தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காந்தி பிறந்த நாடு

கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்
 
மீண்டும் மீண்டும்
தொடந்து கொண்டுதானிருக்கின்றன
நச்சுச் சாராய சாவுகள்!
மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
விதவை அநாதைகளின் பெருக்கம்!
மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
உறவு நட்புகளின் ஒப்பாரி!
நின்று கொல்லும் நஞ்சு- மது!
நிறுத்தாமல் குடித்தாதால்
இன்று கொன்றிருக்கிறது நச்சுச் சாராயம்!
கொலைகள் கொள்ளைகள்
விலையேற்றம் பணவீக்கமென
அனைத்தும் வளர்பிறையாய்....!
அனைத்துத் துறைகளிலுமே
வேகமாய் முன்னேறி வருகிறது
நம் நாடு!
சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில்
முழுகவனத்துடன்....
காவல்துறை!
சூடான பரபரப்பான
செய்திகளின் தேடலில்....
ஊடகங்கள்!
கேள்வி கண்டனக் கணைகளை
வீசுவதில்... சலிப்படையாத
எதிர்க்கட்சிகள்!
ஆர்ப்பாடமின்றி அகிம்சைவழியில்
கோலொச்சிக் கொண்டிருக்கிறது
நம் அரசு!
காந்தி பிறந்த நாட்டில்
நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
பெருமையுடன்....
 

யதார்த்தம்

இலங்கைப் பெண்
காய்ந்த சருகுகளுக்கு நடுவில்
துளிர் விட்ட
சின்னத் தளிர் போல
மண்ணில் மனிதம்
மரணிக்க காத்திருக்கின்றது

நடுக்காட்டில்
தனித்து நிற்கும்
ஒற்றை ரோஜா
காற்றின் தாக்குதல்
தாங்க முடியாமல்
தவிப்பது போல
சில உணர்வுகள்
உயிரைக் கொல்கின்றன

மௌன வலிகள்
புரிந்துணர்வெனும்
மருந்தில்லாமல்
துவண்டு போகின்றன

இத்தனைக்கு மத்தியிலும்
ஈரமாய் ஒரு
இளமொட்டு
நம்பிக்கையோடு
இதழ் விரிக்கின்றது
இது தான் யதார்த்தம்
 

பச்சை நெருப்பு

ஈரோடு தமிழன்பன்
மரத்திடமிருந்து
என்ன இரகசியங்களைக்
காற்று கைப்பற்றியது
இந்த
அதிரடிச் சோதனையால்?

வேர்கள்
வெளியிட்டிருக்கும்
அவசர அறிக்கை
தெரிவிப்பதென்ன?

உச்சிவரையில்
பற்றி எரிகிறது
பச்சை நெருப்பு! அதை
உச்சரிக்கும்
எனது ஓசை மீதும்
பற்றிவிட்டது.

பூக்களே இல்லை...
எல்லாம் உதிர்ந்து விட்டன
என் கவிதை மடியில்...
சந்தேகம் இருந்தால்
இந்த வாக்கியங்கள் பக்கம்
உங்கள்
மூக்கை அனுப்பலாம்!

வரம் கேட்டு
நீளும் கிளைக்கரங்களில்
இயற்கை,
என்னையே சில
மழைத்துளிகளாய்
மாற்றிக் கொடுக்கட்டும்
எனக்குச் சம்மதம்!

ஓடி வந்த காற்று,
மரத்தின்
உள்ளங்கையை நீவிவிட்டு
ரேகை பார்க்கிறதோ?

மரத்தின் படம் அல்ல
இது;
மரத்தின் மடியில் உட்கார்ந்து
காற்று
எடுத்துக்கொண்ட படம்

உன்னை அலங்கரிக்கிறது என் மரணம்

கவிதை வீதி சௌந்தர்
ஈவு இறக்கமற்று என்னை பறித்துச்
சூடிக் கொண்டவளே!

இந்நேரம்
என் காம்பின்  கண்ணீரைப்
பக்கத்து பூக்கள் துடைத்திருக்கும்.

அழுது கொண்டிருக்கும்
என்னை தாங்கிய காம்புகளுக்கு
ஆறுதல் சொல்லியிருக்கும்
அரும்புகள்...

வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...

தலைகோத வந்து
நான் இல்லாத இடத்தை தடவிப்பார்த்து
தவித்திருக்கும் தென்றல்.

வெடுக்கென்று பறித்த
உன் விரல்களுக்கு தெரியாது
என் வலி!

வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்

உலகம் எங்கே செல்கிறது?

நிலவன்
 உலகம் எங்கே செல்கிறது ?எத்துணை வளர்ச்சிகள்?
எத்துணை மாற்றங்கள்?

ஆயினும்
வன்முறை மட்டும்
வாழ்வாங்கு வாழ்ந்து - ஏனோ
வதைக்கிறது நம்மனத்தை !

நெருங்கிய உறவுமில்லை !
அறிந்த நபருமில்லை !
அழும்மொழி எதுவும் புரிவதுமில்லை
இருப்பினும் இத்யத்தில்
இரும்படித்தாற் போல் வலி..

உலகெங்கும் போராட்டம்
உரிமைக்காக உயிரோட்டம்
அரசே நடத்தும் அநியாயம்
அரங்கேறும் களேபரம்

வழிகின்ற குருதி
வலியோடு கதறல்
நைந்து போன தலை
குண்டு பாய்ந்த தேகம்
குலைந்து போன பாகம்
அரை உயிர்கொண்டு
அதிர்ச்சியில் ஆன்மாக்கள்
வாழ்வே வன்மையாய்
வலிகள் கொடூரமாய்.!

உலகம் எங்கே செல்கிறது
உயிர்களையெல்லாம் உதிர்த்து விட்டு ?

தாய்மையின் விளக்கம் உன்னிடமே

கா.ந.கல்யாணசுந்தரம்
ஒளிதரும் மெழுகின் உன்னதமே - எங்கள்
பாச உணர்வின் உறைவிடமே!
அறுசுவை உணவின் பிறப்பிடமே-நல்ல
தாய்மையின் விளக்கம் உன்னிடமே!

கருவை சுமந்த நாள் முதலே-உன்
உருவம் காண துடித்திருந்தேன்!
பனிக்குடம் உடைத்து பிறப்பித்தாய்-நல்ல
தாய்மொழி அறிய கற்பித்தாய்!

நெஞ்சில் பதிந்த கல்வெட்டு - உந்தன்
நேசம் பொதிந்த தாலாட்டு!
இறைவனை நினைத்துப் பார்த்ததில்லை -உன்
இணையடி நிகர்க்கு ஏதுமில்லை

ஆயிரம் மழைத் துளி

கீத்ஸ்
தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!
உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……
மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வழிகின்றது

ஆகாச வாணி

சுபத்ரா
எந்த ஊருக்கு ?
எங்கே வீடு தேடுகிறீர்கள் ?
எப்பொழுது பால் காய்ச்சுவீர்கள்?
குழந்தையை பற்றி..
எப்போது பெற திட்டம் ?
என்ன பெயர் வைப்பாய்?
எதிர்காலம் ,நிகழ்காலம் சார்ந்த
ஏன் ?
எதற்கு?
எப்படி?
எப்போது?

இதனால் சகலமானவர்களுக்கும்
சொல்லி கொள்வது என்னவென்றால்
உங்கள் கேள்விகளே தான் எனக்கும்
பதில் மட்டுமே என்னிடமில்லை

அடுப்பை தாண்டி
படிப்பெய்தி நின்ற போதும்
காற்று வர சன்னலை திறந்த கருணை
கைதிக்கு கை விலங்கு கழற்ற உதவவில்லை

எதுவாயினும்
என் பங்களிப்பு பெரும் பாதிதான்
ஆனாலும்
ஆலோசனை கூட்டமில்லாத அரசாங்கத்தில்
அறிவிப்புக்கு காத்திருக்கும்
பெண் ஜாதி நான்...

அன்றாட முடிவுகள் அத்தனையும்
என் வீட்டு
ஆகாச வாணியில் செய்திகளாய்...
அடுத்தவர் அறியுமுன்
அதிகாரபூர்வமாய் தெரிந்து சொல்ல...

எப்போதாவது ...
நேயர் விருப்பமென
நிரம்பி நிற்கும்
என் வேண்டுகோள்கள் படிக்கப்படும்
அழுகிற குழந்தைக்கான
அவசர சமாதானமாய்
உள்ளந் தேற்றி கொள்ள
உள் நினைவை ஏமாற்றி கொள்ள
உலகறிந்த பெரும்பான்மை பொய்களில் ஒன்று
பெருந்தன்மையோடு பரிசளிக்கப்படும்

அக்கரைப் பச்சை

மாயாண்டி சந்திரசேகரன்
சக்கரை வாழ்க்கையெண்ணி அக்கரைசெல்வர்
சக்கர வாழ்க்கை இதுவெனப் புரிந்து கொள்வர்
வறுமையை வெல்ல வாடிகனும் செல்வர்
வெறுமையை வெல்ல இதுவல்ல வழியென உணர்ந்து கொள்வர்

வறுமையின் கருமை வெந்து சாம்பலாகக் கூடும்
வாழ்வில் வெறுமையோ செந்தீயாய் தினம் எரியும்
சொத்தும் கிடைக்கும் பத்தும் கிடைக்கும்
சொகுசான வீடு கார் எனப் பல கிடைக்கும்
எல்லாம் கிடைத்தது போல ஊருக்குத் தெரியும்
உள்ளில் மெழுகாய் உருகுவது யாருக்குப் புரியும்?

சுகம் தொலைத்து நித்தம் முகம் தொலைத்து
அகம் நனைத்து சொந்தம் தினம் நினைத்து
வேதனையாய்க் கழியுது வாழ்க்கை இங்கு!

வேரை மறந்து ஊரை மறந்து
உற்றார் உறவினர் சுற்றம் மறந்து
பற்றில்லாமல் கிடைக்குது பல வெள்ளிப் பணம்
கொள்ளியாய் மாறி நித்தம் கொல்வது யார்க்கு புரியும்?

சொர்க்கத்திலும் சோகம் உண்டு
நரகத்திலும் சில இன்பம் உண்டு
தங்கத்திற்கும் சில குறைகள் உண்டு
தகரத்திற்கும் நல் குணங்கள் உண்டு

தலைமுறையை மாற்றிக் கொள்ள
தள்ளிச் செல்வதில் தப்பேதும் இல்லை
நடைமுறை இதுவெனப் புரிந்து கொண்டால் - நெஞ்சில்
அடைமழைக் காலமும் விடுமுறை எடுத்து கொள்ளும்.

அக்கறையாய் வாழ்வை அமைத்துக் கொண்டால்
எக்குறையும் சற்று எட்டியே நிற்கும்
இக்கரையோ அக்கரையோ
எக்கரையும் சக்கரையாய் இனிதே கரையும்

வாழ்வியல் உணருவோம்

தமிழீழநாதன்
காற்றில் கரையும்
இலையின் பனித்துளி போல்
இந்த வருடமும்
இனிதாய் நகர்ந்தது

சுயநலத்தில் கரையும் மனிதநேயம்
சொந்தங்களுக்காக வாழும்
இரவல் வாழ்க்கை...

மனசுக்கும் செயலுக்கும் இடையே
செயற்க்கையாக
செய்யப் பட்ட
நாகரீக மதில்சுவர் – இவைகளின் மத்தியில்
இந்த வருடமும்
இனிதாய் நகர்ந்தது ...

ஏழையின் வயிற்று பசி போக்காத
இறை வழிபாடு...
மனிததுவம் வளர்க்காத
மானிட வளர்ச்ச்சி...
அகம் மறை(ரு)க்கும்
அறிவியல் வளர்ச்சி...

பூவின் இதழினை ரசிக்க
புள்வெளி பனித்துளி ருசிக்க
அம்மாவின் அன்பில் மயங்க
மனித வாழ்வின்
உன்னதம் உணர
இடமளிக்காத அவசர உலகில்
இந்த வருடமும்
இனிதாய் நகர்ந்தது ...

மனதை ரணமாக்கும்
கெளரவ கொலைகள்...
கண்ணெதிரே மறையும்
தமிழனின் கலைகள்...

அபாயமோ அநியாயமோ
எதுவானாலும் வாய்மூடி பயணிக்கும்
வாழதெரிந்த ஊமைகள்- என
அனைத்து மட்டத்திலும்
இந்த வருடமும்
இனிதாய் நகர்ந்தது ...

அறிவியல் வளர்ச்சியில்
நெற்றி பொட்டளவு
சுருங்கிப் போன உலகு...
மறந்து போன மனிதநேயம்..

ஒரு கிராமத்து கிழவியின்
சுறுக்குப்பையாக
சுறுங்கிப் போன
மனித மனம்...

அத்தி பூத்தாற்ப்போல்
எப்போதாவது வெளிப்படும்
ஏழையின் புன்னகை...

அந்த ரட்சகனின் வருகைக்காக
காத்திருக்கும் பக்தனைப்போல்
மணவிழாவிற்க்கு காத்திருக்கும்
முதிர்கன்னிகள்...

இவையெல்லாம்
இன்பமாய் மாற(ற்ற)

வரும் புத்தாண்டை
வணக்கத்தோடு
வரவேற்ப்போம்
வரும் வருடத்திலாவது
வாழ்வியல் உணருவோம்