மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
குஞ்சுப்பரந்தன்
சிலவேளை மாடுகள்
பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில்
குண்டுகள் காத்திருந்தன.
மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.
மிஞ்சியிருக்கும் இரண்டு
மாடுகளின்
சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.
மாதாவின் தலை
அவளது கைகளுக்கு
எட்டாமல் விழுந்திருக்கிறது.
மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.
தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்
வாழுகிற மாடுகளாயிருந்தன.
தடைசெய்யப்பட்ட
குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.
ஒரு குழந்தை
வாய்க்காலில் மறைந்து
தப்பியிருக்க
மாட்டுக்கன்றுகள்
பால் காயு முன்பாகவே
இறந்து கிடக்கின்றன.
கொம்பு முளைத்த மாடுகளிடம்
எந்தத்துவக்குகளும் இல்லை.
இராணுவ உடைகளையும்
அணிந்திருக்கவில்லை.
வெடித்துச் சிதறிய குண்டு
மாடுகளை அள்ளி எடுத்த
பட்டியில்
துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.
சிதறிய சதைகளை
தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்
நாய் ஊளையிடுகிறது.
பாலுக்கு அழுகிற குழந்தை
தலை துண்டிக்கப்பட்டிருக்கிற
மாதாவை தேடுகிறது
இறந்த பசுவை
தேடுகிற கன்றினைபோல.
காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்
பட்டியிலிருந்தும்
மேய்ச்சலுக்காய் திரிந்த
தரைகளிலிருந்தும்
குருதிதான் பெருக்கெடுக்கிறது.
மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?
பசுக்கள் குழந்தைகளுக்கு
பாலினை கொடுத்தது
பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.
வாய்களை மீறி
மாடுகளிடம் அழுகை வருகிறது.
அவைகள் எதையும் பேசப்போவதில்லை?
குண்டுகளோடும்
கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்
அதிகாரத்தோடும்?
மாதாவிடமும் எந்த
திருச்சொற்களும் இல்லை.
மாதாவும் மாடுகளும்
வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க
மேய்ச்சல் தரைகளில்
மேலும் பல குண்டுகள் காத்திருந்தன