மூஞ்சூட்டை ஒடிச்சு பல்லுகுத்தி,
கற்றாளை, கல்லு முள்ளு பாத்து நடந்து,
பின்னக்கா பொறுக்க போன மவ
பொழுது சாயுமுன்னே வந்து சேருவாளா ?
சருகுக்கு இடையில சர்ப்பம் இருக்கும்,
விஷமுள்ளு வழியில விழுந்து கெடக்கும்,
குப்பிச் சில்லு குத்திப் பிச்சும்,
வெளிச்சம் கெடுமுன்னே வந்து சேருவாளா ?
களவாணிப் பயலுவ அங்கங்கே நிப்பினும்,
இருட்டுக்குள்ள குடிச்சோண்டு விழுந்து கெடப்பினும்,
ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா என்ன செய்வேன்
சமஞ்ச புள்ள சாயங்காலம் வந்து சேருவாளா ?
முந்தியில மனசைக் கட்டி,
வயிற்றில நெருப்பக் கட்டி,
கும்பி கிடுகிடுங்க கிடந்து பொகயுறேன்...
நாளைலேருந்து போகவேண்டாம்ன்னு சொல்லணும்,
வேற வேல பாக்கலாம்ன்னு சொல்லிப் பாக்கணும்.
சர்வ காலமும் இது தான் நெனப்பு...
ஆனாலும் விடிஞ்சதும் தட்டி எழுப்பி
அனுப்பி வைக்கற பொழப்பு...
இடுப்பொடிஞ்ச கெளவி நான்...
அடுப்பொிக்க எங்க போவேன்
விக்னேஷ்