தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வசந்தத்தின் பாதை

யுவபாரதி
 வசந்தத்தின் பாதை
சுகமானதில்லை...

சுட்டெரிக்கும் வெயிலும்
பிரிந்து போகும் இலைகளும்
வாழ்வில் சுவைப்பதில்லை...
பின் துளிர்க்கும் துளிர்கள்
எல்லாமும் தரும்...
முதலில் நம்பிக்கை
பின்
பூ-காய்-கனி...
''விதைகளும்''

நதிகளின் சங்கீதம்

சத்யன் சுந்தர்
புல்லாங்குழலின்
துளைவழி பெருகும்
நதியின் பிரவாகத்தில்
மறைகிறது சிந்தை
அழுத்த நெகிழ்வுகளில்
விரைந்து வழுவுகிறது மனம்
ஆழச் சுழல்களில் சிக்கி அழுந்தித்
தாளமிடுகிறது நாளத் துடிப்பு

ஏகாந்த வெளிதனில்
ஸ்வரங்களின் இன் துணை
அலை தளும்பி வழிகிறது நதி
தீயும் தேனுமாய்க் கசிகிறது காற்று
திசையற்ற பெருவெளியில்
தொலைந்த என்னை
மீண்டும் அறிந்தேன்
அதனால் உன்னையும்.
-  சத்யன் சுந்தர் (நன்றி : திண்ணை)

காதல் வரம்

முகவை சகா
ஊர் திருவிழா
உன்னை போல் அலங்காரமாய்!

துள்ளி குதித்து
பூக்கடை தெருவில் ஓடினாய்
பூ கடைக்காரன் அதிர்ந்தான் !
தன் கடை பூ சரத்தில் பாதி
அறுந்து ஓடுகிறதோ என்று

கோவில் வாசலில் நின்று எரியும்
நெய் தீபத்தை எண்ணினாய்
முடிவில் தப்பாய் கணித்தாய்
108  தீபம் என்று
உன்னோடு சேர்த்து 109 தீபம் அல்லவா

சிரித்துகொண்டே கோவில் மணி அடித்தாய்
மணி சத்தம் கேட்காமல் உன் சிரிப்பை கேட்டு
குளிர்ந்தாள் அம்மன்

கண்களை மூடி கும்பிட்டாய்
உன் வேண்டுதல் எதுவாயினும்
அது நடக்க வேண்டும் என்று நீ வேண்டும்போது
கோவில் மணி அடித்தேன்
உன் ஓரகண்ணில் மணியை பார்த்தாய்
இந்த  மணாளனை மறந்தாய்

உன் தோழிகளிடம் சொன்னாய்
என் அத்தை பையனுடன் சேர வேண்டுமென்று
அம்மனிடம் வேண்டினேன்
கோவில் மணி அடித்தது என்று

நீ எவ்வளவு சிரித்தாயோ
நான் அவ்வளவு அழுதேன்
நீ பெண்ணல்ல பேய் என்றேன்

கோவில் மணி அடித்தது

கள்ளி (பெண்) பால்

சீமான்கனி
அல்லி  மலர்ந்த அரைஞான் நேரம்
கன்னி அவள் கருவறையை
கனிவாய் பதம் பார்த்து
இனிமையாய் எட்டி உதைத்து
வெளிவர விண்ணப்பம் போடுகிறாள்.

வேண்டாமடி என் செல்லமே இருட்டி விட்டது
விடியும் வரை பொறுத்திரு...
நீ பிறந்தாவது விடியட்டும் நம் விதி.
உடனே வருவதென்றால்
உன் இருட்டு விடியல்  
உன்னை இடிய  விடுமடி.
அச்சம் என்னை ஓடிய விடுமடி.
அன்னையின் அருள் கேட்டு
பொறுத்தாள்  பொன்னியின் செல்வி.

சேவல் கூவும் முன்னே
அன்னையின் அடி வயிற்றில்
அலாரம் அடித்து வரப்போவதை
உயிர் மொழியாய் வழிமொழிந்தாள்.
முட்டையை முட்டும்
பெட்டை  கோழியாய்
முட்டி மோதி பார்த்து விட்டு
முக்களோடு முனங்களையும் சொல்லி தந்தாள்  
முல்லை இவள்.
பத்து நிமிட  பாடுக்கு பின்  பனிக்குடம் உடைத்த  
பால்குடமாய் பவனி  வந்தாள்.

தலைகிழாய் தரையிறங்கி
தாரணி பார்க்க தயங்கிய   தங்கம் இவள்;
கண்னடைத்த  கண்ணகியாய்  
கண்திறக்க காலம் பார்த்து கிடந்தாள்.

சீம்பால்   சுரந்திருக்க  பச்சை
காம்பால் கறந்து வந்த கள்ளிப்பால் காத்திருக்கு;
கருத்த கிழவி ஒன்று காரியம் பார்த்திருக்கு.
காத்திருந்தது போதும் கண்விழி கண்மணியே
கதறி அழு பொன்மணியே
காது இருந்தால் அந்த
கடவுளாவது கேக்கட்டும்  உன் கதறலை.

கணநேரம் கழித்து கன்னியவள்
கதறுகையில் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ
கார்முகிலன் காது முட்டி கரைத்தது கார்முகிலை
கண்ணிர் கதறி மழையாய் உதறி விட்டான்
அந்த மந்தார பூமியிலே.  

காஞ்சு  போன கழனி எல்லாம்
கை விரித்து கவர்ந்து கொண்டது
கண மழையை.

மங்கை இவள் மனுஷி இல்லை
மகமாயி மறு உருவம் என்று
மக்களெல்லாம் மண்டி இட.
அருள் வாக்கு சொல்லும்
அம்மனின் அவதாரமாய்...
இதற்க்கு கள்ளிப்பாலே
குடித்திருக்கலாம் என் உயிரை.
அடிமனதில் அடித்து கொண்டு
வேப்பில்லை யால் வெளுத்து   
வாங்கினாள்  வேறொருவனை

தடங்கள்

சத்யானந்தன்
நகரின்
தடங்கள் அனேகமாய்
பராமரிப்பில் மேம்பாட்டில்
ஒன்று அடைபட
ஒன்று திறக்கும்
 
காத்திருப்பின்
கடுமைக்கு
வழிமறிப்பே
குப்பையின்
எதிர்வினை
சுதந்திர வேட்கை
அடிக்கடி
சாக்கடைக்குள்
பீறிட்டெழும்
 
மண் வாசனை
நெல் மணம்
மாங்குயிலின் கூவல்
தும்பி தேன்சிட்டு
என்னுடன் கோலத்தில்
புள்ளிகளாய்
இருந்த காலத்தின்
தடம்
மங்கலாய் மிளிர்ந்து
மறையும்
 
நகரம் நீங்கிச்
செல்லக் காணிக்கை
தந்தாலே
நெடுஞ்சாலை
அனுமதிக்கும்
 
ஆளுயரச் சக்கரங்கள்
விரையும் வாகன
வீச்சிலும் தென்படும்
கோடுகள் இல்லாப் புள்ளிகள்
மட்டும்
காய்ந்த மண் நெடுகத்
தடமே இல்லை
 
அரியதாய் எங்கோ
ஈர மண்
அதுவும் சுமக்கும்
டிராக்டரின் தடம்
 

கண் தானம்

புகழேந்தி
மனிதா!
இரக்கப்படாதே
சுயநலவாதியாய் இரு
நம் கண்களை
மண்ணுக்கும் காற்றுக்கும்
பறவைக்கும் பூச்சிக்கும்
தானம் செய்தது போதும்
தனக்கு மிஞ்சிதான்
தானமும் தர்மமும்

நீங்காத நினைவுகள்

இதயவன்
முதல் பார்வையில்
என்னை கொள்ளைக் கொண்டது...

காதலை சொல்லும்போது
உன் மௌனத்தில்
என்னை வென்றது...

தொலைப்பேசியில் நான்
ஒன்று கேட்க
நீ தர மறப்பதும்
அதில் நான் உருகுவதும்

சில நேரங்களில்
நீ என்னை வெறுப்பதும்
நான் உன்னை நேசிப்பதும்

நான் உன்னை வெறுப்பதும்
நீ என்னை நேசிப்பதும்
அதில் ஒரு சுகம்
நமக்கு!

நீ என்னைப் பிரியும்போது
நான் உன்னைப் பிரியும்போது
உடல் பிரிந்தாலும்
உயிர் பிரியாமல்
செல்வதும்...

பேசிப் பேசி வார்த்தைகள்
தீர்ந்தாலும் ஆசைகள்
தீராமல் வாழ்வது

இன்னும் சொல்லிக்கொண்டே
போனாலும் சொல்லாமல்
வாழ்வதுதான் "நீங்காத நினைவுகள்"

பொங்க‌லோ பொங்க‌ல்

க‌விஞ‌ர் அ. கௌத‌ம‌ன்
பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்
த‌ங்குக‌ இன்ப‌ம் த‌மிழ‌ன் வாழ்வினில்
ம‌ங்குக‌ தீமைக‌ள் பொங்குக‌ வ‌ள‌மைக‌ள்
விஞ்சுக‌ ந‌ல‌ங்க‌ள் மிஞ்சுக‌ ந‌ன்மைக‌ள்
நீங்குக‌ க‌ய‌மை நில‌வுக‌ வாய்மை
ந‌ல்குக‌ வெற்றி ந‌லிக‌ தீதென்றும்
நிறைக‌ நிம்ம‌தி நீடுக‌ ஆயுள்
நில‌மே செழித்து நீர்வ‌ள‌ம் பெருகுக‌
எல்லா உயிர்க‌ளும் இன்புற்று வாழ‌
பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்

எட்டாக்கனி

பாரதி பிரியா
 
நெடுநாளைய என் நினைவலைகளில்
நீந்திக்கொண்டிருக்கிறாய்...
காத்திருப்புகளில் கரைந்து போவது
கனவுகளும்  காலமும்தான்...!

கனவலையில் காத்திருக்கிறேன்..
கை பிடிக்கும் தூரத்தில்....
நீயிருந்தும் ..... காலம் மட்டும்
கைகொடுக்காமல் போகிறது...!

பூவிழிப்பார்வைகள் போதும்....
இருவிழி வலிகள் போகும்...
பூவிதழ் வார்த்தைகள் போதும்.....
இதயம் சாகாமல் வாழும்...!

வரும்காலம் வசந்தமாகலாம்...
நிகழ்காலம் பாலையானாலும்...
பூமியில் இனியொரு ஜென்மம்...
நீயும் நானும் நிஜமாய் வாழ.....
 

தொலைவென்பது

அய்யா. புவன்
இயலாமைக்கு இன்னொரு வழியேது!
மகனுக்கு ஆசைப்பட்டதெல்லாம்
வாங்கித் தர ஆசை!
ஆனா! வாழ்ற வாழ்க்கை
வகை மடுப்பா இருக்கும் போது!
என் மகன் ஆசைப்பட்டமாதிரி!

கண்ணுக்கு தெரிந்தே...
அவனுக்கு எல்லாமே பணிப்பெண் தானே!
சொல்லத் தெரியாத ஆசைகள்... சில சமயங்களில்

கூடும் பொழுது...
சந்தோஷத்தை விட...
கஷ்டமே மேலோங்கி!
நான் பள்ளி கொள்ளும் சமயங்களில்...
அவன் பள்ளியில்..
இருவரும் நேரங்களில் நேரெதிராக...
பார்க்க ஆசை...
பேச ஆவல்...

எல்லாம் இருந்தும்.. நான் மட்டும் தூரமாக...
அவனுக்கு புரியுமோ..இந்த தந்தையின் ஏக்கம்...
பிரிவு... வெளிநாட்டில் வாழ்வதென்றில்லை...
சொந்த வீட்டிலும் கூட!
அருகிலேந்து பிரிவது தான்...அதிக கஷ்டம்!

அப்பா!..
சீக்கிரம் வாங்க! காத்திருக்கேன்..
ஓசை மட்டும் அலை பேசியில்...
வருவதர்க்கு முன் தூங்கி போகும்...அவன் படிப்பு!

நல்லா படிக்கட்டும்! அதான் முக்கியம்!
ஆனால் அதை விட முக்கியம்! அரவணைப்பு!
எப்பொழுது!
இதே மாதிரிதான்...
என் அப்பாவும் நினைத்திருப்பாரோ