தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இலக்கிய வட்டத்தில் இருவரும்

டாக்டர்.வ.க.கன்னியப்பன்
 
ஒருவரின் குரல் போல
மற்றவர்க்கு அமைவதில்லை;

ஒரு இசைக் கருவிபோல்
பிறிதொரு கருவி இசைப்பதில்லை;

ஒருவரின் குணம் போல்
இன்னொருவர் இருப்பதில்லை;

ஒரு எழுத்தாளர் போல்
மற்றொருவர் சிந்திப்பதில்லை;

சிந்தனையையும் ஒருவர் போல்
இன்னொருவர் வெளிப்படுத்துவதில்லை;

எழுத்தாளர்கள் கருத்துக்களுடன்
வாசகர்கள் கருத்துக்கள் ஒன்றாய் இருப்பதில்லை;

எழுத்தாளர்கள் இதற்காக நாண வேண்டியதில்லை
வாசகர்களை குறை சொல்ல தேவையுமில்லை;

எழுத்தாளர்களும், வாசகர்களும்
அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்;

இலக்கிய வட்டத்தில் இருவரும்
தோழமையும் நட்புமாக வளம்பெற வேண்டும்!
 

காதல் பூக்கும் காலம்

இசாக்
புதிதாக எடுத்ததாக
புகைப்படமொன்றை அனுப்பினாய்
அதை
பார்த்து இரசிக்க
என்னை
எப்போது அனுப்பி வைப்பாய்!

அடேய்
ஏதேதோ கனவுகளால் பின்னப்பட்டிருந்தன
பல இரவுகள்

நாம்
நேருக்கமாக சந்தித்துக் கொண்ட
அந்த இரவு
பார்வையிலேயே கழிந்தது
பார்த்தலே காதலில் இன்பமா.?

நீ தான் முதலில்
இல்லை நீ தான் முதலில் என
ஒரே நேரத்தில்
நாம்
கொடுத்துக்கொண்ட
தொலைபேசி முத்தங்களின்
வானலை சந்திப்புதான்
மின்னலோ.

நீயென்ன கடிவாளமா
உன் அறிமுகத்திற்கு பிறகான
பயணங்கள்
மிக இயல்பாக நிகழ்கிறது
எந்த சலனமுமற்று.

ஒரு பிறந்த நாளில்
வித்தியாசமான பரிசொன்று அளித்தேன்
உனக்கு.

நீ
உன் வாழ்வையே
பரிசாக அளித்தாய்
எனக்கு.

நாம்
நம் நேசிப்பின்
ஆழம்
அறிவதற்கான பயணத்தை தொடங்கினால்
அது
அடிவானத்தை தொடுவதற்கான
பயணம் போல

அன்பைத் தேடி

புஷ்பா கிறிஸ்ரி
அன்பைத் தேடி அலைவதனால்
உன்னுள் அன்பும்,
அடக்கமும், பாசமும், பண்பும்
இன்பமும், இனிமையும்
இனிதாய் வந்து தங்கும்

அதிகாரம் தேடி,
சதிகாரனாகி
சாதிக்கப் போவது என்ன ?
விதியே என்று நீயும்,
வீணாகத் தனிமைப் படுத்தப் படுவாய்
வீதியோரத்தில்...

அன்பைக் கொடுத்து விடு
அறிவைத் தந்து, பிறரை
ஆதரிக்கக் கற்று விடு
விதியை வென்று நீ
விண்ணை எட்டிடலாம்.

பிறரைச் சாடி
வதை மொழி பேசுவதால்
மிஞ்சுவதெல்லாம் உனக்கு.

பேயனென்ற பேச்சுத் தான்
நாயே என்றுன்னை
நாலுபேர் தள்ளி வைத்தால்
நீ போய் தனிமையில்
மெளனியாய் அஞ்ஞாதவாசம் தானே!

வேண்டாம்...வேண்டாம்
விட்டு விடு விவாதிப்பதை.
ஏற்றிடு பிறர் கருத்தை.
அது உனக்குச் சாதகமில்லை
என்றாலும்
சார்ந்து விடு அவர் பக்கம்
சாதிக்கலாம் நீ நிறையவே

மலம் தின்னும் மனசு

பொத்துவில் அஸ்மின்
ஓடுகின்ற நதியினிலே அழுக்கு தூசி
ஒருபோதும் இருப்பதில்லை அதுபோல் நாங்கள்
வாடுகின்ற போதினிலும் அருகே யாரும்
வருவதில்லை என்பதனை உணர்ந்துகொள்வோம்!

பாடுகின்ற தவளைகள் பசியால் வாடும்
பாம்புக்கு இரையாகும் ;ஆனால் வாயை
மூடுகின்ற மனிதனுக்கு எதுவுமில்லை
முழுஉலகும் அவன்வாயில் மண்ணைபோடும்
பெண்ணைப்போல் நாமொதுங்கி வெட்கம்தின்றால்
விண்ணைநாம் தொடமாட்டோம் விளங்கமாட்டோம்
என்னைப்போல் யாருண்டு என்று எண்ணி
எழுவானை கிழித்தால்தான் எதையும்காண்போம்

எமக்கான சுயத்தைநாம் தேடும்போது
எதற்குமே பயங்கொள்ளத் தேவையில்லை
நமக்கான பாதையிலே நாளும் சென்று
நடக்காத கால்களையும் நடக்கச்செய்வோம்

நடக்கின்ற போதினிலே நாய்கள் வந்து
நமக்கான பாதையிலே மறித்து நின்றால்
படக்கென்று கவிவாளை உறுவி அந்த
பதருர்களின் வாலறுத்து ஓடச்செய்வோம்.

மற்றவரின் கால்பிடித்து மண்டியிட்டு
மலம்தின்னும் மனசுக்கு மருந்து செய்வோம்
கற்பனையில் யதார்த்தத்தை கலந்து நல்ல
கவிதைகளால் உலகுக்கே விருந்து செய்வோம்

மெளன ரகசியம்

சலோப்ரியன் @ ஆண்டனி
 
 

 
பெருத்த ஏமாற்றமோ
போராட்டத்தின் தோல்வியோ
கலைந்த தூக்கமோ
கலவியினால் வந்த களைப்போ
மகிழ்ச்சிப் பெருவெள்ளமோ
எதிர்கால ஏக்கமோ
எவர் மீதோவுள்ள எரிச்சலோ
எதிர் கால ஏக்கமோ
வேண்டாத வெறுப்போ
நெடுநேரக் காத்திருப்போ
அவமானத்தின் வெளிப்பாடோ
கூடக் காரணமாயிருக்கலாம்...!
அதுவா இதுவா
அல்லது அதுவும் இதுவுமா
கொண்டவன் மட்டுமே உணரலாம்
மற்றவனுக்கு விளங்காதிந்த
மெளன ரகசியம்....!!!
 

அவளுக்கான கடைசி கவிதை

சிந்தன்
எழுதும்போது
எல்லாம் சுகமே

என் கவிதை ஒன்றை
முதன் முதலாய்
நீ வாசித்து நேசித்த போது
கரைந்தே போனேன் ...
மிரட்டும் உன்
விழிகளில்
குடியமர்ந்தேன் ...

இருதுளி கண்ணீரில்
மூழ்கி மரணிக்கும் வரை
சுகமாகவே தொடர்ந்தென
எல்லாம் ...

இன்றோ அத்தனையும் தலைகீழ் ...

உற்சாகம் கொடுத்த
வார்த்தைகளில்
ஒரு எழுத்துப் பிழையும்
இல்லாத போதும்

வாட..வைக்கின்றன!

செல்லமான பார்வை
பரிமாற்றங்களில்
கண்கள் அப்படியே
இருக்கும்போதும்
நெஞ்சம் ரணமாகிறது!

நினைவுகள்
நிறம்பிக்கிடந்த தனிமை
சூழல் மாறாதபோதும்
சுகம்தர மறுக்கிறது!

”பயணத்தில்
இன்பம் கொடுத்த
பாதைகள்
பிரிவில் எப்போதும்
முள்ளாய் குத்துகின்றன!”

உனக்கே உனக்காக
எழுதப்பட்டவை
என் கருவூலம் உடைபடும்
அளவு பெருகிவிட்டன
இன்னும் காகிதம் கேட்டு
தவிக்கிறது பேனா

மனம் புரியாத
உன் நினைவுகளுக்கு
மரணதண்டனை கொடுத்து
எழுதத் துவங்கினேன்
கடைசிக் கவிதை
-

தீர்ப்பின் முடிவில்
மரபின் காரணமாய்
முள் உடைத்தேன் ...
முற்றுக்கு பதிலாக
விழுந்தது ”கமா,”

இது காதல் கடிதம் அல்ல

சீமான் கனி
சிலந்தி கூடாய் சிக்கலாய் கிடந்த
இதய கூட்டின் பூட்டு திறந்து
குடிவந்து குத்து விளக்கேற்றி
நித்தம் வந்து சுத்தம் செய்து
சுகமாக்கி வைத்தவள் நீ...

கனவில் புகுந்து குழந்தை  குட்டிகளோடு
குடித்தனம் நடத்துபவள் நீ..
இது உனக்கு எழுத்தும் காதல் கடிதமோ;
வாடகை வசூலிக்கவேண்டி விண்ணப்ப கடிதோமோ  இல்லை...

நீ என் வாழ்வுக்குள் வந்து விட்டதை
வாசிக்கும்
நேசிக்கும்
யாசிக்கும்
சுவாசிக்கும் கடிதம்.

உன் முதல் தரிசனம்...
புரிதலுக்கு தயாராகாத புத்தியை - சிறு
புன்னகை   பூத்து என்னை புரட்டி போட்ட
புனித காலம்...

நத்தையின் வித்தை கற்ற
மாநகரா(த) பேருந்து அது.

தெரு கூத்தாடிகளின் வித்தையை
வேடிக்கை பார்த்து காது மறத்து போன
புதுமை பெண் ஒருத்தின் கையில்...

பாலுக்காகவோ; ஆளுக்காகவோ
பசிக்காகவோ; ஸ்பரிசத்திற்காகவோ
வீம்புக்காகவோ; விதிக்காகவோ
வீரியம் குறையாமல் - அப்போது
அவளுக்கு தெரிந்த ஒரே
மொழியான விசும்பலோடு
கதறி கதறி அழுகை விற்று கொண்டிருந்தாள்,
உன்னை போலவே ஒரு குட்டி தேவதை.

கனவில் கண்ட கடவுள் போல் காட்சி தந்து
பட்டாம்பூச்சி கண்காட்டி;
பால் நிலவின் பாவம் காட்டி;
படுத்துறங்கும் பனித்துளியின் ஸ்பரிசம் காட்டி;
பகலை இரவாக்கி நித்திரை - இன்றி
நிஜத்தை கனவாக்கி
புகழுக்கு அடங்காத புயலை ஒரு
பூ வந்து புன்னகை தொடுத்து
பூமிக்குள் புதைத்துவிட்டு போவது போல்
உன் குறிஞ்சி சிரிப்பால்
வாங்கியே விட்டாய் அவள் விற்று வந்த அழுகையை ;
நிறுத்தியே விட்டாய் அவள் கண்ணத்தில்
நீந்தி நீண்டு வந்த நீர்துளியை.

ஓய்ந்தது ஏன்னவோ மழலை
உனர்ந்ததேன்னவோ மழயை.

அவள் அந்த அற்புதங்களை அனுபவித்து - அடுத்த
அழுகைக்கு ஆயத்தம் ஆகும்முன்
அவிழ்த்து விட்டாய் அடுத்த அதிரடியை.

காற்று மயிலிறகை கவனமாய் கையாண்டு - உன்
கார்கூந்தல் தேடி இறகை இறக்குவதுபோல் அவள்
இடையயை இதமாய் பற்றி உன் மல்லிகை மடிக்குள்
மறைத்து கொண்டாய் மேகங்களுக்கிடையே
பதுங்கிய பால்நிலவாய் அவள்.



நீ எதற்க்கோ ஆயத்தமாகிறாய்
அவள் எதையொ எதிர்கொள்ள ஆயத்தமாகிறாள்.

காரியத்தின் கண்ணீர் நனைத்த மீதியை
வீரியத்தின் வியர்வையால்  அவளை  நனைத்திருந்தாள்.


கைகளை கைக்குட்டையாக்கி
நெற்றி ஒற்றி வியர்வை விலக்கினாய் .

வண்ணம் வற்றி போன
செம்மண் இதழ் குவித்து கொளுத்தி எடுத்த
கொடை வெயிலின் சூட்டை சுளித்து வைத்த
சுண்டுஇதழால் சுகமாய் இழுத்து சுவசத்தில் கலந்து
சொடுக்கு பொழுதில் சமைத்து வெளிகொணர்ந்தாய்   
வினொத தென்றல் ஒன்றை.

குவித்த இதழ் குவித்தபடி இருக்க
குளிரூட்டினாய் குழந்தை அவளை.

செயற்கை குளிரூட்டி தெரியும் - இந்த
இயற்கை குளிரூட்டி கண்டு வியப்பில் நான்.

அப்படியொரு தென்றலின் முதல்
பிரசவத்தை பருகிய உலகின் முதல்
குழந்தை அவள்.

ஏது!! இது இப்படியெ போனால்
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்து உன்
வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி  ஜாக்கிரதை .


சிறுமி அவள் சிரித்து, சிரித்து
சிலிர்த்து , சிலிர்த்து சின்னாபின்னமாகி;
பனிக்கட்டியாய் உறைந்து போனால்.

இறுதியாய் அவளின் மைக்ரொ உதட்டில்
ஹய்க்ரொ முத்தமிட்டு மொத்தமாய்
மூர்ச்சையாக்கினாய் ;
அவளுக்கு அழுகை அன்னியமானது
அவளின் அதரம் புன்னியமானது.


அத்தோடு விட்டாய நீ…
அண்ணம் அவளை அள்ளியேடுத்து - உன்
மார்பென்னும் மந்தார
கூட்டுக்குள் குழிதொண்டி புதைத்துகொண்டாய்.

அவள்
நிஜத்தை கடந்து
நினைவுகளை துறந்து
நித்திரைக்குள் நீண்டு போனாள்.

அதை கண்ட கனத்திலே நானும் காணாமல் போனேன் …

இருப்பு

ப.மதியழகன்
ஜனன வாசல் வழியே
உள்நுழைந்தோம்
மரண வாசலை நோக்கி
ஓடுகின்றோம்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அங்குலமாக
சாவின் நிழல்
என்னை நெருங்கிக்
கொண்டேயுள்ளது

துக்க வீடுகள்
யாரும் தப்பிக்க முடியாது
என தெரியப்படுத்துகின்றன

திரும்பிப் பார்க்காமல்
ஓடிக்கொண்டிருந்தால்
துரத்துவது நமக்குத்
தெரியாதென நினைக்கிறோம்

எப்போதும் ஏதாவதொரு
போதையிலிருந்து
சகலத்தையும் மறக்கிறோம்

வாழ்க்கை விரைந்தோடுகிறது
எந்த ரூபத்திலும்
மரணம் என்னை எதிர்கொள்ளும்
என்ற நினைப்பு
பீதியூட்டுகிறது

இயற்கை உயிர்களிடத்தில்
பாகுபாடு காட்டுவதில்லை
என உணர்ந்தபடி
பிரபஞ்சத்தில் சிறு துரும்பாக
எனதுடல் மண்ணில் சரிகிறது

உன் ஞாபகம்

மு மேத்தா
 நீர்நெய் அகலில்
நிமிர்ந்த சுடரே!
என் சில இரவுகளைத்
துப்பறிந்தாய் நீ

ஓட வண்டுகள் மொய்கும்
சுதை மொட்டே !
உனக்குள் நான்
மகரந்தமானதுண்டு

நெருப்புத் துண்டுகளை
விழுங்கும் நான் - உன்
மெளன மணலில்
தலை புதைக்க வந்ததுண்டு

சில நேரங்களில்
உன் பனி நிழல்
என்மேல் உதிர்த்த
ஆயுதப் பூக்களின் இதழ்களை
அக்கினி நாக்குகள் ஆகியிருக்கின்றது

உன்மடியில் சிந்திக் கிடக்கும்
நாகலிங்கப்பூ ஆசனங்களில்
என் அதிசியங்களுக்கு
பட்டம் கட்டிய அந்த நாட்கள்
நினைவிருக்கிறதா உனக்கு......?

ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக் கொண்டு
இருவரும் எரிவோம் மெதுவாக
நான் மெளுகுத்திரியாக
நீ ஊதுவர்த்தியாக

வேதனையை நான்
வெளிச்சப் படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு

அணைந்ததும் என்னை
மறந்து விடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக் கொண்டிருக்கும்

மரணத்திலும் ஒரு

முத்துக்கருப்பசாமி
பசித்த கழுதை
புசித்திருந்தாலும்
பரிதவித்திருக்க மாட்டேன்

விதை நெல்லாய் மண்ணில்
புதைந்திருந்தாலும்
மனம் வெதும்பி இருக்கமாட்டேன்

நீர்க்குமிழி நிமிடத்தில் நெருப்பில்
இட்டிருந்தாலும்
நெஞ்சு  வெடித்திருக்கமாட்டேன்

சக்கரங்களினூடே வந்துவந்து போகும்
திரவத்தையே பிரதிபலிக்கிறது
சாலையோரத்தில் கிடக்கும்
கிழிந்த தாவணியொன்று