மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனாருக்கு வணக்கம்
இப்பவும் (*2) தங்கைக்கு பாடம்
சொன்னபோது
தங்கள் பாட்டுத்திறம் கண்டு
இறும்பூது எய்தினேன். நிற்க.
அதே ஜோரில்
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஒரொக்கும்மே
என்றப்டியே கேட்டேன் போனஸ்
முதலாளியிடம்
கம்யூனிஸ்ட் சங்காத்தமே
கடைக்கு ஆகாது என்று சொல்லி
இல்லம் நோக்கி அனுப்பி வைத்தார்.
மட்டை பழுத்தா மரத்துல.....
எனும் அம்மா.
.....யாய் எனும் அப்பா.
சரி கவிதையாவது எழுதலாம் என்றால்
இந்த இ.ஞா.திரவியம்,
கலாப்பிரியா, ஞா.வெட்டியான்
இப்படி எல்லாரும்
நன்றாகவே கவிதை சமைக்கின்றனர்.
எனக்கும் கணையாழியில் கவிதை செய்வதைவிட
படிப்பதே சுகம் என்று படுகிறது.
ஆதலினால் தாங்கள் நேரில் வந்து
செல்வத்துப் பயனே ஈதல்
என்றியம்பி தனபால் ஸ்டோர்ஸ்
அதிபரை இசைபட வாழ வைக்க
வேண்டுகிறேன்
இப்படிக்கு
சிதம்பரம் சாமிநாதனார் மகனார் முத்துக் குமரனார்
மேக குமாரன்