளம் கேள்
உன்னுளம் தா
மாலைகள் மாற்று
மகுடமும்  மாற்று
தோளோடு நில்
தோளோடும் கொள்
இமைகளாய் இரு
என் பார்வையை மதி
உனக்குள்ளும் கொள்
ஒதுங்கியும் நில்
புதிதான சுகங்கள்
புரிந்திட விரும்பு
புதிதான வலிகள்
புரியவும் பழகு
சுமையொன்று கொடுத்தால்
சுமையொன்று இறக்கு
பாதைகள் ஒன்றே
பயணமும் ஒன்றே
சரிநிகர் செய்தால்
சாதனை நமதே

ஆட்டுக்குட்டிகளின் தேவதை

எம்.ரிஷான் ஷெரீப்
 
ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது

பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
தண்ணீர் தேடிச் சென்றவேளை
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
களைத்துப் போய் பெருவலி தந்த
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி

வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன
விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்
வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன
புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்
மந்தைகளின் தேவதை
முடங்கிப் போயிருக்கிறாள்
உஷ்ணப் பிரம்பினைக் காட்டி
அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்
கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை

பயணப் பாதைகளிலெல்லாம்
ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்
இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்
பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்
மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்
புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்
அவளுக்கு எப்போதும்
ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்

வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு
தொலைவில் அவள் கண்டாள்
யானையாய்க் கறுத்த மேகங்கள்
வானெங்கும் நகர்வதை

இனி அவள் எழுவாள்
எல்லா இடர்களைத் தாண்டியும்
துயருற்ற அவளது பாடலோடு
விழித்திருக்கும் இசை
ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்
ஆக்ரோஷமாக... ஆரவாரமாக...
ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி...
 

காலை

பாவேந்தர் பாரதிதாசன்
 
ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நெளியக் கண்டேன் பொன்னின் - கதிர்
நிறையக் கண்டேன் உவகை!

துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தெளியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே!