தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தேநீர் தேவதை

சீமான் கனி
நீ தேநீர் கோப்பையோடு
அடிக்கடி என் முன்
தோன்றும் போதுதான்
நிலவில் கரை படிந்ததின்
காரணம் விளங்குகிறது.




தேநீர் கோப்பை
உன் மீது புகார் வாசிக்கிறது
நீ குடித்து வைத்ததும்
பெரிய  சர்க்கரை கட்டி என்று
எறும்புகளால்
கடத்த படுகிறதாம்.



நீ தேநீர் குடிப்பதாய்
சொல்லிவிட்டு
கோப்பையின் விளிம்பில்
கவிதை ஒன்றை
பதித்து விட்டு போகிறாய்.
''இது தேவதை குடித்த
தேநீர்  கோப்பை'' என்று.




நீ குடித்து மீதியை உன் வீட்டு
நாய் குட்டிக்கு பகிர்ந்தாய்
அது இன்று வரை
தேநீர் தீவிரவாதியாய்
கோப்பைகுள்ளே குடியிருக்கிறது.




நீ குடித்த தேநீர்
கழிவுகள் உற்றி வளர்ந்த
காகித பூச்செடி
காதல் பூச்செடியாய்
மாறி போனதாம்.

- சீமான் கனி
 

மௌன மொழி

உமா
மாறி தான் போய் இருக்கிறாய்
மறந்து போய் விட வில்லை என
நம்பிக்கை நங்கூரம் போட்டும்
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கும்
காகித கப்பலாய் என் மனம் !
 
முன்னறிவிப்பில்லா உன்
மௌன சூராவளியால்
என்னுள் கண்ட விளைவு இது !
 
எதிர்கால வாழ்க்கைக்கான வழிகளை விட
ஏக்கத்தின் வலிகள் தான் எனக்கு அதிகம்
 
உனக்கு தெரியுமா?-உன்
மௌனத்தால் நீ அமைத்த
உனக்கும் ,எனக்குமான
இடைவெளி பாலத்தின் மீது
உன் நினைவலைகளின்
நடமாட்டம் மட்டுமே
நிறைந்துள்ளது!
நிலைத்துள்ளது!
 
அங்கு ஒரு முனையில் நானும் ,
மறு முனையில் என் மனமும் நின்று
உரையாடி கொண்டே இருக்கிறோம்
உன்னை பற்றியே இன்னும்!
நீ உன் சுயத்தை
இழந்து விட்டதாய் நானும்...
சுதந்திரத்தை இழந்து விட்டதாய்
என் மனமும்...
 
நிஜமானதாக இல்லா விட்டாலும்
நியாயமானது என எதேனும்
காரணம் முன் வைத்துப்போய்
இருக்கலாம் -ஆயினும்
தவறியும் உன்னை காய படுத்த கூடாது
என்பதற்க்காகவே உன் மௌனத்தை
அறுத்தெரியும் ஆயுதம்
எது என்பதை கண்டு அறிய
என் மனம் மறுத்து
கொண்டே இருக்கிறது!
நீயோ தொடர்ந்து மௌனம்
தரித்து கொண்டே இருக்கிறாய்!
 
நம் உரையாடல்களை மிஞ்சிய
இந்த மௌன மொழி எனக்கு
உரைக்கும் செய்தி என்ன தெரியுமா?
இது பிரிதலுக்கான மௌனம் இல்லை
நம்மை பற்றிய நம்
புரிதலுக்கான மௌனம் என்று

தாய்மை

வி.அ.உவைஸ்
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!

எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?

இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!

கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!

நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!

வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் - ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் - ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே...!

தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று

இந்த உள்ளங்கை

வையவன்
யார் யாரிடமெல்லாம்
எது எதற்காகவெல்லாம்
ஏந்திக் குறைவுபட்டிருக்கிறது
இந்த உள்ளங்கை!
வாங்கிக்கொள் என்று
பொழிகிற வானத்தின்
மழை வரம் விழுந்து
கூடவே வானத்தின்
நிறமும் நெளிந்து
துளும்பினால்
சில்லென்று வாங்கி
என்னமாய் நிறைகிறது
இந்த உள்ளங்கை?

ஏழை

காயத்ரி பாலாஜி
 
ஏழையின் கண்களில் கனவுகள் இல்லை,
ஆனால் கண்ணீர் உண்டு,
பாடுபட்டு உழைத்தும் பஞ்சத்திலேதான் இருக்கின்றான்,
பட்டாடையோ, பஞ்சு மெத்தையோ பார்த்ததில்லை,
காசுண்டு பணமில்லை,
கால்வயிறு சோறுண்டு,
காணி நிலமில்லை,
கன்னிப் பெண் வீட்டில் உண்டு,
கரையேற்ற வழிஇல்லை,
வட்டியில்லா கடனுண்டு,
கடனடைக்க வழியில்லை,
நிலமிருந்தால், நீரில்லை,
நீரிருந்தால், பங்கில்லை,
வயல் வரப்பில் வாடினாலும்,
வளமான வாழ்க்கையில்லை,
விளைச்சளுக்கேற்ற விலையில்லை,
விலையேற்றம் விழவில்லை,
பட்டிக்காடு என்பர் பட்டினத்தார்,
எளியோர் என்பர் வலியோர்,
ஏழை எனில் ஏளனம் செய்வார்,
வறண்ட தன் நிலம் கண்டு வாடுகிறான்,
வந்த விலைக்கு விற்று விட்டான்,
பயிரிட்ட நிலத்தில் பிளாட் போடுகிறார்கள்,
களை எடுத்த இடத்தில் கட்டடம்   கட்டுகிறார்கள்,
கண்ணீருடன் பார்க்கிறான் விவசாயி,
தன் வயல் நிலம், அறுவடையாவதை!
 

சுதந்திர தினம்

கவிமதி
 

உன் குலம்
அழிஞ்சேபோச்சுன்னு
குதிச்ச
நா குளத்துல
கைய வச்சதுக்கு
கொச கொசன்னு
வழியிர குருதி காயத்தோட
அண்ணன் பிணம் வந்தப்போவ
அடிவயித்த புடிச்சிகிட்டு
அப்பவே போயிட்டா ஆத்தா
அடிச்சி புடிச்சி
அப்பனுக்கும் போட்டானுவோ
பொய் வழக்குகள
மேல் சட்டையே போடவிடாம
பொரட்டி பொரட்டியெடுத்துட்டு
கையில குடுக்குற
இத்துனூண்டு
கொடியும் குண்டூசியும்
கேடுகெட்டு நா
கொண்டாடனுமா
சுதந்திர தினம்
- கவிமதி
 
 
 
 

நானோர் இந்தியக் குடிமகன்

எட்வின் பிரிட்டோ
என்றைக்காவது சாப்பிடுவோம் என்ற
இறுமாப்பில் நிமிர்ந்துப் பார்க்கும்
என் நெஞ்செலும்புகள்.

என் முனகல் சத்தத்தை கேட்க முடியாமல்
தூங்கிப் போகும் இரவுகள்.

தோப்புகளாய் வளர்ந்திருக்கும் என்
மயிர்க் கால்களை விடுத்து ஓடிப் போகும்
என் மயிற்றுப் பேண்கள்.

என் எலும்புகளில் இரத்தத்தின் ருசி
தேடி ஏமாந்துப் போகும் என் குடி
நீர்ப் பானைக் கொசுக்கள்.

வறண்டுப் போயிருக்கும் என் தொண்டைக்
குழியை ஈரப் படுத்த என் குடிசைக்குள்
ஓடி வரும் மேல்தட்டு வர்க்கத்தின்
சாக்கடை நீர்.

இவ்வளவும் இருந்தும்...
குடிமகன் நான்...
இந்தியாவில்

கலையும் கனவு

சு.மு.அகமது
ஓர்
நாட்காட்டியின் மாற்றம் மட்டுமே
புது வருடத்தின் பிரகடனமாகிறது

கரைந்து போன நினைவுகள்
கனத்துப் போனது போல்
மீண்டும் விம்மிப்புடைத்து
கலையத்துவங்குகிறது
மரணத்தின் புது துவக்கம்

மறு மரணம் வரை பயணிக்க
ஒரு நாட்காட்டி தேவைப்படுகிறது

வாழ்க்கை
கரையும் கற்பூரமாய்
நாட்களை குதறும்  தன் கூரிய பற்களால்

கடைசியில்
மிஞ்சி நிற்பது-எதிர்பார்ப்பு
கலைந்து போன கனவாய்

வினைத் தொகை

எழிலி
உறுதுன்பம்!

வயிற்றைக் குழைத்து
உடலைக் குறுக்கி
புற்றுக்குள் பாம்பாய்

மடங்கி நெளிந்து,

கால்களைப் பின்னி
முதுகின் கிரீடமாக்கி!

தாளம் தப்பாமல்
அடி சறுக்காமல்
உச்சி முதல் உள்ளங்
கால் வரை ஆட்டம்
காண  -
களைகட்டியது
கழைக்   கூத்து!

டோலக்கு அடிக்கும்
மனிதனுக்கு !

புல்லாக்குப்போட்ட
அவனின்  மனைவிக்கு!

அலுமினியத் தட்டில்
பிச்சை  திரட்டும்
சிறுவனுக்கு!

வளையத்திற்குள்
உடல் ஒடுக்கி,
உயரே கட்டிய
கயிற்றில்  கால்
பொருத்தி,
ஆகாசத்தையும்
பூமியையும்
தன் நெற்றிப் பொட்டில்
வசப்படுத்தி,
பின்னுக்கும்
முன்னுக்குமாய்
லாவகம் செய்யும்
உழைப்பாளி அவளின்
ஒவ்வொரு நாளைய
வலி
ஒருபோதும்
புரிதலில்லை!

அந்தச் சிறுமியின்
சார்பில்
நமக்கோ - ஒப்புக்கு
உச்சுக்
கொட்டலும்  ஒரு ரூபாய்
பிச்சையிடுதலும்  தவிர
பேருதவி  வேறொன்றில்லை

மரணமும்

வித்யாசாகர்
தடியூனி நடக்கும் கனவு அது
இடையே மரணம் வந்து வந்து
காலிடறிச் சிரிக்கிறது..

காதுகளில் அழுபவர்கள்
ஆயிரமாயிரம் பேர் - சற்று
காதுபொத்திக் கேட்கிறேன்; என்
மகள் அழுகிறாள்,

எட்டி உதைத்தேன் அந்தக் கனவை
ஐயோ என்று
எமன் கத்திய சப்தம்;

எவனானால் என்ன
என் மகளினி அழமாட்டாள்...