போ 2009 வா 2010
போ 2009 ஏ!
போர் முடிந்த பூமியானாய்
நன்றி
அங்கு உலை வைக்கப்பட்டது
உயிர்கள்
இந்த மயான பூமியில்
இனி யார் அங்கு
மனிதப்பயிர்கள் வளர்ப்பது?
ஆராய்ச்சியாளர்களே!
உயிர்ச்சுவடுகள் ஏதும்
அகப்படுகிறதா?
அழுகுரல்கள் ஏதும்
கேட்கிறதா?
ஊன் வடிந்து
உயிராவது ஒழுகுகிறதா?
பாருங்கள்
எங்காவது மானுடம்
தெரிகிறதா என்று?
தமிழ் கொன்ற
2009 போகட்டும்
தமிழ் கொண்டு
2010 ஆளட்டும்
வாருங்கள் இனி
ஊர் கூடித் தமிழ்
தேர் இழுப்போம்
2010 இல்
இனியாவது
மூன்றெழுத்துக்களைக்
காப்பாற்றுவோம்
உயிர்,
தமிழ்.
வா 2010 தே
வரும் வருடம்
நலம் தரும்
வருடமாகட்டும்
வாசிக்கப்படாமல் போன
பலபக்கங்கள் கொண்டு
வாழ்கைப் புத்தகம்
எழுதுவோம்
புது வருடத்தில்
வாருங்கள் தோழர்களே
மனசு
புதைந்த நாட்களை
மறப்போம்
அங்கு
அனுபவக்காற்றைச்
சுவைத்து
வாழ்க்கை வரம்புகளில்
வழுக்காமல்
நடப்போம்
வா
புதுவருடமே...
சுவாசிக்க
நல்ல காற்று தா
கடலோரம் காதல்
கவிதை வாங்க
தமிழலை கொண்டுவா
கிராமங்கள் தோறும்
மழலைகள்
மடியினில்
மடிக்கணணிகள்
கொண்டுவா..
இணையத்தில் கிராமத்து
தமிழ்ப்பூக்கள்
நிதம்பூக்க வேண்டுமல்லவா
நிஜங்களைக் காணும்
கனவுகள் கொண்டுவா
நிம்மதியாய்
உறக்கம் கொள்ள
கவலைகள் மறந்த
நிலவு கொண்டுவா
கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல
வா
புது வருடமே
உன்னை விட
எனக்குத் தெம்பு
இருக்கிறது
இருந்தாலும்
உன் வரவு நல்வரவாகட்டும்
மனதுக்கு வெள்ளையடித்து
உன்னை வரவேற்போம்
கண்களில் விளக்கேற்றி
உன்னை
வெளிச்சப்படுத்துவோம்

ரமேஷ் சிவஞானம்