தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சில முற்றுப் புள்ளிகள்

சேவியர்
முடிவுகள் இல்லாத
முடிவு தேடும்
பயணத்தில் நான்.

சாலைகளின் மீதான
பயணமும்,
சேலைகளின் மீதான
சலனமும்,

பக்கங்களைத் தாண்டி ஓடும்
வாக்கியங்களும்,
வாழ்க்கையில் தங்கி விடும்
பாக்கியங்களும்,

எல்லாம்
ஏதோ ஓர்
முற்றுப் புள்ளி முனையில்
அறையப்பட்டு
இறந்து போகின்றன.

சிரிப்புகளின் நுனிகளோ,
இல்லையேல்
கசப்பின் கனிகளோ,
எதுவுமே
எல்லைகளற்ற எல்லையை
கொள்கையாய் கொண்டதில்லை.

இன்னும் சிலநாள்
இருக்காதா எனும்
ஆசைக் கனவுகளை
வெளிச்சம் வந்து இழுத்துச்
செல்வது இயற்கை தானே !

முடிவு
முடிவு தான்.
தூண்டிலில் சிக்கிய மீன்
மீண்டும் ஒருமுறை
நீந்த முடிவதில்லை.

முடிவு
ஆரம்பம் தான்...
தூண்டில் மீனின் மரணம்
ஆகார தேவையின்
ஆதாரமாய் விடிவதுண்டு.

முற்றுப் புள்ளிகள்
முற்றுப் பெறுவதில்லை என்பதும்
முற்றுப் பெறாதவற்றிற்கு
முற்றுப் புள்ளிகளே
இல்லை என்பதும்
இலக்கணங்களில் இல்லை.

ஆனாலும்
சில
இடம் மாறிய புள்ளிகள்
கோலத்தின் தூண்கள் போல
வரவேற்புக் கம்பளம்
விரிப்பதுமுண்டு.

நானும் ஆசைப்படுகிறேன்,
முற்றுப் புள்ளியை
மையப்புள்ளியாக்கிய
ஓர்
வட்டமாய் வாழ

அவளும்... அவர்களும்

மன்னார் அமுதன்
என்றோ….
எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும்
பிச்சைக்காரி
“பாவம்,
தின்னட்டும்”
குரல் கொடுக்கும்
கனவான்கள்

உண்டதைத் தின்று
மீந்ததை ஈந்து
சில நாய்களோடு
சொந்தம் சேர்வாள்

நன்றிப் பெருக்கால்
நாய்களும் பின்ச்செலும்

இருளைப் போர்த்தியவள்
உறங்கும் இரவுகளில்
நாய்கள் துணை தேடித்
தெருவிற்குள் செல்லும்

குப்பை மேட்டில்
வெறித்த கண்களால்
அவள் கிழிந்த உடைகளுள்
எதையோ தின்று கொண்டிருப்பான்
இலை வீசியவனும் …
குரல் கொடுத்தவனும்

முதிர் இளைஞா

சு.மு.அகமது
இருளடர்ந்த அறையின்
வெக்கை பிதுக்கும் தருணங்களில்
கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய்
பாரம் சுமக்கும் மனது

வலியின் உள்வெளியில்
சிரையாய் புடைத்த நினைவு
நிமிரா நாயின் சுருண்ட வாலாய்
மரவட்டையின் கணக்கற்ற கால்களின் நீட்சியாய்

யதார்த்த பரிமாற்றத்தின் பகிர்ந்தளிப்பு
நுகர்ந்து செறிக்கும் நிலைமாற்றம்
உணர்ந்து திளைக்கும் பொழுதில்
அருகாமையில் புணரலின் புதுமொழி

வெளிச்சப்பரவுதலில் மிரண்ட
பிணைந்த பல்லிகளின் கண்களில் காமத்தின் மிச்சம்

அனிச்சையாய் கைகள் துழாவ
விளக்கின் உமிழ்தலாய் பரவுகிறது
உணர்வுகளுக்கான வடிகால்
கறுமை விரட்டும் வெண்பட்சியாய்

மரங்களில் நான் ஏழை

மு மேத்தா
 மனித மரங்களைப் பார்த்துப் பார்த்து
மற்ற மரமெல்லாம் வேர்த்து வேர்த்து
மனப் புழுக்கத்தின் குலுங்கல் - அதில்
வந்து கனிந்தவை பழங்கள்! பகை மூட்டிப் பழுக்க வைக்கும்
பழங்களினால் உலகில்
பாக்கிஸ்தானில் நடந்தது போல
பாகப் பிரிவிணை நடக்கும்

புகை மூட்டிப் பழுக்க வைக்கும் - என்
புரட்சிப் பழங்களினால்
புண் வயிறு சிரிக்கும்
பொலிவிழந்த உடல் செழிக்கும்

மறுபடியும் உழைப்பதற்குப்
புதுவலிமை பிறக்கும்  சீவாத தலையோடு பிறருடைய தலையைச்
சிங்காரம் செய்வதற்குப் பூச்சாரங்கள் தொடுக்கும்
பாவடைக் காரிகளின் நளின விரலோடு
பழக்கமுள்ள நாருக்குப் படைப்பாளி நான்!

அந்த நார்கள்
என்னுடைய
உடை உரிப்புக்கள்
சத்தம் போடதா
சதைக் கிழிசல்கள்!

பூவைப் போல் உயர் பிறப்பு
இல்லாத நாரை
பூக்களுடன் சேர்த்து வைத்துச்
சம மரியாதை
வாங்கித் தந்ததென்
சுய மரியாதை!

என் மட்டைச் சட்டையோடு
சேர்ந்த நாசிக்குச்
சுறுசுறுப்புக் கொடுக்கும்
மூக்குப் பொடியின்
தூக்குத் தூக்கி!

புகையிலைத் தூளின்
பொட்டலப் பெட்டகம்!

மரங்களில் நான் ஏழை - எனக்கு
வைத்த பெயர் வாழை  - மு மேத்தா("வாழை மரத்தின் சபதம்")

நிஜமல்ல மழை

எழிலி
 
எந்தக் கடலின் வறட்சியில்
எந்த மேகக் குளிர்ச்சியில்
சொந்தமில்லா நில மகளுக்கு
வெள்ளிக்கொலுசு மாட்டுகிறாய்!

மலைகள் நனைக்கிறாய்!
மரங்கள் துளிர்க்கிறாய்!
அருவிகள் பெருக்கி
ஆறாய்ப்  பாய்கிறாய்!

வெள்ளமென்று சொல்லிக்
கொள்ளாமல் - வீதிஉலா
தெருக்கூத்து  மேவுகிறாய்!

நிஜமல்ல நீ!
பொய்த்து ஒளிகிறாய்!
பெய்து ஓய்கிறாய்!
பருவகாலம் மாற்றுகிறாய்!
தேவை நீ   என்கையில்
துளி வீழாமல்-
பரிதவிக்கவைத்துப் பின்
உதவுவார்ப் போல்
பாசாங்கு செய்கிறாய்!

நிஜமல்ல
மழை என்று
உன் சரிதைச்
சொல்லுகின்றேன்!
நிரூபிப்பதாய் இருந்தால்
பதில் சொல்லிப்  போ!
கன மழையாய் அல்ல
கண மழையாய்!

தாய்ப் பால்
வேண்டிடும்
சிசுக்களாய்
உன் தயாளத்திற்குத்
தவிக்கிறது  மானுடம்!
ஆயுள் முழுதும்
தவமிருக்க நாங்கள்
தயார்!

ஆண்டிற்கு ஒரு
முறையாகிலும்  பெய்து
மகிழ்விக்க   நீ

அதிகாலை

புரட்சி கவிஞர் பாரதிதாசன்
 அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
(அமைதியில் ஒளி... )

இமை திறந்தே தலைவி கேட்டால் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
(அமைதியில் ஒளி... )

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைந்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
(அமைதியில் ஒளி... )

பெற்றவர் கூடத்தில் மணைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைகளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்கலாயினர் அன்பு திருந்தி
(அமைதியில் ஒளி... )- 

வாழ்வில் உன்னத நிலையை அடையும் வழிகள்

நந்தினி நீலன்
எண்ணத்தை உயர்த்து
ஏற்றம் பெறு

உள்ளத்தை பண்படுத்து
பக்குவம் பெறு

கல்வியைப் போற்று
தெளிவு பெறு

மனத்தை தூய்மையாக்கு
மனிதன் ஆகு

சிந்தனை ஒருமுகப் படுத்து
சான்றோன் ஆகு

செய்யும் தொழில் விரும்பு
ஜெகத்தை அடை

இவையனைத்தும் செய்
உன்மத்த வாழ்க்கை
உன்னதம் ஆகும் காண்!
- நந்தினி நீலன்
 

அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்

தம்பி பிர்தோஸ்
 
அம்மா வளர்த்த பூனையும்
குட்டி ஈன்றது
கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில்
காந்தக் கண்களோடு பளிச்சென்று ஓரே குட்டி

பிறிதொரு நாளில்...
பாட்டி அனுப்பிய பட்சணங்களோடு
என்னருகில் அமர்ந்திருந்தாள்
வாஞ்சையோடு தலை கோதியபடி அம்மா

விண்ட பட்சணத்தை என் வாய் திணிக்கையில்
’மியாவ்’ என்றதும்
தரையில் எறிந்த துண்டத்தை முகர்ந்து
மேசையினடியில் உறங்கிய
தாய் மடி பற்றி எம்பிப் பார்த்ததும்
சாட்சாத்
அம்மாவின் பூனைகுட்டியே

பூனையின் கனவுகளும்
நமக்கானதே!
 

உயிரில்லா ஒருவனுக்கு இதயமில்லா ஒருத்தி

மீரா
என்னுயிரே நீ தான்
என்று சொல்லுமளவுக்குக்
கூட வார்த்தைகள்
இல்லாது போயின – நீ
உயிரோடு இல்லை

இதயக் கதவை தட்டி பார்த்தாய்
நான் திறக்கவே இல்லை
நானாகவே திறந்து வந்தேன்
இன்று நீயுமில்லை

உன்னைப் பார்த்த முதல் நாளில்
என்னையே பறி கொடுத்தேன்
மனதிற்குள் உன் நினைவுகளை
சமுத்திரமாக்கி ஆரவாரமற்றிருந்தேன்

ஆனால் நீ தான்  
என்னால் உள்ளே எரிமலையாய்
கனன்று கொண்டிருந்தாய்
இன்று உன்னால்
என் உயிர் வாயுவே
என்னை எரித்துக் கொண்டிருக்கிறது

உனக்குமில்லை - இது எனக்குமில்லை
படைத்தவன் தானே எடுத்துக் கொள்வான்
என்ற மனம் என்னிடமுமில்லை
உன்னிடமுமில்லை - இனி
என்ன செய்திடுவேன்

நாம் சந்தித்து இரு வருடங்கள் தானிருக்கும்
அதற்குள் எனை விட்டு தொலைதூரம்
சென்றுவிட்டாய்.
இருபதாம் வயதில் மரணத்தில் - நீ
பதினெட்டாம் வயதில் அமங்கலியாய் நான்

என் கனவுகள் எனும் நப்பாசைகள்
நனவாகுவது எப்போது?
என் பெற்றோருக்கு மகனாக இருக்கும் என்னை
உன் பெற்றோருக்கு மருமகனாக்குவது எப்போது?
என்ற உன் கேள்விகளெல்லாம்
இப்போது எங்கே?

மருமகளாக வலது கால் வைத்து
புகுந்த வீடு வருவேன் என்றிருந்தேன் - ஆனால்
மலர்வளையம் வைக்கத்தான் - உன்
வாசல் படி ஏறினேன்

உன்னை என்னோடு மணக்கோலத்தில்
கனவு கண்டேன் - இன்று
பிணக்கோலத்தில் நீ.

மூன்று முடிச்சு போட்டு மெட்டியிட்டு
மஞ்சத்தில் சங்கமிப்போம் என்றிருந்தேன்
என்னைத் தனியே விட்டு கல்லறைக்குள்
நீ மட்டும் சென்றதென்ன?

நான் எங்க சென்றாலும்
நானிருக்கும் இடத்திற்கு உன்னை
அழைத்து வரும் நண்பர்களும்
இங்கில்லை – நீயுமில்லை

நாமிருவரும் மணல்மேடுகளில் சந்தித்ததுமில்லை
மலர்க் கொத்துகள் பரிமாறியதுமில்லை
அலை நீரில் கால் நனைத்ததுமில்லை – அந்திப்
பொழுதில் அதிரசத்தில் இணைந்ததுமில்லை
நந்தவனங்களில் சிந்துகள் பாடியதில்லை
கல்லறைக் காதல்கள் கதைத்ததுமில்லை - இன்று
என் ராகமெல்லாம் முகாரியாய்

நெஞ்சை ரணமாக்கும் உன் நினைவுகளுடன்
எத்தனை நாளடா வாழ்வது?
என்னைப் பின் தொடர்ந்த என் நிழலே
எங்கு பார்ப்பேன் உன்னை!
எப்போது பார்ப்பேன் உன்னை!

அடுத்தது உனக்கும் எனக்கும்
திருமணப் பத்திரிகை என்றிருந்தேன் - ஆனால்
இறுதியில் உனக்கு மரண அறிவித்தல்
எழுதியவளும் நானே.

அக்னி பிரகாரத்தை சுற்றி வலம் வர
வேண்டிய காலத்தில் - நீ மட்டும்
சிதைக்குள் சென்றதென்ன?

என்னுள் ஓராயிரம் வார்த்தைப்
பிரயோகங்கள் - நீ அருகில்
வந்தால் அனைத்தும் மௌன
யுத்தங்களாய்.

அன்று உன்னிலுள்ள காதல்
என்னுள் மௌனமாய்
இன்று உயிரில்லாத நீ
எனக்குள் உயிராய்

உன் காதலை பகிரங்கப்படுத்தினாய் - நீ
நானோ அந்தரங்கமாக்கினேன் - இன்று
உன் மரணம் பகிரங்கமாய் பேசப்பட்டது
என் காதல் அந்தரங்கமாகவே
அறுத்தெறியப்பட்டது

நீ மரணத்தை தழுவினாலும்
உன் நினைவுகளுடன்
ஆயுள் வரை உயிர்த்திருப்பேன்

தங்க நிலவே...தேன் சிந்து

அபிசேகா
 அன்னமே,
உன் பார்வை
கொள்ளை கொண்டதே
என்னையே

செல்லமே,
உன் மழலை
தென்றலாய் என் நெஞ்சிலே

பஞ்சு போன்ற பாதத்தில்
தஞ்சம் கேட்டு ஓடி வந்து
தாயின் மடிப்புகுந்து
சிரிப்பாய்

வானமே உன்னைத் தாலாட்ட
ஆனந்தமாய் கண்மூடிக்கொள்

முத்து முத்தாய் முத்தம்
நீ
முகத்தில் தந்தாய் நித்தம்

தித்திக்க தித்திக்க நீ பேச
கன்னக்குழி இரண்டும்
கதைகள் பல பேசும்.

சொன்னச் சொல்லை
மீண்டும் நீ சொல்ல
உன் கண்கள் கூட கவி பாடும்

தங்க நிலவே
இன்றுபோல் என்றும் நீ
தேன் சிந்து
என் வாழ்க்கையில்