தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நீ இல்லாத நான்

குட்டி ராஜேஷ்
நீ இல்லாத அறை
நீ இல்லாத இருக்கை
நீ இல்லாத நிலவு
நீ இல்லாத இரவு
நீ இல்லாத தனிமை
நீ இல்லாத நேசம்
நீ இல்லாத பங்கிடல்
நீ இல்லாத நினைவுகள்
நீ இல்லாத கனவுகள்
எப்படி இருக்குமென்று
நினைக்கிறாய் ?
நீ இல்லாத
என் நாட்களையும்
வாழ்வையும்
போல்
இருக்குமடா
வெறுமையாய்

இரக்கம்

வாலி
 மறியே
செம்மறியே !
மேயப்போகிறாயா ? போ
அதோ அந்த மலையடி பக்கத்தில்
நல்ல மூலிகைகள் மலிந்து கிடக்கின்றன
அவைகளையே மேய் !

தப்பித்தவறி விஷப்பூண்டுகளில்
வாயை வைத்து விடாதே
ரொம்பவும் துள்ளாதே நிதானமாய் போ. . .

உன் முட்டி எலும்புகள் முறிந்து விட்டால்
என் கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் வரும்…

உன்னைத் தேடும்படி வைக்காதே !
இருட்டியதும் நீயாகவே
வீடு திரும்பி விடு !

விடியும் வரையில்…அரைத்தூக்கத்தில்
ஆனந்தமாக அசைபோடு !
விடிந்தபிறகுதான்…

பக்ரீத் !- 

கண்ணீர்ப் பனித்துளி நான்

மயிர் கூச்செரியும் கடுங்குளிரில்
நிலவுமறியாது
பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும்
கண்ணீர்ப் பனித்துளி நான்

ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும்
ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று
சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும்
கண்ணீர்ப் பனித்துளி நான்

நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில்
உனது வெளிச்சத்தை முத்தமிட்டு
அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும்
கண்ணீர்ப் பனித்துளி நான்

- ரொஷான் தேல பண்டார (மொழிபெயர்ப்பு: எம்.ரிஷான் ஷெரீப்)

என் முனியம்மா

புதிய மாதவி
பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.

காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.

ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.

எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.

இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.

முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பார்த்த..
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..

முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.

- புதிய மாதவி, மும்பை

கையடக்கக் கவிதை

பனசை நடராஜன்
இறுகிய மனிதரின்
இரும்பொத்த மனத்தையும்
இளகிடச் செய்யும்
மழலையின் சிரிப்பொலி..!

குடும்பத்தில் எல்லொர்க்கும்
குதூகலம் வார்க்கும்,
ஊடலைப் போக்கும்
தவழும் பனித்துளி..

தாயின் நாக்கென்ற
தாலாட்டுக் கிளுகிளுப்பையின்
பாட்டுக்கு மட்டுமே
தூங்கிடும் உயிர்ப்பூ..

வித்தகர்க்கும் விளங்காத
தித்திப்பு மொழி பேசும்
கருத்தாழமிக்க
கையடக்கக் கவிதை..!
- பனசை நடராஜன் (நன்றி : தமிழ் முரசு)

எரியப் போகும் நீதி

சுதா ஆறுமுகம்
பேருந்துகளே பீதியடையாதீர்!
பயப்படாதீர்கள்!
இருபது ஆண்டுகளாயிற்று வழக்குத்தொடுத்து!
இன்னும் கொஞ்சமே இருக்கிறது
நீர்க்காமல்!
கோகிலவாணிகளே
கல்லூரிகளுக்குப் போங்கள்!
கோட்டை தெம்பாய்த்தானிருக்கிறது!
ஆடைகளுக்குள் ஆயுதங்கள் தரித்து
அழைய வேண்டிய அவசியமிருக்காது!
அமைதி காத்திடுங்கள்!
பஸ்களும் பயணிகளும் கொளுத்தப்படாமலிருக்க
வழக்குகள் மிக கவனமாக கையாள(ட)ப்பட்டு
தோற்கடிக்கப்படும்.
கவலை வேண்டாம். !
ஏதும் நிகழாது
நிகழ்த்தி விடவும் முடியாது!
ஏனெனில்
இது
காலாவதியானது
நீதி!
இம்முறை எரியப்போவதும்
நீதி !

ரயில் பயணங்களில்

அருணா
 ரயில் பயணங்களில்....
என்னைப் பிடிக்கும் என்றுஜன்னலில் கூடவே
ஓடி வரும்
நிலவு

கூந்தல் கலைத்து
வருடி வரும்
காற்று

கன்னம் சிலிர்க்க
சிரித்துத் தெளிக்கும்
சாரல் மழை

நிலவு,காற்று,மழை...
விடை கொடுத்து
வழியனுப்பாமல்
கூடவே நான்
கூட்டிப்போகும்
என்னுயிர் நண்பர்கள்- 

கானல்வரி

குட்டி ரேவதி
 தண்டவாளங்கள் திறக்கின்ற பாதையில்
நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறது
மனிதகதி

ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும்
ஒரு குறிப்பிட்ட நிறஒளியும் சோம்பலும்

நிறம் இறுகிய ஒரு மனிதன்
அடிக்கடி தென்படுகிறான்

அவனது உறக்கத்திற்குள்
நிறைய ரயில் வண்டிகள் நுழைந்து செல்லும்போலும்

உடலைப் பிசையும் இளமையைச்
சந்திக்கும் ஒரு பூங்காவாக

எல்லா ரயில்நிலையங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன

கடைசியாய் அவரோடு ரயிலுக்காகக்
காத்திருந்தபோதுதான்
கொடூரமான ஊளையுடன் ரயில் வந்து நின்றது

எல்லோரும் அறியவும் காணவும்
தனது மார்பின் திறந்தவெளியில்
என்னை அணைத்து முத்தமிட்டார்

பின் எப்பொழுதுமே
அவரை அங்கு சந்திக்கவில்லை- 

ஒளியேற்ற வருவாயா?

சோனி ஜோசப்
இருள் சூழ்ந்த இல்லிலும்
கருமை நிறை வானிலும்
ஒளிமிக்க தீபமும் - வெள்ளி
போன்ற நிலவும் உளது.
அடர்ந்த இருளால் நிரம்பி
வழியற்றவனாய் வாடி
நிற்கிறேன் - ஒளியேற்றி
என் மனதில் குடிபுக
வருவாயா?

உசிரெல்லாம் ஒண்ணு

அறிவு
உலகில் வாழும்
உயிர்கள் எல்லாமே-ஒரு
வகையிலே ஒண்ணு தான்

மனித சாதிக்கு மட்டும்
என்ன-அப்படி
மகத்துவம்னு புரியலே

நிலையில்லாதத வாழ்வை மறந்து
நிம்மதிய தொலைச்சு
ஓடி ஓடி சம்பாதிச்சு
ஓய்ஞ்சு போய் உட்காரயிலெ
உன் ரத்தம் கூட-உனக்கு
ஒத்தாசைக்கு வராதுன்கிறதை
ஏன் உணற மறுக்கிறே

வாழும் வரை இங்கு
நன்மைங்கிற தீபத்தை
நாம ஏத்தலைன்னாலும் தேவலை
துன்பங்கிற தீவட்டியை-யாரும்
தூக்காமப் பார்த்தாலே
பிறந்த வாழ்க்கையிலெ
அர்த்தம் வந்து சேரும்

உசிரெல்லாம் ஒண்ணு தான்னு
மனிதா- நீ
உணர்ந்துக்கிட்டா போதும்
உலகத்துப் பிரச்சனைகள்
ஒரளவு தீரும்