தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நீ அழுக்கான அழகி

சீமான்கனி
இனி கொலுசோடு குளிக்கச்செல்லாதே
நீ கழுவிவிட்ட  அழ(ழுக்)கையெல்லாம்  
குடித்துவிட்டு நாள் முழுதும் என்னை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது.

உன் அழகு தாக்கிய குளியலறை
கதறுகிறது கடவுளிடம் என்னை ஏன்
கல்லாய் படைத்தாய் என்று.

தீ குளித்தால் தானே தங்கம்
அழகாய் மாறும் நீ எப்படி
நீர் குளித்து விட்டு அழகாய் வருகிறாய்??!!

பொதிகையிலிருந்து புறப்படும்
தென்றல் என்பதெல்லாம் பொய் ;
குளித்து விட்டு நீ முடி உலர்த்தும்
சாரலில்லிருந்து புறப்படும் என்பதே மெய்.

நீ குளித்த நீரில்-ஒரு
குவளை கொடு
கூவத்தை சுத்தம் செய்து  விடுகிறேன்.

குளித்துவிட்டு போன உன்னை;
மீண்டும் அழுக்காக்க சொல்லி
என்மேல் கரைகிறது-உன்
வாசம் பூசிக்கொண்ட சோப்பு கட்டி

சுதந்திர தினம்

ருத்ரன்
ஒவ்வொரு வீட்டிலும் கொடியேற்றம்
நடக்கின்ற நாள் வரும்
சுதந்திர தினம் வெறும் நாளல்ல
திருநாளை கொண்டாடுவோம்

இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம்
சுதந்திர தியாகம் எல்லாம்
பாடமானது போதாது
மனபாடம் ஆக வேண்டும்

நம் நெஞ்சில் சுமப்பது வெறும் கொடியல்ல
நம் தேசிய கொடியும் தொப்புள் கோடி பந்தமடா
இந்தியன் என்ற பெருமை எல்லோருக்கும்
சொந்தமடா

கவிதை "போல"

பாண்டூ
 
 
 
 

 
குழந்தை அழும் !
அழுவதால் நீ
குழந்தையாக முடியாது !
பூ புன்னகைக்கும் !
புன்னகைப்பதால் நீ
பூவாக முடியாது !
காற்று தழுவும் !
தழுவுவதால் நீ
காற்றாக முடியாது !
நதி ஓடும் !
ஓடுவதால் நீ
நதியாக முடியாது !
மழைத்துளி விழும் !
விழுவதால் நீ
மழைத்துளியாக முடியாது !
வானவில் வளையும் !
வளைவதால் நீ
வானவில்லாக முடியாது !
கம்பன் கவிசெய்தான் !
கவிசெய்வதால் நீ
கம்பனாக முடியாது !
மாதிரியின் முகமூடியில்
தன் முகவரி இழந்தவனே !
நில்!
சூரியன் தனை உள்வாங்கித்
தன் சுயம் இழக்காத
நிலவைப் பார் !
கவனி !
மாதிரியைப் படி
அதன் மாதிரி நீ
ஆகிவிடாதபடி !
செல் !
மாதிரியைத் தொடர்ந்து அல்ல !
மாதிரியின் பாதைகளில்
தொடர்ந்து...
போலச் செய்து
போலியாகி விடாதே !
மாதிரி
சூரிய ஒளிகீற்றுகள் தான் !
அதில்
உன் சுயமெனும்
கண்களை இழந்துவிடாதே !
மாதிரியை
உன் தோளில் வை !
மாதிரியின் தோளில்
நீ சவாரி செய்யாதே !
ஏனென்றால்
உன் சுவடுகள்
தெரியாமல் போய்விடும்

இயற்கை எழில்

அரிமா இளங்கண்ணன்
கண்டோர் வியப்படையக் கார்மேகக் கூட்டங்கள்
கர்ப்ப மழையைத் தாங்கிடும்
கானமயி லதுகண்டு தோகைவிரித் தாடிமிகக்
களிப்புடன் துணை தேடிடும்

பண்டே திருப்பாவை பகர்ந்ததுபோல் இடி மின்னல்
பாதாளம் வரை பாய்ந்திடும்
பயிர்பச்சை நெல்வகைகள் பாங்காய் விளைதற்குப்
பருவமழை தான் பொழிந்திடும்

நண்டோ வளைதேடும் நாலைந்து குஞ்சுடனே
நா நீண்ட தவளை கத்தும்
நறுமண மலர் சூடிக் கலப்புமணம் செய்ய
நாடும் வண்ணப் பூச்சிகள்

வண்டோங்கு செங்கமல வாவியின் தென்றலோ
வருடிடும் மயிலிறகு போல்
வண்ணமிகு காட்சியாம் இயற்கைஎழில் சொற்களால்
வருணிக்க வியலாது காண்

எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம்

மு மேத்தா
 காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே
இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயலென்று
புரிய வைப்போம்.

ஞாபக முட்கள்
காயங்களைச் சுற்றி
வட்டமிடும்
என் ஏகாந்தத்தின்
இதயத் துடிப்பாக,
பிரிந்து சென்ற உன்
காலடி ஓசை.........

வெற்றி
உன்னை
அடுத்தவர்களுக்கெல்லாம்
அறிமுகப்படுத்தும் !

தோல்வியோ
உன்னையே உனக்குள்
ஒரு முகப்படுத்தும்
நிரந்தரமான வெற்றிக்காக
உன்னை தழுவிக் கொள்ளும்
தற்காலிகத் தோல்விகளை நீ
தாங்கிக் கொள் !

குவிந்த பிணங்களை
குழி தோண்டிப் புதைக்க
அல்லது
கொளுத்தி முடிக்க
அவகாசம் வேண்டாமா ?
அதற்காகத்தான்
ஒரு வாரம்
போர் நிறுத்தம் !

கடந்த கால செருப்புகளைக்
கழற்றி எறிவோம்;
எதிர்காலத்திற்கான
சிறகுகளைச் சேகரிப்போம்

மாலை

சுமதி ரூபன்
கூட்டத்தின் நடுவே
கழுத்தோடு கைகொழுவி
முதுகோடு முகம் சாய்த்து
மோகித் துவழ
மெல்லக் கை விலக்கி
வெகுதுாரம்
அகன்று
விழி
தவிர்த்து
பல மணிகள்
வீணே தொலைய

கனக்கும் நெஞ்சை
வாஞ்சையுடன் கடிந்து
கண்ணீர் துளியை
வரிந்து உள்ளடக்கி
துாரப்புள்ளியாய்
உன் உருவம்
தேடி
களைத்து
வெறுமனே விழ

இன்னுமொரு மாலையில்
உன் மேல் பொதியான
காதுக்குள்
முணுமுணுத்தாய்
'வீணாய் எதற்காக ?
அவலாய் அரைபடுவோம் '

நலமுள்ள நட்பு

ராஜி
கோபம் மறைந்தால் கண்கள் சிறுக்கும்,
சோகம் அடக்கினால் சஞ்சலமாக இருக்கும்,
வெகுளியாகப் பேசினால், வம்பளந்ததாகத் தோன்றும்,
இகுளையாக இருந்தால், அபூர்வமாக தெரியும்,

உன்னுடன் பழகும்முறை எனக்குச் சொல்லுவையோ ?
என்னுடைய எண்ணம் உண்மையாகத் தெரியலையோ ?

தோழமை நேர்மையாக, தயங்காமல் வாழவேண்டும்,
பொழுதெல்லாம் பயமில்லாமல், மலரவேண்டும்,
மனிதருடைய கருத்து மரியாதையாய் சொல்லவேண்டும்,
சிநேகிதருடைய அபிப்பிராயம் கேட்க வேண்டும்,

பலமுள்ள வாழ்வு பரிசாக வருமோ ?
நலமுள்ள நட்பு நமக்குத் தருமோ ?
- ராஜி (நன்றி : திண்ணை)

பட்டம் ஒன்னும் பெரிசில்ல

தமிழீழநாதன்
அம்மா அப்பா ...

எனக்காக என்னோடு
விடிய விடிய
விழித்திருந்த எங்க ஊரு
தெருவிளக்கு.

மொத்த வெயிலையும்
முழுசாகத் தாங்கிக் கொண்டு
எனக்காக நிழல் கொடுத்த
எங்க ஊரு ஆலமரம்.

கத்திப் படிச்சதால
களைப்பு வந்த நேரத்தில
அழுக்குத் தண்ணி என்றாலும்
அன்போடு கொடுத்த
எங்க ஊரு ஊரணி.

பன்னிரு வருடமாக
பத்திரமா பள்ளி செல்ல
பாதை தந்த குளத்துக்கரை.

மதிய உணவுக்கு
மல்லுகட்டி நின்னு
ஒத்த முட்டைக்காக
ஒருவாரம் காத்துருந்த
எடுத்தாலும் குரையாத
ஆயாவின் ஆப்பைக்கு.

”இத்தனை பிள்ளையில
எவனும் படிக்கவில்லை
எப்பாடு பட்டாவுது
இவன படிக்கவையி”
ஊர்காரங்க சொன்ன
ஒத்த வார்த்தை.

வயிருக்கும் வாயிக்குமே
வாழ்க்கையை தொலைச்சுபுட்டு
வயலும் வரப்புமே
தலையெழுத்து என்றிருக்க
கல்வியின் முதழெழுத்து
கற்றுதந்த
பள்ளிகூட வத்தியார்கள்.

பெளவுர்ணமி இரவு
பகல் சூரியன் எதுவானாலும்
மறுக்காமல் அனுமதிக்கும்
கூரைவீட்டு ஒட்டை.

அடைமழை காலத்துல
அடிக்கிற மழையில
கூரைதண்ணி பட்டு
கிழிந்திட கூடாதென்று
அடிவயிற்றில்
அடைகாத்த
அத்தனை புத்தகத்திற்க்கும்.


வெளையாட்டு
வெளையாட்டு என்று
வெட்டிதனம் செஞ்சாலும்
என்னையும் ஆளாக்கிய
எங்க ஊரு பள்ளிகூடம்.

இத்தனைக்கும் என்னால
செய்ய முடிஞ்சது
இவளவுதான்.

இது ஒன்னும்
பெரிசில்ல
அப்பா உழைப்போட….
அம்மா தியாகத்தோட

காதல் அல்ல

வீரமுத்ரன்
எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்

ஏதோ ஒரு பறவை

உமா மகேஸ்வரி
வாளிக்குப்பையைக் கொட்ட
வாசல்தாண்டியபோது,
பறத்தலினின்று நழுவி
எருக்கங்செடியில் இருந்தது
பார்த்தேயிராத ஒரு பறவை

விசிறி மடிப்பு பாவாடை நலுங்காது
கொசுவி அமர்ந்த சிறுமியின்
தோற்ற ஒழுங்கிலிருக்கும் சிறகுகள்

அவை-

நீலத்தோடு நிறங்கள் தோய்ந்த
மாலை வானை நறுக்கி வார்த்தவை
உருளாத விழிகளோ
உயிரற்ற பகல் நட்சத்திரங்கள்

ஏராள மரங்கள் தவிர்த்து
எருக்கைத் தேர்ந்தது
ஏனோ தெரியவில்லை
களைப்பின் சாயலில்லா
கம்பீர அலட்சியம்

இறகுகள் கோதி
விரல் வழி பிரியம் செலுத்த
விருப்பூட்டும் என்னுள்
ஆனாலதன் பாராமுகத்தால்
ஆதங்கம் சுடும்

கையிலோ குப்பை கனக்கும்
கதவு திறந்த வீட்டில் காரியங்கள் இருக்கும்

ஓசையற்று குப்பை சிரித்தாலும்
உலுக்கிப் பறக்கும் அது-

ஒரு முறையேனும் குரலைக் காட்டாமல்;
வண்ண அம்புபோல்,
வாய்க்காத கனவைப்போல்,
இன்னும் அனுபவித்திராத
இனிமையின் இறுதி விளிம்பைப்போல்