மலர்கள் மலர்வதும்,
மணம் பரப்புவதும்
பலனை எதிர்ப்பார்த்தா?
சேவல் கூவுவதும்,
மயில் ஆடுவதும்
மதுவின் கிறக்கத்தினாலா?
தென்றல் வீசுவதும்,
மழை பொழிவதும்
அரச கட்டளைக்கு அடிபணிந்தா?
குழந்தை அழுவதும்,
பாவ மன்னிப்புக் கோருவதும்
கடவுளுக்கு பயந்தா?
இரவும், பகலும்
ஒன்று சேராமல் இருப்பது
இயற்கையின் விதியா?
பகலில் நிலவும், விண்மீனும்
மறைந்து போவது
சூரியனின் சூழ்ச்சியா?
பிறப்பும், இறப்பும்
நித்தமும் நிகழ்வது
சூன்யத் தத்துவமா?
மாயை
கன்னி அவள் காத்திருக்க
கண்ணன் அவன் தோள்கொடுக்க
அன்பு நெஞ்சம் கலந்திருக்க
ஆசை உள்ளம் சமயம் பார்த்திருக்க
கனவு உலகம் கவர்ந்திழுக்க
இளமைக் கடல் ஆர்ப்பரிக்க
நாணத்திரை அகன்றிருக்க
ஆனந்த வேட்கையில் ஜீவன் மூழ்கியிருக்க
உலகமும், உயிர்களும் சற்றே மறைந்திருக்க
பக்தியும், பயமும் சிந்தையிலிருந்து நீங்கியிருக்க
மிருகம் மட்டும் எஞ்சி நிற்க
மீண்டும் மண்ணில் பிறவியெடுக்க
மோகத்தீயில் முக்குளிக்க
வாலிபத்தை வரமாய் கேட்க
தேவதையை தனது இளமைக்கு
துணையாய் கொடுக்க
மண்டியிட்டு மருகுகிறது
மானிடனின் நெஞ்சம்
மாயையின் வலையில் வசமாகச்
சிக்கிச் சுழன்றபடியே...
- ப.மதியழகன்

ப மதியழகன்