தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

முதிர் ஆண்

ஆனந்த்
வயதாகியும் வாலிபத்தை விடாமல்
துரத்தும்,
ஆண் பிரும்மாச்சாரி
நான் (மட்டுந்தானா)

வீணாய் போன வாலிபம்,
விட்டு வைக்காத சகவாசங்கள்
தொலைத்த மதிப்பெண்கள்
வேலையில்லாத படிப்பு
வீட்டு சுமைகள்
வட்டி கடன்
வில்லங்கங்கள்.

மனம் தேடும் துணையை,
தேட வேண்டி
முதியோர் இல்லத்திற்கா?

அன்பும் காதலும்

காயத்ரி பாலாஜி
 
உயிர் ஜனிக்கையிலே..
அன்பும் ஜனிக்கிறது...
உயிரின் முதல் அன்பு...
அன்னையிடம்!

அன்பு..
ஆழ்மனதின் அணையா விளக்கு...
அன்னை, தந்தை, அக்கம் பக்கத்தார் என..
அனைவர்க்கும் பொதுவான ஓர் உணர்வு...

இனங்கள் மாறுகின்ற தருணம்...
இனம் புரியா ஓர் உணர்வு...
காதல்!
இது விழிகள் வீசுகின்ற வலை...
வீரரையும் வீழ்த்திடும் கலை...
விளையும் பயிர்களுக்கு...
விளங்கா புதிர்!

காதல் மரிப்பதுண்டு...
காதலை உயிர்ப்பித்திருக்க..
காதலர்கள் மரிக்கிறார்கள்...
ஆனால் ...
அன்பு மரிப்பதில்லை...
அன்புக்காய் யாரும் மரிப்பதில்லை....

ஆம்..
அன்பும் காதலும் வேறுதான்...
காதல் கண்களில் மட்டுமே நிறைந்திருக்கும்...
அன்பு இதயத்தில் என்றும் உயிர்த்திருக்கும்!
 

என் பெயர்

இனியா
சற்றும் அடங்காத
சாலை அது - என்
இருப்பு அங்கே
யாரையும் கலைக்காமல்,
தினமும் வரும் வழக்கமாய்
நடைபாதையில் நான்,
நினைவுகள் மட்டும்
எங்கோ தூரமாய்...
அங்கே ரசித்தவை
பழங்கதைகள் ஆகின
என் கண்கள் அலைபயும்
பழைய முகங்கள் தேடி
அன்று நாம் நின்ற இடத்தில்
இன்று நான் மட்டும் தனிமையில்...

நீ என்னோடு இருந்த போதும்
நானாக மட்டுமே நான் இருந்தேன்,
தனியே என்னை விலக்கிய போதும்
துளி மாற்றம் இல்லை என்னுள்.
இருந்தும் பிறரிடம் சிறு மாற்றம்...
நாமாய் இருக்கையில் 'மணி' என்றவர்
இன்று எனை அழைக்கும் பெயர் 'தெருநாய்'

எழில்மிகு அமெரிக்கா

அரிமா இளங்கண்ணன்
காடுமரம் செடிகொடிகள் நிறைந்திருக்கும்
கண்கவரும் மலர்க்கூட்டம் சிரிப்புதிர்க்கும்
ஓடுகின்ற 'மிசிசிப்பி' ஆற்று நீரும்
உடன் துணையாய் 'மிசெளாரியதும் வளம்கொடுக்கும்
நாடியதிண் மீன்பிடிக்கச் செல்லு வோர்கள்
நல்லபலன் கிடைத்ததெனக் களித்தி ருப்பர்
ஆடுகின்ற சிறுவரெல்லாம் மாலைப் போதில்
அமெரிக்கக் களங்களிலே மகிழ்ந்தி ருப்பர்!

காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும்
கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொ டுக்கும்
மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே
மனங்கவரக் கதிரவனும் உறங்கப் போவான்
சாலையிலே செல்வோர்கள் சட்ட திட்டம்
சரியாக மதித்திடுவர் ஊர்தி யோட்டி
வேலையிலே குறியாக இருப்பார் வேண்டா
விபத்துகளை முறையாகத் தவிர்த்துச் செல்வார்!

வரிசையிலே நிற்கின்ற பாங்கே எங்கும்
வல்லரசு நாட்டினிலோர் நற்ப ழக்கம்
புரியாத மொழி நாட்டார் எதிர் வந்தாலும்
புன்னகைத்துக் கையசைக்கும் நட்புத் தோற்றம்
சரியான விலைகொடுத்து வாங்கும் பண்டம்
சரியில்லை யெனில்பணத்தை வாங்கும் வாய்ப்பு
பெரியளவுக் குப்பையையும் உடன் பொறுக்கிப்
போட்டிடுதல் தொட்டியிலே தூய்மை வேண்டி!

வானுயர்ந்த கட்டடங்கள் சுதந்தி ரத்தீ
வலமேந்தி நிற்குமெழில் அன்னை வெள்ளம்
கானகத்து 'நயாகரா'வாம் நீரின் வீழ்ச்சி
கப்பலின்மேல் வானூர்தி பறக்கும் வேகம்
ஏனென்று கேட்பதற்கோர் ஆளே இன்றி
இளசுகளின் நடையுடைகள் கும் மாளங்கள்
மானினமும் வாத்துகளும் அணில்மு யல்கள்
மட்டில்லா ஏரிகள்முன் போடும் ஆட்டம்!

படிப்பதிலே பெருவிருப்புக் கொண்ட மக்கள்
படிப்பகங்கள் வசதிமிகப் பெரிய தாகும்
துடிப்புடனே விளையாட்டுப் போட்டி எல்லாம்
துணிந்தேகும் இளை ஞர்க்கும் இசையில் ஆர்வம்
நடித்துவரும் திரைப்படங்கள் உலகை வெல்லும்
நாகரிகம் பல நாட்டார் கலப்பில் மின்னும்
அடிப்படையில் நாம்கற்க வேண்டும் பாடம்
அமெரிக்க நாட்டினிலே பலவாய் உண்டு

தொடுவானம்

சித்ரா
ரோட்டோர பிளாட்பாரத்தில்
ஒரு தொழுநோயாளனும்
ஒரு தொழுநோயாளியும்

அவர்களைத் தாண்டி
கால்கள் போகிற போது
கைகளை நீட்டி
பிச்சை கேட்கிற நேரம் தவிர
சுவாரஸ்யமான
சம்பாஷனை ஒயாமல்...

பிச்சை விழும் காசில் போட்டியில்லை – எனில்
தம்பதியனரோ?
ஓப்பந்தமின்றி சேர்ந்து உள்ளனரோ?
நோய் சந்தித்த பின்பா?
முன்பா ?

பின் எனில்
உன்னிடமிருந்து தொற்றியதென்ற
குற்றபதிவு கண்களிலில்லை
முன்பே எனில்
ஒருவருக்கொருவர் ஆறுதலோ ?

ஆறுதலோ ஆர்வமோ
அகநானூறு படலங்களை தீர்மானிப்பது
புற நானூறாயிரம் நியாயங்கள்
இந்நியாயங்களின் காவல் அருகிலில்லை
இம்மனிதர்களுக்கும் காவல் அருகிலில்லை

சடசடவென்ற பாதசாரிகளின் நடைகளுக்கிடையில்
சில்லறை சத்தம் மட்டும் அவ்வப்போது
மற்ற சமயங்களில் யாவும்
’தொடர்பு கொள்ளும் நிலையிலில்லை’ – என
சமூகம் பதிவுசெய்த ஒரேகுரல்.

பிளாட்பாரத்தின் விளிம்பு
தொடுவான கோடாய்
வெவ்வேறு உலகத்தை பார்த்தபடி நீளமாய்

அரசுப் பள்ளிக்கூடம்

மணிமேகலை
ஏழை பணக்காரன் என்ற 
பாகுபாடு இல்லை
இங்கே
அனைவரும் ஏழைகளே !





இடைவேளையின் போது
பஜ்ஜி , வடை வாங்கி  வருவோம்

குருவுக்கு தொண்டு 
செய்யும் சிறந்த  சீடர்கள்!


சீருடை
புத்தகத்தில் வேறுபாடு இல்லை
கிழிந்து தான் இருக்கும்




மதிய உணவில் கூட
பேதம்    இல்லை
சத்துணவில்(?!) தான்  கூடுவோம்




இந்தி, ஆங்கிலம்
என பிற மொழிகளை
கற்காத பச்சை தமிழர்கள் நாங்கள்!
அட... சொல்லிக் கொடுக்க 
ஆள் இல்லீங்க!




காலம் காலமாய்
எங்கள் இனம் மட்டுமே ஆதிக்கம்
செலுத்துகிறது  இங்கே...
அரசுப் பள்ளிக்கூடம்

காவல்

தாயுமானவன் மதிக்குமார்
விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு
விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள்.
சதுர அடி விற்பனையில்
சமாதியான விளைநிலங்கள் !
ஆவின்பால் ஆக்கிரமிப்பால்
அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் !
பதப்படுத்திய பாலின் ராசியால்
மறந்துபோன சீம்பால் ருசி !
பாதாளத்தில் பல்லாங்குழி
மாயமான தாயம்
உருக்குலைந்த ஊரணி
கட்டடங்களான கண்மாய்
வாழ்விழந்த வறட்டி
கற்பிழந்த கம்பங்கூழ்
குலைந்த கூட்டாஞ்சோறு
அழகிழந்த அம்மிக்கல்
ஆவியான ஆட்டுக்கல்
கிராமங்களில் தொலைந்த
கிராமியம் !
காணாமல் போன கிராமங்களை
கண்டுபிடிக்க முடியாமல்
கவலையோடு நிற்கின்றன
காவல் தெய்வங்கள்

கனேடியப் பருவமங்கை

பொன்
மார்கழி வெண்பனி சுற்றுப்புறம் சூழ்ந்து நிற்க
வெண்சேலை மங்கையவள் நெடுஞ்சாலை ஓரந்தனில்
பன்சாதிச் சாரதிகள் விழிகளின் பூரிப்பினில்
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

வைகாசி வசந்தத்தின் பூப்பினது அணைப்பினிலே
அம்மங்கை சேலையின் பசும்பச்சை நிறந்தன்னை
நெடுஞ்சாலைச் சாரதிகள் பார்வையினால் ரசித்திடவே
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

கோடையின் கொடையினால் கொண்டையில் பூச்சூடி
அங்கமெல்லாம் மலர்சூடிப் பூரித்து நின்றதனை
நெடுஞ்சாலை இளைஞர்கள் கண்குளிர ரசித்திடவெ
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

ஐப்பசி மாதம்தனில் குளிர்தென்றல் வீசிடவே
பலவர்ணச் சேலைகளை மங்கையவள் மாற்றிவிட
பல்சாதி வழிப்போக்கர் விழிபிதுங்கி வியந்திட
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

இலையுதிர் காலந்தனில் சருகுகள் புடைசூழ
சேலையின்றி நிர்வாணமாய்த் துனிந்தே நின்றுவிட
நெடுஞ்சாலைப் பயணிகள் கவனத்தைக் கவராது
மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள்

- பொன் (நன்றி : திண்ணை)

உலகம் அழியும் நாள்

கா.ந.கல்யாணசுந்தரம்
 

 
டிசம்பர் இருபத்து ஒன்று 2012
உலகம் அழியும் நாள்....
இது மாயன் நாட்காட்டியின் எல்லை!
கடல் கொந்தளித்து சுனாமி வரலாம்...
எரிமலைகள் வெடித்து சிதறலாம்...
வேற்று கிரகங்களில் இருந்து
புதிய விண்வெளிக்கலன்களின் தாக்குதல்
இருக்கலாம்....
சூறாவளிப் புயல்களால் நாடு உருக்குலையலாம்....
சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைந்துபோகலாம்....
கடல்மட்டம் உயர்ந்து நிலங்களை
கபளீகரம் செய்யலாம்....
விண்மீன்களின் பாதைகள் மாறி
கிரகங்களின் மீது மோதி பூமியை தாக்கலாம்....
மொத்தத்தில் கலியுகம் முடியும் நாள்
டிசம்பர் 21 , 2012 ............................................
இப்படியெல்லாம் தகவல்கள்
தொலைக்காட்சிகளிலும்,
மேலைநாட்டு பத்திரிகைகளிலும்
இணையதளத்திலும் செய்திகள்..........
அறிவியல் வல்லுனர்கள்,
வானியல் ஆராய்ச்சியாளர்கள்
ஜோதிடர்கள், பாதிரியார்கள்,  சாதுக்கள்
இப்படியாக பலர்
அமானுஷ்யமாக பட்டும் படாமலும்
ஆமோதித்து பின்பு சாத்தியமில்லை என்றும்
சொல்கின்றனர்..........
இப்படியாக நான் இந்த செய்திகளை உள்வாங்கி,
சிந்தித்து நாற்காலியில் அமர்ந்திருந்தேன் !
என் கவனத்தை திசை திருப்பி
எங்களின் பெயர்த்தி சொன்னாள்.....
" தாத்தா 2012  ஆம் வருஷம்
ஜூன் மாதத்தோடு முடியுதாம்...
ஜூலை முதல் தேதியில் 2013  
ஆரம்பமாகிரதாமே...!
உங்களுக்கு தெரியுமா?
இனிமே ஒரு வருஷம் என்பது
ஆறு மாதங்கள்தான் !
அப்போ நான் நிச்சயமா
நூறு வயசுக்கு மேல் வாழ்வேன்...!"
சிரித்துக்கொண்டே சொன்ன சிறுமியின்
அமானுஷ்ய வார்த்தைகளில் சிக்குண்டு
அந்த மாயன் நாட்காட்டியை
என் நினைவில் இருந்து
கழற்றி எறிந்தேன்!
மானுடம் வெல்லும் என்று எண்ணியவாறே!
 

அரசு பேருந்து

மணிமேகலை
கூட்டத்திலும் உன்னைக் கண்டுபிடிக்கிறேன்
நீ சிறிது தாமதமாக வந்தாலும்
நீ வந்தாயே என்று மகிழ்ச்சிக்
கொப்பளிக்கிறது என்னுள்.

நான் நெருங்கி வருகிறேன்
நீ விலகி ஓடுகிறாய்
எதற்கு இந்த கர்வம்?
நீ சிறிது காயப்பட்டாலும்
அரசு வேலை நிறுத்தம் என
அறிவிப்பதனாலேயோ?