தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கிராமத்து மாமன்

மலர்
கல் ஒன்னு தடுக்கி....
கால் இரண்டும் இடறி....
மண்ணு மேல விழுந்தாலும்
மீசையில ஒட்டாம....
மார் தட்டி கொள்ளும்
மானமுள்ள பயலுங்க
பலர் உண்டு எம் ஊரில்!
வளம் கொண்டு வாழுகையில்...!

"கஞ்சி கலவை கையில எடுத்து
கறவை மேய்க்கும் மாமனுக்கு
காய்ச்சி கொண்டு போ புள்ளே..."
திண்ணையில தூங்கற கிழவி
அங்க வந்து கூவ....

ஏறவில்லை நெஞ்சிலே
ஏக்கமின்னும் தீரலே!

ஏட்டுக் கல்வி படிக்க போன
பட்டணத்து சேர்க்கையில

பாடம் படித்ததென்னவோ!
பட்டு போனது உண்மையோ?

கசங்கி போன பூவுக்கு
இனி வாசம் எங்கும் சேரலே!
கட்டி கத்த மானமெல்லாம்
காஞ்சி போச்சு சருகுல!

அரளி விதைய அரைச்சு குடிச்சு - சவ
அடக்கம் ஆக போனவ...

மாமன் வழி மறிக்கையிலே
மரிச்சு போச்சு துக்கம் தான்!
மணமும் சேர வெட்கம் தான்!

தாலி கட்டி தாயும் சேயும்
தத்தெடுத்தான் மாமன் தான்!

கவரி மான் பரம்பரை - இவன்
கிராமத்துல பொறந்தவன்

முடிந்துபோன மாலைப்பொழுது

பா.அகிலன்
பார்க்கிறோம்,
விழி கொள்ளாத் துயரம்
உதடுகள் துடிக்கின்றன
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும்
காற்றள்ளப் போய்த் தொலைகிறது...
நேற்று
சணற்காட்டில் மஞ்சள் மௌனம்,
இன்று
கண்களில் நீர்
போகிறாய்
மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன்

பிரச்சனை

ஞானக்கூத்தன்
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.- 

இலை

வைரமுத்து
நிறைந்த வாழ்வு என் வாழ்வு

நான் குளித்த மிச்சத்தில்
பூமி குளித்தது

சூரியக்கீற்று
என்னைத் தொட்ட பிறகுதான்
மண்ணைத் தொட்டது

பகலில் நான் விட்ட மூச்சில்
பாழ்பட்ட காற்று
பத்தினியானது

இந்த மரத்தில் நான்
எடுத்தது பகுதி
கொடுத்தது மிகுதி

என் வாழ்விலும்
சாயம் போகாத சம்பவங்கள்
இரண்டுண்டு

அடையாளம் தெரியாத புயலொன்று
தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
அந்த ராட்சச ராத்திரியும் -
பூவில் வண்டு
கலந்த காட்சி கண்டு
பக்கத்து இலை கொண்டு
முகம் மூடிக்கொண்டேனே
அந்த மன்மதப் பகலும்.

ஒருநாள்
ஒண்டவந்த ஒரு பறவை
கிண்டியது என்னை

"மலராய் ஜனிக்காமல்
கனியாய்ப் பிறக்காமல்
இவ்வடிவு கொண்டதெண்ணி
என்றேனும் அழுதாயோ
ஏழை இலையே!"

காற்றின் துணையோடு
கலகலவென்று சிரித்தேன்

"நல்லவேளை
நான் மலரில்லை

தேனீக்கள் என்கற்பைத்
திருடுகின்ற தொல்லையில்லை

நல்ல வேளை
நான் கனியில்லை

கிளிக்கூட்டம் என் தேகம்
கிழிக்கின்ற துன்பமில்லை

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்"

அதோ அதோ
வாயு வடிவில்
வருகுதென் மரணம்

இதோ இதோ
பூமியை நோக்கி
விழுகுதென் சடலம்

வழிவிடு வழிவிடு
வண்ணத்துப் பூச்சியே

விலகிடு விலகிடு
விட்டில் கூட்டமே

நன்றி மரணமே
நன்றி

வாழ்வுதராத வரமொன்றை
வழங்க வந்தாய் எனக்கு

பிறந்த நாள் முதல்
பிரிந்திருந்த தாய்மண்ணை
முதன்முதல் முதன்முதல்
முத்தமிடப் போகிறேன்

வந்துவிட்டேன் தாயே
வந்துவிட்டேன்

தழுவிக்கொள் என்னைத்
தழுவிக்கொள்

ஆகா
சுகம்
அத்வைதம்

வருந்தாதே விருட்சமே

இது முடிவில்லை
இன்னொரு தொடக்கம்

வாழ்வு ஒரு சக்கரம்
மரணம் அதன் ஆரம்
சக்கரம் சுற்றும்

கிளைக்கு மறுபடியும்
வேறு வடிவில் உன்
வேர்வழி வருவேன்

எங்கே
எனக்காக ஒருமுறை
எல்லா இலைகளையும்
கைதட்டச் சொல்

திறக்காத கதவு

லிவிங் ஸ்மைல் வித்யா
மயானம்
தனித்தன்மையது
அகால அமைதியினாலும்
அதன் தத்துவ இயல்பினாலும்
வன்மம் தாங்கும் கோயில்களின்
கதவுகள் திறப்பதும்
பிறப்பதும் இல்லை
ஒரு மயானத்தின்
தேவை
என் கதவிற்கு
என்றென்றைக்கும் இல்லை

- லிவிங் ஸ்மைல் வித்யா
(http://livingsmile.blogspot.com/2007/06/blog-post.html)

இறைவனின் இணைப்பு

காயத்ரி பாலாஜி
அம்மா...
உன் அரவணைப்பு,
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட
இடைபுக முடியா
உன் அருகாமை,
என் சுவர்க்கம்!


நான்
உருவாய் வளர
உன் உடல் தந்தாய்.
உணவாய்,
உன் உதிரம் தந்தாய்.
என் உலகமாய்,
நீயாகினாய்.
நானாகவே, இங்கு...
நீ மாறினாய்!

மொழி அறியா நான்
உன் பேச்சில்
மயங்குகிறேன்.
உன் ஒவ்வொரு
அசைவிலும்
உன்னை உணர்கிறேன்!

உனக்கும் எனக்கும்
உறவையும்
தாண்டிய
ஓர் உன்னதப் பிணைப்பு!
இது
தாய் சேய் என்னும்
இறைவனின் இணைப்பு

மௌனமாக பேசுகிறேன்

இதயவன்
கொஞ்சம் நேரம்
பேசுவாளா  என்று
என் மனம் துடிக்கிறது
ஆனால்...
அவள் மௌனமாகவே
இருந்து என்னை
ஊமை ஆக்கி விட்டாள்
நானும் மௌனமாகவே
பேசுகிறேன் அவளுடன்

மழைத்தவம்

ப.மதியழகன்
எங்கே சென்றாய் மழையே
இங்கே எங்களை தவிக்கவிட்டுவிட்டு
எங்கே சென்றாய் மழையே
காற்றே கருணை கொள்
கார்மேகத்தைக் கடத்தி வந்து
இந்த ஊருக்கு மேலே நிறுத்திவிடு
வருண பகவானே
மரங்களெல்லாம் இலையுதிர்த்து
நிற்பதைப் பார்
தளிர்க்கச் செய்ய
தாராளமாய் தண்ணீர் பாய்ச்சு
உன்னை வரவழைக்க
கழுதைக்கு கல்யாணம்
உன்னை உருக வைக்க
இசை மேதைகளின்
இன்னிசை கானம்
மழை மகளே புவியரசன்
உன் மீது மையல் கொண்டு
தவிப்பதைப் பார்
முத்தமிட்டு சங்கதி பேச
உன்னை அழைப்பதைப் பார்
ஆனந்த வெள்ளத்தில்
நீ மிதக்கும் வேளையில்
அருவியாய் நிலத்தின் மீது
நீரை ஊற்று
மழை தேவதையே
உன் சிறகிரண்டையும் ஒடித்து விட்டனரா
உன்னைத் தனிமைச் சிறையில்
அடைத்துவிட்டனரா
பயிர் செழிக்க உயிர் தழைக்க
மனது வை மழையே
விண்ணோடு எங்களால்
சண்டையிட முடியாது
வீண் பேச்சு கதைக்குதவாது
வானம்பாடி கானம் பாடி
வசந்தத்தை அழைப்பது போல்
நாமெல்லாரும் அழைத்திடலாம்
காற்றில் மண்வாசம் வருது பாருங்கள்
கிழக்கு திசை கறுக்கத் தொடங்குது பாருங்கள்
மழைதேவியே
வெயில் அரக்கனை சம்ஹாரம்
செய்து கொண்டிருக்கின்றாயா
உயிர்களுக்கு வரமருள
துணிந்து விட்டாயா
உனது வருகைக்கு இடியோசை
கட்டியம் கூறுகிறதே
மழைத்தாயின் மனதில்
ஈரம் இருக்கிறது
சற்று அண்ணாந்து
வானைப் பாருங்கள்
மின்னல் கண்ணைப் பறிக்கின்றது

உயிரின் தேடல்

புதியமாதவி
நானில்லாத நாட்களில்
என் தெருவில்
எதைத் தேடி
உன் உயிர்
கையில் வீளக்குடன்
கால்வலிக்க நடக்கிறது?

பூட்டியக் கதவுகள்
உடைந்த சன்னல் கண்ணாடிகள்
து£சி அடைந்த முற்றம்
எப்போதோ நான் வரைந்த
செம்மண் கோலம்
உடைந்த திண்ணை
உயரமாய் வளர்ந்த தென்னை
இன்னும் அறுந்து விழாமல்
காற்றில் ஆடும் ஊஞ்சல்..

தேடிப்பார்..
இதில் எங்காவது
ஒளிந்துகொண்டிருக்கும்
உனக்கான என் அடையாளம்

உன் கூந்தல்

ஆனந்தன்
முகத்தின் ஒளியில் கருகியதுதான் - உன்
கூந்தலோ!

அதன் கருமை கண்ட
அந்த அண்டங் காக்கைக்கும்
ஆனந்தம்!

தனக்கொன்று இல்லை என்று
தனக்குள் வருந்திய நிலவின்
தாக்கம் எனக்கு மட்டும்
தெரியும்!

கார்கால மேகமென கண்ட
கானகத்து மயிலும்
கொண்டை உயர்த்தி
தோகை விரிக்கக்
கண்டேன்!

தமிழ் கரைக் கண்ட
நக்கீரனுக்கு - நீ
முன்னோளாகி இருந்தால்
கூந்தலில் மணம்
உண்டோ என்ற வாதம்
வந்திருக்குமோ ?

உன்னை படைத்த
உன்னத பிரம்மனுக்கு,
உன் முகம் என்னும்
உல்லாச நிலவுக்கும்
உலகமெனும் உருண்டைக்கும்
கூந்தலெனும் உறவு வைக்க
ஆசை!

சன்னலோரத் தென்றலில்
சின்னதாய் அசையும்
உன் கூந்தல் கண்டு
மெல்லிய கொடியிலாடும்
மலர்ந்த மல்லிகைக்கும்
உன் கூந்தலேறி
ஊஞ்சல் ஆட
ஆசை