தாலாட்டின் இசைச்சிற்பி என்தாய் - ரமேஷ் சிவஞானம்

Photo by Jr Korpa on Unsplash

அன்பின் அட்சயம் நீ
பாசத்தின் சிகரமும் நீதான்.

அன்புத்தொட்டில் முதல்
உடல்,உறவு, உலகம்,உணர்வுகளை
அறிமுகப்படுத்திய
முதல்
ஆசிரியை நீதானே!

உதிரத்தை பாலாக்கிய
முதல் விஞ்ஞானியும் நீதான் !

உதிரத்தின் வழியே
நான் சுவாசிக்க “ஒட்சிசன்”
வாழ்ந்துகொள்ள “உணவு”
அன்பு உணர்வு
அனுப்பியவள் நீதானே !

உன் பத்துமாத பரிசோதனையின் பின்
வெளியேறிய
“அக்கினிக்குஞ்சு” நான்.
கவலைப்படாதே….
அழிக்கப்பிறந்தவனல்ல நான்
உலகம் வாழப்பிறந்தவன்.

உன் கோபுர கர்ப்பகிரகத்தில்
சிம்மாசனம் இல்லையேல்
இந்தப் பூமியில்
எனக்கேது அரியாசனம்

என் தந்தை கீறிய
பேனாக்களின் காயங்களால்
எழுதி,
இருத்தி,
வளர்த்து ஆளாக்கிய
இந்தப் “பிள்ளைக் கவிதை”
அதன் சுவடுகளை மறக்காமல்
பற்றிக்கொண்டிருப்பது
உன்
“தொப்பூழ்கொடியை”

நீ கொடுத்த வீரப்பாலால்தான்
இப்போதும்
புயலை எதிர்க்கும் சக்தி
எனக்குள்.

இந்தப் “பிள்ளைக் கவிதை”யின்
கவிதாயினி நீ…
ஓ…
தாலாட்டு இசையமைத்த
முதல் “இசைச்சிற்பி”
நீயல்லவா….
அதுதான்
அப்போதும் இப்போதும்
ஏன் எப்போதும்
உன் தாலாட்டின்
ரசிகன் நான்…

இந்த பூமியில்
உயிர் நட்சத்திரங்களை பயிரிடும்
“விவசாயி” நீதான்
உன் உதிரத் தண்ணீரினால்
இந்த பூமி வயல்களில்
மனிதப் பயிர்கள்
எழுந்து நிற்கின்றன.

உலக உருண்டையை
உருவாக்கும்
உன் கருணையின் கைகள்
உன்னதமானது
ஆதாலால்
இன்னமும் இந்த உலகம் உய்ய
உன் மூச்சு வேண்டும்
உன் இடுப்பு வலிக்கவேண்டும்
ரமேஷ் சிவஞானம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.