என் வீடு அந்த கடைசியில்
என்றால்
உன் வீடு இந்த கடைசியில்
என் வீட்டருகில் குளமும்
குளம் சுற்றி பூக்களும்
உன் வீட்டில் "கும்" என்று நீயும்
உன் கூந்தல் நிறைய பூக்களும்
தண்ணீர் எடுக்க என் வீடு கடப்பாய்
அதை நான்
நீ வரும் பொழுது
தீபாவளியாய்
போகும் பொழுது
பொங்கலாய்
நினைப்பேன்.
உன் நிறை குடம் தழும்பி உன்னை
அனைக்க தாவுவது தெரியாது உனக்கு
ஆனால் நான் ஓரக்கண்ணால் பார்ப்பதை மட்டும்
"பரதேசி" 'பார்க்குது பார் ' என்பாய்
நீ பொய் சொல்ல மாட்டாய்
நான் பரதேசி தான்
உன் தேவதை உலகத்தில் மறதியாய்
பிறந்ததற்கு மன்னித்து விடு!
வழியில் தோழி வந்தால்
குடத்தில் நீர் எடுத்து
முகத்தில் தெளிப்பாயே
அதில் பன்னீர் எல்லாம்
பரதேசம் போய் விடும் போ!
ஒரு நாள் நீ தெளித்த நீர் உன் தோழி மீது படாமல்
என்மீது பட்டதும் உன் பற்கள் உதடு கடித்ததே
அன்று தண்டனையை தப்பாய் கொடுத்து
தப்பித்துவிட்டாய் என நினைத்தேன்
நீயும் நானும் காதலித்த பிறகு
என் கை ஓர் நாள் உன்னை கட்டி அணைத்தது
நீ ஒரு நிமிடம் மௌனமாகி பின்பு என் உதட்டில்
உன் உதடு பதித்தாய்
அன்று தான் புரிந்தேன்
ஒரு சில தவறுகளுக்கு ஒருசில
தவறான தண்டனைகள் தான்
சரியாக பொருந்தும் என்று
முகவை சகா