வாசலிலே நீர்தெளிக்க
வளையோசை ஊர்எழுப்ப
வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட
வச்சகண்ணு வாங்காம
வானமே உன்வாசல்வர
வசியம் போட்டு வரஞ்சுவச்ச
வரிசைக்கோலம் நெனவிருக்கா!!?
நீ கோலம்போட புள்ளி வைச்சு
புத்தகம் பார்த்திருக்க ராவோடு ராவாய்
நட்சத்திரங்களை - தரைக்கு
தடம் பெயர்த்து வந்தவளே
என்று ரகசியமா சொல்லிவச்ச
ராப்பொழுது நெனவிருக்கா!!?.
பிறைநிலாவ பிச்சுவந்து
கிள்ளி கிள்ளி அத எடுத்து
வாசலிலே நீர்தெளிச்சு
நீ போட்ட வாழ்த்துகோலம்
நெனவிருக்கா!!??
வீட்டு முற்றத்தில் குத்தவைத்து
உட்கார்திருந்த உன்னை;
கோலம் என்றெண்ணி முதல் பரிசை
உன் வீட்டுக்கு அறிவித்த
கோலப்போட்டி நெனவிருக்கா!!?.
மருதாணி அரைச்சு
மல்லிகை கையில் கோலம் போட்டு
அழகா இருக்கானு அடுத்தநாளு கேக்கையில
இருட்டுல இலுவிவிட்ட இந்த கோலம் அழகுன்னு
கண்ணாடி காட்டி கண்ணடிச்சது நெனவிருக்கா!!?.
ஆத்தா கிட்ட அடிவாங்கி
'யப்பே...'ன்னு அழுகையில
கண்ணத்த கடந்துவந்து
கண்ணீர் போட்ட நீர் கோலம்
கடவாயில் உப்பு கரிச்சது
கண்ணே நெனவிருக்கா!!?.
கைவிரல் நடனமாட
கைவளவி தாளம்போட
கலர்கலரா மாவெடுத்து
கச்சிதமா கோலம்போட்டு
கண்மூடி கனாகண்ட
காதலான எழுப்பிவிட்டு
கதவோரம் வந்துநின்னு
கண்ணாடிக்க,
கொலுச பேசவிட்டு
கோபப்பட்ட நெனவிருக்கா!!?.
கார்த்திகை மாசத்து
தீபத்துல திரியவச்சு
தெருவெல்லாம்
தினறவச்சு நீ போட்ட
தீக்கோலம் நெனவிருக்கா!!?.
எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு நீபோக - உன்
தலையயேரிய மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.
வண்டியுருக்கு வாக்கப்பட்டு வண்டியிலே நீபோக
வகைவகையா கோலம்பார்த்த என் வீட்டு வாசப்படி
வாழவெட்டியா வழியத்து கெடக்குமுன்னு
வஞ்சியே நெனவிருக்கா!!?
சீமான்கனி