வெள்ளைப் பாலைவனமாய்
கிடந்த காகிதத்த்தில்
ரோஜாக்களை சாகுபடி செய்ய
முதலில் அவள் பெயரை எழுதுகிறேன்.
அப்புறம் எழுத என்ன இருக்கிறது?
அந்தக் காகிதங்கள்
கைவிரல் ரேகைகளில்
கசக்கி கசக்கி எறியப்படுகிறது.
பேனாவின் முள் குத்துவதற்கு
முன்னமேயே
அந்த முகம்
மொட்டவிழ்ந்து அப்புறம்
இதழ் அவிழ்ந்தும் வீழ்கிறது.
கல்லறைச்சருகுகளையெல்லாம்
சேர்த்து வைத்திருக்கிறேன்
கவிதைகள் என்று.
கணந்தோறும் கணந்தோறும்
கன்னிக்குடம் உடைத்த
கற்பனைப்பிண்டங்களை
பிரசவிக்கின்றேன் கவிதைகள் என்று.
மனவலிகளின் "கலைடோஸ்" சித்திரங்களை
அள்ளி அள்ளி தருகின்றேன்
கவிதைகள் என்று.
அந்த வளையல் துண்டுகளையெல்லாம்
சித்திரபூக்களில் "உற்றுக்கேளுங்கள்".
அவள் குலுக்கி குலுக்கி
உடைத்துப்போட்ட வளையல்களின்
ஓசைத்துண்டுகள்.
அதிலிருந்து என் காதலை
இன்னும் வடிகட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.
சஞ்சலத்தின் சல்லடையில்
எல்லாம் ஒழுகிப்போய்விட்டது.
இன்னும் அதை
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எலும்புக்கூடாய் இற்று விழுந்தபோதும்
மக்கிப்போக மறுத்து அடம்பிடிக்கும்
அந்த "மஜ்ஜைக்குள்"
அவள் மின்னல் ஊற்றுகளைத் தோய்த்து
எழுதிக்கொன்டே இருப்பேன்
இக்கவிதையை.