ஏற்கனவே தாமதாகிவிட்டதென்றும்
உடனே புறப்படவேண்டுமென்றும்
கேட்டுக்கொண்டது இளமை
எந்த அதிகாரமும் அதனிடம் இல்லை
மென்மையான குரலில்
ஒரு தாயைப்போல அறிவித்தது
தடுக்கமுடியாத தருணமென்பதால்
ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்
நாள் நேரம் இடம்
எல்லாவற்றையும் பேசிமுடித்தோம்
முழுச் சம்மதத்தோடு
தலையசைத்துச் சிரித்தது இளமை
நாற்பதைக் கடந்து நீளும்
அக்கணத்தில் நின்றபடி
இளமையின் நினைவுகளை
அசைபோடத் தொடங்கியது மனம்
இளமை
மீண்டும் ஏறமுடியாத மலைச்சிகரம்
நீர்மட்டம் குறைந்து வற்றும் ஆறு
அதன் கொத்துகளிலிருந்து
ஒவ்வொரு மலராக உதிர்ந்து விழுகின்றன
வீடெங்கும் நிறைந்திருக்கின்றன
கடந்துபோன இளமையின்
காலடிச் சுவடுகள்
நாவில் விழுந்த தேந்துளியென
ஊறிப் பெருகும் சுவைபோன்றது
மறைந்த இளமையின் கனவு
கரைந்துபோன இளமைதான்
காதலாக கனிந்து நிற்கிறது
இளமையின் மதுவை அருந்தியவையே
இக்கவிதைகள்
இன்றும் பொசுங்கிவிடாமல்
நான் பொத்திப்பொத்திக் காப்பாற்றும் சிறகுகள்
இளமையால் அன்பளிப்பாகத் தரப்பட்டவை
குறித்தநாள் முன்னிரவில்
எங்கள் தோட்டத்தில்
அந்த விருந்தை நிகழ்த்தினோம்
எதிரும்புதிருமாக அமர்ந்து
பழங்கதைகள் ஆயிரம் பேசினோம்
காரணமின்றியே கைகுலுக்கி
கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டோம்
ஒரு மிடறு மதுவை அருந்தியதுமே
ஆனந்தம் தலைக்கேற
இனிய பாடலொன்றைப் பாடியது அது
உற்சாகத்தில் நானும் பாடினேன்
இவ்வளவு காலமும்
சிரிக்கச்சிரிக்க வாழ அனுமதித்த இளமைக்கு
நன்றியைத் தெரிவித்தபடி
போய் வருக என்று
ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன்
இறுதியாக ஆரத்தழுவிய இளமை
என் கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தது
என்னைவிட்டு விலகுவதில்
அதற்கும் துக்கம் அதிகம்
தெருமுனை திரும்பும்வரை
திரும்பத்திரும்பப் பார்த்துச் சென்றது
குழந்தைமை உதிர்ந்ததைப்போல
பால்யம் விலகியதைப்போல
இளமையும் நெகிழ்ந்து உதிர்ந்தது
ஒரு சகஜமான செயலைப்போல
நான் இளமையை இழந்தால் என்ன
எனக்குள் இன்னும் இனிக்கிறது
இளமையின் முத்தம்